Published:Updated:

``விவசாயத்தில் எனக்கும் 10 லட்சம் ரூபாய் நஷ்டம்!" - தமிழக ஆளுநர் கவலை

தொழில்நுட்பத்தையும் மத்திய அரசின் திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் பிரச்னைகள் என்னவென்பதை என்னிடம் தெரிவியுங்கள். அதை நான் குடியரசுத்தலைவர், பிரதமரிடம் தெரிவித்து உதவுகிறேன்.

``விவசாயத்தில் எனக்கும் 10 லட்சம் ரூபாய் நஷ்டம்!" - தமிழக ஆளுநர் கவலை
``விவசாயத்தில் எனக்கும் 10 லட்சம் ரூபாய் நஷ்டம்!" - தமிழக ஆளுநர் கவலை

``மண் பரிசோதனை செய்யாமல் விவசாயம் செய்ததால் 10 லட்சம் ரூபாய் நஷ்டமடைந்தேன்" என்று மதுரையில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது விவசாயிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவது போலிருந்தது.

பி.ஜே.பி-யின் விவசாயப் பிரிவான பாரதிய கிசான் சங்க 4-வது மாநில மாநாடு கடந்த 5-ம் தேதி மதுரையிலுள்ள மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால், ``நான் ஒரு விவசாயியாக இதில் கலந்துகொள்கிறேன். என் குடும்பம் பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவருவதால், விவசாயிகளின் பிரச்னைகள் அனைத்தும் தெரியும். விவசாயிகள் விதைப்பதற்குமுன் அந்த மண் அந்த விவசாயத்துக்குச் சரியானதா என்பதை அறிந்துகொள்ள மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண்ணுக்கேற்ற பயிரை விவசாயம் செய்தால் நல்ல லாபம் பெறலாம். தமிழகத்தில், நான் செல்லும் மாவட்டங்களில் எல்லாம் மண் பரிசோதனையின் முக்கியம் பற்றி விவசாயிகளிடம் எடுத்துச் சொல்லி வருகிறேன். அதை அதிகாரிகளிடமும் கூறி வருகிறேன். மண் பரிசோதனை திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முதல்வரிடம் பேசியுள்ளேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், முறையாக மண் பரிசோதனை செய்யாததால் நானே நஷ்டமடைந்துள்ளேன்.  

நாக்பூரில் எங்களுக்கு 90 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நெல், சோளம் பயிர் செய்த எங்கள் நிலத்தில் புதிதாக 1,500 ஆரஞ்சு மரக்கன்றுகளை வாங்கி நட்டேன். 7 வருடங்களாகியும் அதில் மகசூல் கிடைக்கவில்லை. ஏன் விளையவில்லை என்று அருகிலிருந்த விவசாய ஆராய்ச்சி மைய அதிகாரிகள்மூலம் ஆய்வுசெய்தேன். அப்போதுதான் தெரிந்தது, எங்கள் நிலம் ஆரஞ்சு விளைச்சலுக்குச் சரியானது அல்ல என்று. அதற்குப்பின் அந்த மரங்களையெல்லாம் வெட்டி எறிந்துவிட்டு மண்ணின் தன்மைக்கேற்ற விவசாயத்தை இப்போது என் குடும்பத்தினர் செய்கிறார்கள். ஆரம்பத்திலேயே மண் பரிசோதனை செய்திருந்தால், 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்காது. அதனால்தான் மண் பரிசோதனை செய்து விவசாயம் செய்ய வேண்டும் என்பதைச் செல்கிற இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன். 

மத்திய அரசு தற்போது விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பயிர்க் காப்பீட்டுத் திட்டம், சொட்டு நீர்ப் பாசனம், மண் பரிசோதனை ஆகியவற்றுக்கு மானியங்களை வழங்குகிறது. விளைவிக்கும் பொருள்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய, இணையச் சந்தை மூலம் வர்த்தகப் பரிமாற்றம் செய்ய உதவி வருகிறது. இதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று 50 சதவிகித மக்கள் விவசாயம் செய்து வருவதால் நம் நாடு தன்னிறைவு பெற்றிருக்கிறது. உணவு உற்பத்தியில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பால், முந்திரி, இஞ்சி உற்பத்தியில் உலக அளவில் முதல் இடத்தையும், கோதுமை, சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

2 லட்சம் ஹெக்டேரில் இயற்கை விவசாயத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. வேப்பம்பூ கலக்கப்பட்ட உரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மகசூல் அதிகரிக்கும். மண் வளம் குறைந்து வருவதாலும், இடைத்தரகர்களாலும் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதையும் தாண்டி விவசாயிகள் சாதிக்க வேண்டும். விவசாயத்துடன் சிறிய அளவிலாவது கால்நடைகளை விவசாயிகள் வளர்க்க வேண்டும். அது அவர்களுக்கு வருமானத்தைத் தரும். தொழில்நுட்பத்தையும் மத்திய அரசின் திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் பிரச்னைகள் என்னவென்பதை என்னிடம் தெரிவியுங்கள். அதை நான் குடியரசுத்தலைவர், பிரதமரிடம் தெரிவித்து உதவுகிறேன்'' என்றார். 

இனியாவது, விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்று பார்ப்போம்...