Published:Updated:

6,000 நபர்கள்; 6 மணி நேரம்... 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு!திண்டுக்கல்லில் சாதனை முயற்சி

மரக்கன்றுகள்

ஒரு மாதத்தில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான 117 ஏக்கரை 10,000 சதுர அடியில் 300 பாகங்களாகப் பிரித்து குழிகள் பறித்தோம். தண்ணீர் தேவைக்காக 2 கிணறுகளையும், 6 போர்வெல்களையும் அமைத்தோம். தற்போது 6,000 மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. 

6,000 நபர்கள்; 6 மணி நேரம்... 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு!திண்டுக்கல்லில் சாதனை முயற்சி

ஒரு மாதத்தில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான 117 ஏக்கரை 10,000 சதுர அடியில் 300 பாகங்களாகப் பிரித்து குழிகள் பறித்தோம். தண்ணீர் தேவைக்காக 2 கிணறுகளையும், 6 போர்வெல்களையும் அமைத்தோம். தற்போது 6,000 மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. 

Published:Updated:
மரக்கன்றுகள்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இடையகோட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவேங்கடநாத பெருமாள்கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 117 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் மரக்கன்றுகளை நட உள்ளனர். இதற்காக, 6,000 பேரைக் கொண்டு 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான சாதனை முயற்சி டிசம்பர் 23-ம் தேதி நடக்கவுள்ளது. 

மரக்கன்று அமைக்க குழி தோண்டும் பணியில் ஈடுபட்டவர்கள்
மரக்கன்று அமைக்க குழி தோண்டும் பணியில் ஈடுபட்டவர்கள்

இதற்கான பணியை தலைமையேற்று செய்துவரும் குஜிலியம்பாறை டி.கூடலூர் முன்னாள் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் கண்ணனிடம் பேசினோம். ``எங்கள் பஞ்சாயத்தில் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து பெரிய மரங்களாக வளர்த்துள்ளேன். இதைப் பார்த்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தனது தொகுதியான ஒட்டன்சத்திரம் முழுவதிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் எனக் கோரினார். அதை ஏற்று கடந்த 14 மாதங்களில் 77 பஞ்சாயத்துகள், ஒரு நகராட்சி, ஒரு பேரூராட்சி என ஒட்டன்சத்திரம் தொகுதி முழுவதும் 3 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறேன். 

இந்நிலையில், இடையகோட்டையில் 117 ஏக்கர் நிலம் கருவேலங்களும் முட்புதர்களும் மண்டியுள்ளது. இப்பகுதியை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடலாம் என அமைச்சரிடம் கூறினேன். அவரும் சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து தரப்பிலும் அனுமதி பெற்று தந்தார். முதலில் 20 ஏக்கரை சுத்தம் செய்து அதில் மரக்கன்றுகள் நடவு செய்துவிட்டு, பிறகு மற்றப் பகுதிகளைக் கவனித்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால், பராமரிப்புக்குத் தண்ணீர் தேவை ஏற்பட்டது. இதனால் நடவுப் பணிகளை கைவிட்டுவிட்டு அனைத்து பகுதிகளிலும் கருவேலமரங்களை அகற்றத் தொடங்கினோம்.

தயார் நிலையில் உள்ள நிலம்
தயார் நிலையில் உள்ள நிலம்

அப்போதுதான் இப்பகுதியில் அடர்காடு சாதனை முயற்சியாக 6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதுகுறித்தும் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். பிறகு, அறநிலையத்துறை, வனத்துறை, வேளாண்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறையின் ஒத்துழைப்போடு பணிகளைத் தொடர்ந்தோம். தினமும் 500 பேரைக் கொண்டு ஒரு மாதத்தில் சுத்தம் செய்யும் பணியை முடித்தோம். பிறகு, ஒரு மாதத்தில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான 117 ஏக்கரை 10,000 சதுர அடியில் 300 பாகங்களாகப் பிரித்து குழிகள் பறித்தோம். தண்ணீர் தேவைக்காக 2 கிணறுகளையும், 6 போர்வெல்களையும் அமைத்தோம். தற்போது 6,000 மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. 

இந்தப் பணிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வேளாண் பல்கலைக்கழகம் அடர்வனமாக மாறவுள்ள இந்த இடத்தை ஆராய்ச்சி நிலையமாகப் பயன்படுத்த உள்ளனர். வனத்துறைசார்பிலும்,வேளாண்துறை சார்பிலும் தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர். இதுபோக ஆந்திராவில் இருந்தும் மரக்கன்றுகள் வாங்கப்பட்டுள்ளன. புளி, மா, புங்கை, அவரை, தேக்கு, வேம்பு உட்பட 43 வகையான மரக்கன்றுகளை சேகரித்துள்ளோம். 

குழி தோண்டும் பணி
குழி தோண்டும் பணி

இரண்டு அடி இடைவெளியில் மரக்கன்றுகள் நடவு செய்வதன் மூலம் அடர்காடு உருவாக்கினால் மழையை ஈர்க்கலாம். தமிழகத்தில் ஒரே இடத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்வது இதுவே முதல்முறை. இதற்கு முன்னதாக 10 மணி நேரத்தில் 3.75 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ததுதான் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. எங்களுடைய ஏற்பாட்டை கண்காணித்து சாதனை புத்தகத்தில் இடம் தர 15 பேர் கொண்ட குழுவினர் வரவுள்ளனர். அவர்கள் மரக்கன்றுகளின் எண்ணிக்கை, நடவு செய்வோரின் எண்ணிக்கை, எவ்வளவு மணி நேரத்தில் நடப்படுகிறது என்பதைப் பார்த்து சாதனை புத்தகத்தில் இடம் தருவர். 

இதற்குள் சிறுவர் பூங்கா, மூலிகை பூங்கா, மரகத பூங்கா அமைய உள்ளது. மரகத பூங்காவில் 24 வகை நட்சத்திர மரங்களும், 12 வகை ராசி மரங்களும் இடம் பெறும். இதுபோக பூக்களுக்கான தனிப்பிரிவு, வாசனை மரங்களுக்கான தனிப்பிரிவு, பறவைகளுக்கான பிரிவு எனப் பிரித்துள்ளோம். 

பூங்கா அமைக்கும் பணி
பூங்கா அமைக்கும் பணி

சாதனை நிகழ்வு நடக்கும் அன்று கல்லூரி மாணவர்களும், மகளிர்குழுவினரும், பொதுமக்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளனர். அவர்களுக்கென பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23-ம் தேதி கன்றுகள் நடவு செய்த பிறகு 3 ஆண்டுகளில் அடர்காடு செழித்து உருவாக தொடங்கிவிடும். அதன் பிறகு, இப்பகுதி அறநிலயைத் துறையில் இருந்து தனியாக ஒரு செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு பராமரிக்க உள்ளார். திண்டுக்கல் மட்டுமல்ல தமிழ்நாட்டில் மிகப்பெரிய சுற்றுலா தளமாகவும் இவ்விடம் மாறிவிடும்'' என்றார்.