Published:Updated:

``விவசாய ஆய்வுகள் கருத்தரங்குகளோடு நின்றுவிடக் கூடாது!’’ - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

``இந்த ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்கோடு மட்டும் நின்று போய்விடாமல், விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும்!’’

``விவசாய ஆய்வுகள் கருத்தரங்குகளோடு நின்றுவிடக் கூடாது!’’ - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
``விவசாய ஆய்வுகள் கருத்தரங்குகளோடு நின்றுவிடக் கூடாது!’’ - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ராய்ச்சிகள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை விவசாயிகளுக்குப் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும். அவை வெறும் கட்டுரைகளோடு நின்றுவிடக் கூடாது என ஊட்டியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார். 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மத்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் 28-வது தேசிய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய தேசியளவிலான கருத்தரங்க துவக்க விழா பழங்குடியினர் கலாசார மையத்தில் இன்று நடந்தது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து காெண்டார். 3 நாள்கள் நடக்கும் இந்தக் கருத்தரங்கில், பல்வேறு ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்து காெள்ளவுள்ளனர். தேசிய மண் வள பாதுகாப்புச் சங்கத் தலைவர் சுரஜ்பான், விஞ்ஞானி மணிவண்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா, இந்திய முன்னாள் அணுசக்தி கழகத் தலைவர் சீனிவாசன், உணவு மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையப் பதிவாளர் அகர்வால் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகாெண்டனர். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறந்த விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்குக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ``இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தாெடர்ச்சியாக நாட்டில் வேளாண் தொடர்பான 103 ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த ஆராய்ச்சி மையங்கள் டேராடூனை தலைமையிடமாகக் கொண்டு நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை விவசாயிகளுக்குப் பெரும் உதவியாக உள்ளன. தற்போது காலநிலை மாற்றம், காலம் தவறி பெய்யும் மழை ஆகியவை விவசாயத்துக்குப் பெரும் சவாலாக உள்ளன. இவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். நீர் வளங்களை நிர்வகிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் காலநிலையானது தற்போது வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் மாற்றம் அடைந்துள்ளது. ஆனால், இன்றைய சூழலில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்புத் தொழில்நுட்பமானது விவசாயிகளால் எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். 

மண் மற்றும் நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்தியாவில், 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பு, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 94 மில்லியன் ஹெக்டேர் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக 16 மில்லியன் ஹெக்டர் அமிலத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. 14 மில்லியன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 9 மில்லியன் ஹெக்டேர் நிலம் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் ஹெக்டேர் நிலம் உப்புத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற காரணங்களால் 7 மில்லியன் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக அதிக மழை மற்றும் அதிக வறட்சி, இந்திய விவசாயிகளுக்கு ஒரு சவாலாகவே உள்ளது. இவற்றை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவில் 18 சதவிகிதம் மக்கள் உள்ளனர். 15 சதவிகிதம் கால்நடைகள் உள்ளன. 2.4 சதவிகிதம் மட்டுமே நிலப்பரப்பு உள்ளது. 

எனவே, இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் மற்றும் அரசு உள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்கும் நுகர்வு மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயத்துக்கும் பெரும் சவாலாக உள்ளது. 1950-ல் சராசரியாக ஒரு மனிதனுக்கு ஆண்டுக்கு 5,000 கியூபிக் மீட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது. அடுத்த சில ஆண்டுகளில் இது 1,500  கியூபிக் மீட்டராகக் குறையும் அபாயம் உள்ளது. தற்போது போதிய மழை பெய்யாத நிலையில், இந்தியாவில் 80 சதவிகித தண்ணீர் வேளாண்மைக்குப் பயன்பட்டு வருகிறது. தண்ணீர் அளவு குறைந்து வருவதால், வேளாண் தொழில் பாதிக்கும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீர் 60 சதவிகிதம் வேளாண்மைக்கும் 40 சதவிகிதம் குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மழை பொய்த்தால், விவசாயம் பாதிக்கப்படும். இதனால், கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்ய முடியாமல் போனது. தற்போது சொட்டு நீர்ப் பாசனம் மூலம் அனைத்து காலங்களிலும் விவசாயிகள் பயிர் செய்கின்றனர்.

இது போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களின் தன்மை குறித்து முறையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப பயிர் செய்ய வேண்டும். விவசாயிகள், ஆராய்ச்சி மையங்களுக்குச் சென்று தங்களது நிலத்தின் மண்ணைப் பரிசோதித்து, அதில் எந்த பயிர் பயிரிடலாம் என்பதைக் கேட்டறிந்து, அதன் பின் பயிர் செய்ய வேண்டும். இந்தியாவின் தேவைக்கேற்ப வேளாண் உற்பத்தி அதிகரிக்கத் தொழில் நுட்பங்களை ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சிறந்த தொழில்நுட்பங்களைத் தேர்வு செய்து, அதை அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்கோடு மட்டும் நின்று போய்விடாமல், விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார் .