Published:Updated:

‘வாட்ஸ் அப் போட்டோவ வச்சு அரஸ்ட் பண்ணிடுவேன்!’ - அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட ஈரோடு கலெக்டர்

‘வாட்ஸ் அப் போட்டோவ வச்சு அரஸ்ட் பண்ணிடுவேன்!’ - அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட ஈரோடு கலெக்டர்
‘வாட்ஸ் அப் போட்டோவ வச்சு அரஸ்ட் பண்ணிடுவேன்!’ - அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட ஈரோடு கலெக்டர்

ஈரோடு மாவட்டத்தில் வழக்கத்தைவிடக் கூடுதலாகப் பருவமழை பெய்ததாலும், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிகளவு மழை பெய்ததாலும் விவசாயிகள் இந்த ஆண்டு மிகுந்த மகிழ்ச்சியில் விவசாயம் செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மஞ்சளுக்குப் பெயர் பெற்றிருந்தாலும், மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படுவது நெல்தான். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பலரும் நெல்லைப் பயிரிட்டு, அறுவடையையும் முடித்திருக்கின்றனர். ஆனால், அவற்றைக் கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. ‘விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக மாவட்டத்தின் பல இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.35 வரை பணம் கேட்கிறார்கள். பணம் கொடுக்காதவர்களின் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனர். ஒருசில இடங்களில், ‘இன்னும் ஒரு வாரம் கழித்து நெல் மூட்டைகளைக் கொண்டு வாருங்கள். இப்போது கொள்முதல் செய்ய முடியாது’ என அதிகாரிகள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

நெல் கொள்முதல் மையங்களைத் தனியார் இடத்தில் வாடகைக்குச் செயல்படுத்துவதாலும், தேவையான பணியாளர்கள், சாக்கு மூட்டை மற்றும் நெல் மூட்டைகளைக் குடோனுக்குக் கொண்டு செல்வதற்கான வண்டி வாடகை போன்றவற்றைத்தான் இந்தக் கட்டணமாக வசூலிக்கிறோம் என அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். அதிகாரிகளின் இத்தகைய செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுக்க வேண்டும்’ என விவசாயிகள் குரல் எழுப்பினர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டால் கடுப்பான கலெக்டர் கதிரவன் அதிகாரிகளிடம், ‘நெல் கொள்முதல் நிலையங்களை எம்.எல்.ஏ-க்கள் வந்து திறக்கும் வரைக்கும் காத்திருக்காதீங்க. நீங்க எப்போ திறப்பீங்க. விவசாயிங்க எப்போ அவங்களோட நெல்லை விக்கிறது. எனவே, உடனடியாக அனுமதிக்கப்பட்ட அத்தனை நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க நடவடிக்கை எடுங்க. அதுமட்டுமல்லாம, விவசாயிகள்கிட்ட நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் எந்தப் பணமும் கேட்கக் கூடாது. அதிகாரிகள் பணம் வாங்குற மாதிரி பாதிக்கப்பட்ட விவசாயி வாட்ஸ் அப்ல எனக்கு போட்டோ அனுப்புனா, அந்த அதிகாரியை அரஸ்ட் பண்ணிடுவேன். ஜாக்கிரதையா இருங்க’ என லெஃப்ட் ரைட் வாங்க, விவசாயிகள் தரப்பில் கைத்தட்டல் பலமாக எழுந்தது.

விவசாயிகளின் குமுறலுக்கு எப்போதுதான் விடிவு பிறக்குமோ..?