Published:Updated:

கதிராமங்கலத்தின் 2 ஆண்டுகள்! - களத்தில் இருந்தவனின் சாட்சியம்! #ISupportKathiramangalam

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கதிராமங்கலத்தின் 2 ஆண்டுகள்! - களத்தில் இருந்தவனின் சாட்சியம்! #ISupportKathiramangalam
கதிராமங்கலத்தின் 2 ஆண்டுகள்! - களத்தில் இருந்தவனின் சாட்சியம்! #ISupportKathiramangalam

எங்களை மறந்துவிட்டார்கள் என்று புலம்புவதில் நியாயமில்லைதான். பற்றி எரிவது கண்கூடாகத் தெரிந்தால்தானே ஊடக வெளிச்சம் பாயும். இங்கே பற்றி எரிவது எங்கள் வயிராற்றே!.

 ‘ஐ சப்போர்ட் கதிராமங்கலம்!’ (#ISupportKathiramangalam) - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தையே பற்றிய எரியச் செய்த ஹேஷ்டேக். ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகம் சந்தித்த மிகப்பெரிய மக்கள் போராட்டம். மக்களின் விருப்பமின்றி, விவசாயத்தைப் பாழ்படுத்தி, நிலத்தடி நீரை மாசுபடுத்தி, நிலங்களைக் கையகப்படுத்தி ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான டன் கச்சா எண்ணெய்யை, நாட்டின் நிலங்கள் அத்தனையிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உறிஞ்சிக்கொண்டிருக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அத்தனை போராட்டத்தையும் களத்தில் நின்று பார்த்தவரின் கடிதம் இது.

 “ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் முதற்கொண்டு தங்களின் எதிர்காலத்துக்காக, தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக, தாங்கள் நம்பி இருக்கும் விவசாயத்தைக் காக்கத் தொடர்ந்து போராடினார்கள். சிறைக்குச் சென்றார்கள், பட்டினி கிடந்தார்கள். உளவுத்துறையினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள், கண்ணீர் சிந்தினார்கள், காவல் துறையின் கண்மூடித்தனமான தடியடியில் சிக்கி ரத்தமும் சிந்தினார்கள். இத்தனை செய்தும் இங்கு எதுவும் இன்னும் மாறவில்லை. தாயின் ரத்தத்தை உறிஞ்சுவதுபோல இன்னமும் ஓ.என்.ஜி.சி., தான் அமைத்திருக்கும் அனைத்து எண்ணெய்க் கிணறுகளிலும், தங்குதடையில்லாமல் எண்ணெய்யை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.

கதிராமங்கலத்தின் 2 ஆண்டுகள்! - களத்தில் இருந்தவனின் சாட்சியம்! #ISupportKathiramangalam

தண்ணீர் மாசுபட்டது என்ற ஆய்வறிக்கையைக் காட்டினோம். காவிரி நீர் பாய்ந்த நெற்பயிர் நிலத்தில் கச்சா எண்ணெய்ப் பாய்ந்ததை, நிலம் பற்றி எரிந்ததை ஆதாரமாய்க் காட்டினோம். கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் காட்டினோம். சாதி, மதம் கடந்து அரசியல் வேறுபாடுகள் கடந்து எங்களின் போராட்டத்தால் ஒற்றுமையைக் காட்டினோம். இத்தனைக்குப் பிறகும் எங்களுக்கு இரக்கம் காட்டவில்லை அரசு. ஒட்டுமொத்த தமிழகமும் நம் பக்கம் நிற்கிறதே, நிச்சயம் மாற்றம் நடக்கும் என்று நினைத்திருந்த எங்களுக்கு மாறியது நம்பிக்கை மட்டும்தான்.

