Published:Updated:

`வங்கிக் கடனை திருப்பி செலுத்த வேண்டாம்’ - தண்டோரா அடித்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள்

`வங்கிக் கடனை திருப்பி செலுத்த வேண்டாம்’ - தண்டோரா அடித்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள்
`வங்கிக் கடனை திருப்பி செலுத்த வேண்டாம்’ - தண்டோரா அடித்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள்

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியதோடு, விவசாயிகள் யாரும் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் அவை ரத்து செய்யப்படும் எனத் தண்டோரா அடித்துக்கொண்டு வந்து போராட்டம் நடத்தி மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் விவசாயிகள் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்ததோடு வாழ்வாதாரத்தையும் தொலைத்துவிட்டு தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தமிழக அரசு அறிவித்த நிவாரண  உதவித்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் முழுமையாக நிவாரணம் வழங்கப்படவில்லை எனப் பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வருகின்றனர்.

இதையடுத்து, தமிழக விவசாயச் சங்கங்களின் கூட்டியக்க மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் பலர் உடனடியாக முழுமையான நிவாரணத் தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்த கோரிக்கை மனுவை கொடுப்பதற்கு தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததோடு  டி.ஆர்.ஓ சக்திவேலிடம் மனுவை கொடுத்தனர். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் தண்டோரா அடித்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் வங்கி கடனை திருப்பி செலுத்த வேண்டாம் அவை ரத்து செய்யப்படும் எனக் கூறினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சுகுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது, ``கஜா புயல் பாதித்த இடங்களைத் தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் விவசாயக் கடன், கல்விக் கடன் சுய உதவிக்குழு கடன், கூட்டுறவு கடன் என அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுங்கட்சியினருக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்ட 40 சதவிகிதம் பேருக்குதான் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்களை முறையாகக் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வோம்’’ என்றார்.