Published:Updated:

`94 வருஷமா விவசாயம் பண்றோம்!’ - விளைநிலங்களைக் கைப்பற்றும் வனத்துறைக்கு எதிராகக் கொந்தளித்த மக்கள்

`94 வருஷமா விவசாயம் பண்றோம்!’ - விளைநிலங்களைக் கைப்பற்றும் வனத்துறைக்கு எதிராகக் கொந்தளித்த மக்கள்
`94 வருஷமா விவசாயம் பண்றோம்!’ - விளைநிலங்களைக் கைப்பற்றும் வனத்துறைக்கு எதிராகக் கொந்தளித்த மக்கள்

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே சுமார் 94 ஆண்டுக் காலமாக விவசாயம் செய்து வந்த விளைநிலங்களை, வனத்துறை கைப்பற்ற  அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வெள்ளமணல் கிராமம் உள்ளது. இக்கிராமத்தையொட்டி, சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பை காடுவெட்டி, தோணித்துறை, மேலானயிருப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலா 1  ஏக்கர் 2  ஏக்கர்  வீதம் எனப் பிரித்துக்கொண்டு 1925 முதலே சாகுபடி செய்து வருகின்றனர். முள் செடிகளும் முட்புதர்களும் மண்டிக்கிடந்த காடாயிருந்த அப்பகுதிகளை விளை நிலமாக்கியது விவசாயிகள்தான். அந்த நிலத்தில் காராமணி, பருத்தி, பூசணி, தர்பூசணி மற்றும் நிலக்கடலை பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயத்துக்குத் தேவையான நீரை டீசல் இன்ஜின் மூலம் நிலத்தடியிலிருந்து எடுத்து பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி ``இந்த இடம் வனத்துறைக்குச் சொந்தமானது. இனி நீங்கள் இங்கு விவசாயம் செய்யக் கூடாது’’ என்று வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், இன்று பொக்லைன் இயந்திரம் கொண்டு, அந்த விளைநிலங்களில் இருந்த வேலியை அப்புறப்படுத்தி, குழாய்களை உடைத்து வனத்துறை சேதப்படுத்தி இருக்கிறது.  

இதுபற்றி அப்பகுதி விவசாயிகளிடம் பேசுகையில், ஆற்றங்கரையோரம், ``காட்டை கழனியாக்கி எங்கள் முன்னோர்கள் சாகுபடி செய்து வந்தனர். தலைமுறை தலைமுறையாக நாங்களும் இந்நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில் இந்த 'நிலத்தைவிட்டு வெளியேற வேண்டும். இனி நீங்கள் இங்கு சாகுபடி செய்யக் கூடாது' என்று வனத்துறை சொல்வது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே, இந்த நிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்யவும், மோட்டார் எஞ்சின் மற்றும் பயிர்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.