தமிழக மக்கள் எங்களை மறந்துவிட்டார்கள். எங்களின் வீடு தேடிவந்து பேட்டியெடுத்த ஊடகங்கள், இப்போது நாங்கள் அழைத்தும் வருவதாய் இல்லை. கடைசியில் எங்களுடன் அமர்ந்திருந்த எங்கள் ஊர்க் கூட்டமும் மெல்ல நகர்ந்துவிட்டது. என்ன செய்வது? எங்களுக்கு மட்டுமா பிரச்னை? ஸ்டெர்லைட் போராட்டம், நீட் தேர்வு, எட்டுவழிச் சாலை சிக்கல் என அடுத்தடுத்த பிரச்னைகளில் ஓடிக்கொண்டிருக்கும் தமிழகம் எங்களுடன் இல்லை. எங்களை மறந்துவிட்டார்கள் என்று புலம்புவதில் நியாயமில்லைதான். பற்றி எரிவது கண்கூடாகத் தெரிந்தால்தானே ஊடக வெளிச்சம் பாயும். இங்கே பற்றி எரிவது எங்கள் வயிராற்றே!.

கதிராமங்கலத்தின் 2 ஆண்டுகள்! - களத்தில் இருந்தவனின் சாட்சியம்! #ISupportKathiramangalam

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை என்றால், அந்தத் தஞ்சையின் பொற்களஞ்சியம் எங்கள் ஊர். காவிரியும், வெட்டாறும் பாய்ந்து 360 வேலி வயற்காடு முழுவதும் நெற்கதிர்கள் நிறைந்திருப்பதால், எங்கள் ஊர் கதிர் வேய்ந்த மங்கலமாகி பின் கதிராமங்கலம் என்று பெயர் பெற்றது. சடையப்ப வள்ளல் பிறந்தும், கம்பன் வாழ்ந்து கவிபாடியும், புகழ்பெற்ற எங்கள் பூமி இன்று ஓ.என்.ஜி.சி. கார்ப்பரேட்களால் பாழ்பட்டு நிற்கிறது. 

போதாக்குறைக்கு, தற்போது பாரத்மாலா என்றும், நான்கு வழிச்சாலை வரவிருக்கிறது என்றும் மிச்சமிருக்கும் விவசாய நிலங்களிலும் கல்லை நட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். என்றைக்கு நிலத்தைத் தோண்ட வருவார்களோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இன்றும் உறங்குகிறோம். 

கதிராமங்கலத்தின் 2 ஆண்டுகள்! - களத்தில் இருந்தவனின் சாட்சியம்! #ISupportKathiramangalam

முன்பைப்போல் எங்களால் உரக்கக் குரலெழுப்ப முடியவில்லை! கைநீட்டி தைரியமாகப் பேசமுடிய வில்லை. எங்களுக்குக் காவல் அரணாய் நின்ற இளைஞர்களும் இன்று வழக்குமேல் வழக்கு சுமந்து, வாய்தாமேல் வாய்தா வாங்கி நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இருந்த வேலையும் கைவிட்டுப்போனது, பெண்கொடுப்பாரும் யாருமில்லை. வெளிநாடு போய் வேலைபார்க்கலாம் என்ற நினைத்தவர்களின் கடவுச்சீட்டும் காவல் துறை வசம். இப்படி இருந்தால் யார்தான் போராட வருவார்கள்? இனி இவர்களையும் துணைக்கு அழைக்க முடியாது. 

பணம் இருப்பவன் பட்டணத்தில் நிலம் வாங்கி வீடு கட்டிக்கொண்டிருக்கிறான். பாதி வயிறாய்ப் பட்டினி கிடக்கும் நாங்கள் எங்குப் போவது? இருக்கும் நிலத்தை விற்று எங்காவது வெளியூருக்குப் போய்விடலாம் என்றாலும் எங்கள் நீர்கெட்ட நிலத்தை யார் வந்து வாங்குவார்கள்? எங்களுக்குச் சோறுபோட்ட பூமியை, எங்கள் பாட்டனும், பூட்டனும் வாழ்ந்த பூர்விக பூமியை விட்டுச்செல்லவும் மனமில்லாமல் நடைப்பிணமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இல்லை... மெல்ல வீழ்ந்துகொண்டிருக்கிறோம்! எங்கள் வீழ்ச்சியில் கைவிடப்பட்டிருப்பது எங்களையும் உங்களையும் காத்த இந்த நிலம்தான். இறுதியாக ஒன்று மட்டும்,  ‘இன்று நாங்கள், நாளை நீங்கள்!’ “

இப்படிக்கு,

களத்தின் சாட்சி

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு