Published:Updated:

ஆந்திர விவசாயிகளுக்குக் கூடுதலாக ரூ.4,000! - சந்திரபாபு நாயுடு அறிவித்த புதிய திட்டம்

ஆந்திர விவசாயிகளுக்குக் கூடுதலாக ரூ.4,000! - சந்திரபாபு நாயுடு அறிவித்த புதிய திட்டம்
ஆந்திர விவசாயிகளுக்குக் கூடுதலாக ரூ.4,000! - சந்திரபாபு நாயுடு அறிவித்த புதிய திட்டம்

பிரதமர் மோடி ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மத்திய அரசின் உதவித் தொகையாக அறிவித்துள்ளார். இந்தத் தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். பிப்ரவரி மாதத்தில் சம்பா சாகுபடியின்போது மத்திய அரசு வழங்கும் முதல் தவணை ரூ.2,000 விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும். அதே வேளையில் ஆந்திர அரசும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.4,000 வரை உதவித் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் அறுவடைக் காலங்களில் இரு தவணைகளாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின்படி ஆந்திர விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மத்திய மாநில அரசு வழங்கும் உதவியாக ரூ.10,000 நிதி கிடைக்கும். பிரதமரின் நிதியுதவியைப் பெறும் விவசாயிகள் ஆந்திர அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 54 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். சம்பா சாகுபடியை முன்னிட்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு வழங்கும் ரூ.2,000 மற்றும் ஆந்திர அரசு வழங்கும் ரூ.3,000 சேர்ந்து மொத்தம் ரூ.5,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 

நிலுவைத் தொகை குறுவை சாகுபடியின்போது வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு `ஆனந்த சுகிபவா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  விவசாயிகள் நலனுக்காக ரூ.1,620 கோடி ஆந்திர அரசுக்குக் கூடுதல் செலவாகும். 5 ஏக்கர் நிலத்துக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளுக்குப் பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதி இல்லை. இத்தகைய விவசாயிகளுக்கும் நிலத்தைப் பொறுத்து நிதியுதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மொத்தம் 70 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்காக  நடப்பு நிதியாண்டில் ரூ.5,000 கோடி வரை கூடுதல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-ம் தேதி அமராவதியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் திட்டத்தை மாநில அரசு திட்டத்துடன் இணைத்து விட்டதாக ஆந்திர விவசாயத்துறை அமைச்சர் சோமிரெட்டி சந்திரமோகன் கூறியுள்ளார். 

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தாலும் தேவையான நேரத்தில் நல்ல முடிவை எடுத்து அசர வைப்பதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு  நாயுடு கெட்டியோ கெட்டி.