Published:Updated:

``விவசாயிகள்மீது திருட்டுப் பட்டம் சுமத்தியிருக்கிறார்கள்!" பெப்சிக்கு எதிராக விவசாயிகள்!

தமிழ்ப்பிரபா

வெளிநாட்டு நிறுவனம் இங்கே வந்து நீ இதைத்தான் பயிரிட வேண்டுமென இந்திய விவசாயிகளிடம் சொல்கிறான். இதை நாம் சாதாரணமாகக் கடந்து விடக்கூடாது. ஒரு விவசாயிக்கு ஏற்படும் பிரச்னையை அவனுக்கு மட்டும் உரியதாகப் பார்க்கக் கூடாது..

``விவசாயிகள்மீது திருட்டுப் பட்டம் சுமத்தியிருக்கிறார்கள்!" பெப்சிக்கு எதிராக விவசாயிகள்!
``விவசாயிகள்மீது திருட்டுப் பட்டம் சுமத்தியிருக்கிறார்கள்!" பெப்சிக்கு எதிராக விவசாயிகள்!

குஜராத்தில் செயல்பட்டுவரும் பெப்சிகோ நிறுவனம், லேஸ் தயாரிப்பதற்காக அவர்கள் காப்புரிமைபெற்ற உருளைக்கிழங்கு விதைகளை வைத்திருக்கிறார்கள். அங்குள்ள விவசாயிகள் அந்த விதைகளைப் பயன்படுத்தி உருளைக்கிழங்குகளை விளைவித்திருக்கிறார்கள். விளைவித்ததோடு மட்டுமன்றி, அவற்றை சிப்ஸ் போட்டு விற்பனையும் செய்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள்மீது பெப்சிகோ வழக்கு தொடுத்திருக்கிறது. மொத்தம் ஒன்பது விவசாயிகள்மீது தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வழக்கில், ஒவ்வொரு விவசாயியும் நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் பலதரப்புகளிலிருந்து குரல்கள் எழுந்தன. குஜராத் மாநில அரசு மற்றும் விவசாய நல அமைப்புகள் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

அதையொட்டி, `விவசாயிகளை அச்சுறுத்தும்' நடவடிக்கையைக் கண்டித்து இன்று காலை 11.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயச் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையேற்று நடத்திய இந்தக் கண்டனக் கூட்டத்தில், பெப்சி நிறுவனத்துக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.

இதுதொடர்பாக சண்முகத்திடம் பேசினோம். ``அவர்கள் காப்புரிமை வாங்கிய விதையை, நீங்கள் பயன்படுத்துவது எப்படி நியாயமாகும் எனக் கேட்கிறார்களே... உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் முதன்முறையாக விதைகளுக்குக் காப்புரிமை என்பது கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்புவரை, ஒரு விவசாயி தன்னிடம் இருக்கும் வீரியமிக்க, நல்ல விதைகளை இன்னொரு விவசாயியுடன் பரிமாறிக்கொள்வதென்பது பலநூறு ஆண்டுகளின் பழக்கவழக்கம். இதுதான் நம் மரபு. இந்த விதைப் பரிமாற்றம் என்பது இந்திய விவசாயிகளின் பண்பாட்டோடு தொடர்புடையதும்கூட. ஆக, நம்முடைய பண்பாட்டை, மரபைக் குலைக்கும் விதமாகக் காப்புரிமைச் சட்டத்தில் விதைகளை இணைத்ததே பெருந்தவறு. காட் ஒப்பந்தத்தில் இதைக் கொண்டுவரும்போதே அகில இந்திய அளவில் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தோம். 1993-ல் அன்றைய மத்திய அரசு, அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பேரில் இதை ஒப்புக்கொண்டார்கள். அப்போதிருந்து இது அமலில் இருக்கிறது. 

