அரசை நம்பியது போதும்... களமிறங்கிய தன்னார்வலர்களும் பொதுமக்களும்! #WhereIsMyWater

அரசை நம்பியது போதும்... களமிறங்கிய தன்னார்வலர்களும் பொதுமக்களும்! #WhereIsMyWater
சென்னையில் உள்ள முக்கியமான நீர்நிலைகளில் ஒன்று குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் அருகிலுள்ள சிட்லப்பாக்கம் ஏரி. இந்த ஏரி இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக இருந்தது. ஏரியின் மொத்தப் பரப்பளவு சுமார் 100 ஏக்கர். அதில் நீர் தேங்கும் பரப்பளவு 86 ஏக்கர். தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. சென்னையில் உள்ள மற்ற பகுதிகளைக் காட்டிலும் இங்கு எப்போதும் ஏரியின் நீர்மட்டம் அதிகமாகவே காணப்படும்.

இந்நிலையில், ஏரி முறையாகப் பராமரிக்கப்படாததாலும், தூர்வாரப்படாததாலும் நிலத்தடி நீர் குறைந்து போனது. இந்நிலையில், இந்தக் குளத்தைத் தூர்வாரி பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக துறைசார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இப்பகுதி ஏரியை தாங்களே தூர்வாரி ஆழப்படுத்துவது என முடிவெடுத்தனர் அப்பகுதி மக்கள். இதையடுத்து ஜூன் 2-ம் தேதி இன்று காலை 7 மணிக்கு வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் அவர்களின் பெற்றோர்கள் சிட்லப்பாக்கம் ஏரியைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்தனர். தூர்வாரும் பணியில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிட்லப்பாக்கம் ஏரியைச் சுத்தப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதியில் உள்ள சிட்லப்பாக்கம் ரைசிங் குழுவைச் சேர்ந்த சுனில் ஜெயராம் கூறுகையில், இந்தக் குளத்தைத் தூர்வாரக் கோரி அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால் கிராம மக்களே இணைந்து குளத்தைத்

தூர்வார முடிவெடுத்தோம். “Save Chitlapakkam Lake (சிட்லப்பாக்கம் ஏரியைக் காப்பாற்றுவோம்)” என்ற வாக்கியத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்தோம். சிட்லப்பாக்கத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமக்களும், நல திட்ட உறுப்பினர்களும் சங்கங்களும் சமூக ஆர்வலர்களும் தத்தம் குடும்பத்துடன் வந்து பங்கேற்க அழைப்பு விடுத்தோம். சுமார் 1000 பேர் வருவதாகப் பதிவு செய்துள்ளனர். பலர் தங்களால் முடிந்த உதவிகளை பணமாகவும் செய்து வருகின்றனர் என்றார்.