இப்போதும் அந்தச் சட்டத்தில் உள்ள பயிர்ப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001-ன்படி அடிப்படையில்தான் விவசாயிகள்மீது அந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தில் 39-வது பிரிவில் விவசாயிகள் தங்களின் சுயதேவைக்காக இத்தகைய விதைகளைப் பயன்படுத்த உரிமை இருக்கிறது என்பதையும் சொல்கிறது. எனவே, விவசாயிகள்மீது பெப்சி நிறுவனம் வழக்குத் தொடுத்திருப்பதே சட்ட விரோதம். மத்திய அரசு இதில் தலையிட வேண்டும். விவசாயிகள்மீது தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வழக்கில் அவர்களுக்குச் சட்ட உதவி செய்ய வேண்டும். ஒன்பது விவசாயிகள்மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியும் நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் அளிக்க வேண்டுமாம். பெப்சி நிறுவனம் சொல்லக்கூடிய FL ரக உருளைக் கிழங்குகளை நாட்டில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். அத்தனை பேர் மீதும் வழக்கு தொடர்ந்தால் நஷ்ட ஈடு வாங்க முடியாதென்று இந்த ஒன்பது பேர்மீது மட்டும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், அவர்களுக்குப் பணம்கூட இரண்டாம் பட்சம்தான். இதன்மூலம் அவர்கள் இந்திய விவசாயிகளை அச்சுறுத்திப் பார்க்கிறார்கள். பயிரிடும் உரிமையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள்.

விவசாயிகள்மீது திருட்டுப் பட்டம் சுமத்தி இருக்கிறார்கள். எங்கிருந்து வந்து யார்மீது திருட்டுப் பட்டம் சுமத்துவது? எங்கள் நிலத்தில் எங்கள் விதைகளைப் பயிரிடக்கூடாது எனச் சொல்ல நீங்கள் யார்? பெப்சி நிறுவனம் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும். விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில், அகில இந்திய விவசாயிகள் ஒன்றுகூடி நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்.  கடைசியாகப் பொதுமக்களிடமும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். வெளிநாட்டு நிறுவனம் இங்கே வந்து, `நீ இதைத்தான் பயிரிட வேண்டும்' என இந்திய விவசாயிகளிடம் சொல்கிறது. இதை நாம் சாதாரணமாகக் கடந்துவிடக்கூடாது. ஒரு விவசாயிக்கு ஏற்படும் பிரச்னையை, அவருக்கு மட்டும் உரியதாகப் பார்க்கக் கூடாது. பொதுமக்களிடமும் விவசாயிகள் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். அப்போதுதான் தீர்வைநோக்கி நாம் நகர முடியும்" என்றார்.

இதுகுறித்து விதை ஆராய்ச்சியாளர் ஆர்.எஸ்.பிரபு, ``இந்தப் பிரச்னையைப் பொறுத்தமட்டில் பெப்சியின் உருளைக்கிழங்கு ரகத்தைச் சாகுபடி செய்ததற்காக மட்டுமே வழக்கு  தொடரப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், குஜராத்திகள் சிப்ஸ் போட்டு விற்பனைசெய்ய ஆரம்பித்துவிட்டதால்தான், `இதுவரை ஆன சேதத்துக்கும் சேர்த்து' எனப் பெரிய தொகைக்கு வழக்கு போட்டிருக்கிறது பெப்சி. ஆக, முதலில் நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இது எந்த மாநிலத்தில் நடந்திருக்கிறது என்பதையும் நாம் கணக்கில்கொள்ள வேண்டும். இது, குஜராத்தில் நடந்திருக்கிறது. வியாபாரத்தில் எந்த மனசாட்சியும் இல்லாதவர்கள் குஜராத்திகள். E-way bill உட்பட GST-யில் இத்தனை கிடுக்குப்பிடிகள் இருந்தும் வீடுகளுக்கு டைல்ஸ் வாங்கும்போது, `பில் போட்டா ஜி.எஸ்.டி. 28 சதவிகிதம் வரும் பையா' என்று சொல்லி, தமிழகத்தில் எப்படி டைல்ஸ் வியாபாரம் நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.

பி.டி. பருத்தி அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வரும் முன்னரே சட்டைப் பாக்கெட், பேன்ட் பாக்கெட், செக்-இன் லக்கேஜ், ஹேண்ட் லக்கேஜ், குழந்தைகளின் ஹேண்ட்பேக் என எல்லாவற்றிலும் ஒவ்வொரு விதையை மட்டும் போட்டு அமெரிக்காவிலிருந்து எடுத்துவந்து இங்கே back cross செய்து, அந்தப் பண்புக்கூறுகளை interogress செய்து விற்பனை செய்தது. ரவுண்டப் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் வாய்ந்த பருத்தி ரகம், பி.டி. கத்திரி ரகம் போன்ற அதிகாரபூர்வமாக விற்க அரசு அனுமதியே இல்லாதவற்றையும் விற்பனை செய்வது என நவீன fraud எல்லாமே குஜராத்திலிருந்துதான் ஆரம்பிக்கும். இந்தியாவிலேயே தமிழகத்திலும், குஜராத்திலும்தான் மனைவி பெயரில் Firm-ஐப் பதிவு செய்து கணவர்கள் தொழில் நடத்துவது அதிகம். பெப்சி வழக்கு தொடர்ந்திருக்கும் அந்த அப்பாவி விவசாயிகள், 'மே பேகுன்னாரா சாப்' என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவர்களது மனைவி, மகன், மகள் பெயரில் நடக்கும் வியாபாரத்தின் வீரியத்தை அறியாமல் ஒரு பன்னாட்டு கம்பெனி கோடைக்காலத்தில் நடக்கவிருக்கும் குளிர்பான விற்பனை பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் இறங்குகிறது என்றால், அதன் முக்கியத்துவம் என்ன, வீரியம் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும்.

பெப்சி தனது பொருள்செலவில் உண்டாக்கிய ரகத்தை ஒப்பந்தம் போட்டு வாங்கி - ஏமாற்றிவிட்டு - இன்று உள்ளூர் சிப்ஸ் கம்பெனிகளுக்கு விற்பவர்கள், நாளை அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கும் விற்பார்கள். அந்த கம்பெனிக்காரன் கேள்வியே கேட்கக் கூடாது. ஏனென்றால், அவர்கள் அப்பாவி விவசாயிகள். பச்சையாக அடுத்தவன் உழைப்பைத் திருடித் தின்றுவிட்டு விவசாயி என்ற போர்வையில் ஒளிந்துகொள்ளும் அயோக்கியர்களை ஆதரிப்பது ஒரு குரூர மனநிலை. நிலம் வைத்திருப்பவன், அடுத்தவன் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிக்கொள்ளலாம். அது மேலிருந்து பணத்தாலும், ஆராய்ச்சியாலும் வரும் இன்டலெக்சுவல் உழைப்பாக இருந்தாலும் சரி, கீழிருந்து வரும் கூலிக்கார மக்களின் ஃபிஸிகல் உழைப்பாக இருந்தாலும் சரி.

சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கைப் போராளி, விவசாயச் செயற்பாட்டாளர் என்றாலே பாரம்பர்யமான மரபுசார் முறைகள் கேள்வி கேட்கப்படவே கூடாது என்ற கிராமப் பொருளாதாரத்தின் சாதிப் படிநிலைகளைப் பாதுகாப்பவர்கள், உழைப்புச் சுரண்டலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்தாம். எனவே, ஆர்வலர்கள் பெப்சியின் நிலையை நியாயப்படுத்தினால்தான் ஆச்சர்யம்.

இது, நில உரிமையாளர்கள் விவசாயி என்ற போர்வையில் செய்துகொண்டிருந்த அறிவுசார் சுரண்டலின் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் அடி. இது எமோஷனலாகப் பார்க்கப்பட்டு பெப்சிக்கு பின்னடைவே ஏற்படும் என்றாலும், புதிய தொழில்நுட்பங்களுக்கும் அதன்மேல் இந்தியாவில் செய்யப்படும் முதலீட்டுக்கும் என்ன மதிப்பு இருக்கும் என்பதை இந்த விவகாரம் தெளிவுபடுத்தும்" என்றார்.

மத்திய அரசு விரைவில் தலையிட்டு இந்தப் பிரச்னையை சுமுகமாக முடித்துவைக்க வேண்டும்.