Published:Updated:

1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரத்துக்கு 95 ரூபாய் தானா?

செம்மரத் தோட்டத்தில் ஆர்.பி.கணேசன் ( Jayakumar T )

தென்னை மரத்தை வெட்டணும்னா ஒரு மரத்துக்கு 50,000 ரூபாய் இழப்பீடு கொடுக்கிறாங்க. அதேபோல செம்மரம், சந்தன மரம், தேக்கு போன்ற விலையுயர்ந்த மரங்களுக்கும் இழப்பீடு கிடைக்கணும் என்பதே என் நோக்கம்.

1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரத்துக்கு 95 ரூபாய் தானா?

தென்னை மரத்தை வெட்டணும்னா ஒரு மரத்துக்கு 50,000 ரூபாய் இழப்பீடு கொடுக்கிறாங்க. அதேபோல செம்மரம், சந்தன மரம், தேக்கு போன்ற விலையுயர்ந்த மரங்களுக்கும் இழப்பீடு கிடைக்கணும் என்பதே என் நோக்கம்.

Published:Updated:
செம்மரத் தோட்டத்தில் ஆர்.பி.கணேசன் ( Jayakumar T )

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் ஆர்.பி.கணேசன். இவரை `செம்மரம்' கணேசன் என்றுதான் விவசாயிகள் அழைப்பார்கள். சுமார் 40 ஏக்கரில் மரச் சாகுபடி செய்து வருகிறார். செம்மரம், ஈட்டி, தேக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறார். குறிப்பாக, செம்மரங்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறார். கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக இவருடைய 2 ஏக்கர் நிலத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த 2 ஏக்கர் நிலத்தில் 1,300 செம்மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதை வெட்டி அப்புறப்படுத்துவது மட்டுமல்லாமல், குறைந்த இழப்பீட்டுத் தொகையே கொடுக்க இருப்பதாக முகநூலிலும், பொதுவெளியிலும் கண்டன குரல்களை எழுப்பியிருந்தார் கணேசன்.

நிலத்துக்கு முன் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகத்துடன் ஆர்.பி.கணேசன்
நிலத்துக்கு முன் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகத்துடன் ஆர்.பி.கணேசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து கணேசனிடம் பேசியபோது, ``காட்டில் வளரும் செம்மரங்களை வெட்டுவதற்கு தடை இருக்கு. ஆனால், விவசாயிகள் தங்கள் நிலங்கள்ல செம்மரம் சாகுபடி செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. செம்மரங்களோட விற்பனை வாய்ப்பை கருத்தில் கொண்டு அதைச் சாகுபடி செய்றதுக்கு பல விவசாயிகள் களத்துல இறங்கியிருக்காங்க. நல்லா வளர்ந்துட்டு வந்த என்னோட நிலத்துல இருந்து 2 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கறதாகவும், 1,300 செம்மரங்களை வெட்டப்போறதாகவும் நெடுஞ்சாலைத் துறையில இருந்து நோட்டீஸ் அனுப்பி யிருந்தாங்க. ஒரு செம்மரத்துக்கு 95 ரூபாய் நஷ்ட ஈடு தர்றதாகவும் சொல்லியிருந்தாங்க. ஒரு செம்மரம் நல்லபடியாக வளர்ந்து பலன் கொடுத்தா லட்சங்கள்ல விற்பனையாகுது. இவங்க 95 ரூபாய் விலை நிர்ணயிச்சுருக்காங்களேன்னு சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடுத்தேன். அது இன்னமும் நடந்துகிட்டு இருக்கு. அரியவகை மர இன பட்டியல்ல செம்மரமும் இருந்தது. அது தெரியாமலேயே நான் உட்பட பலரும் செம்மரத்த சாகுபடி செஞ்சுட்டு வந்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நேரத்துலதான் `பனிச்சிறுத்தை’ என்ற விலங்கு அரியவகை உயிரினம் என்ற பிரிவிலிருந்து நீக்கப்பட்டதாக ஒரு பத்திரிகையில படிச்சேன். எந்தவொரு தாவரமோ, விலங்கோ, பறவையோ... அதோட எண்ணிக்கை 2,500-க்குக் கீழே குறைஞ்சா `அரியவகை உயிரினம்’னு சொல்லப்படுது. அதனால, பனிச்சிறுத்தை 2,500-க்கு மேலே இருக்கிறதா ஆதாரத்தோடு தகவல் கொடுக்கப்பட்டு, பிறகு அது பட்டியல்ல இருந்து நீக்கப்பட்டதாகப் படிச்சேன்.

நிலத்துக்கு முன் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகத்துடன் ஆர்.பி.கணேசன்
நிலத்துக்கு முன் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகத்துடன் ஆர்.பி.கணேசன்

உடனே தகவல் உரிமைச் சட்டம் மூலமா தமிழ்நாடு, ஆந்திராவுல 2 கோடிக்கும் அதிகமான செம்மரங்கள் இருக்குங்கிற விவரத்தை வாங்கினேன். அதை ஜெனீவாவில் இருக்கும் சர்வதேச இயற்கைவள பாதுகாப்பு கூட்டமைப்புக்கு (IUCN) மெயிலில் அனுப்பினேன். பிறகு 2018, ஜூலை 5-ம் தேதி `செம்மரம் அரியவகை இனம்’ என்ற பிரிவிலிருந்து நீக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசின் பன்னாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகத்துக்கும் (டி.ஜி.எஃப்.டி) மெயில் அனுப்பினேன். விவசாய நிலங்கள்ல வளரும் செம்மரங்களை ஏற்றுமதி செய்யத் தடையில்லைனு 18.02.2019 அனுமதி கிடைச்சது. இப்படி செம்மரங்களை விவசாய நிலங்கள்ல சாகுபடி செய்றதுக்கு பல முயற்சிகளை எடுத்திருக்கேன். இப்போதும் எடுத்துட்டு வர்றேன்.

விற்பனையில் செம்மரத்தை ஏ, பி, சி, டி-னு 4 தரமா பிரிக்கிறாங்க. இன்றைய சந்தை மதிப்பில் ‘சி’ தர செம்மரம் ஒரு டன் 20 - 25 லட்சம் ரூபாய் போகுது. ஒரு கிலோ 2,000 ரூபாய் என்ற கணக்குல ஒரு மரத்துக்கு 100 கிலோ கிடைச்சாகூட செலவு, வரிகள் போக ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாது. இந்தளவுக்கு மதிப்புள்ள செம்மரத்தை யாராவது 95 ரூபாய்க்குக் கொடுப்பாங்களா?

செம்மரத் தோட்டத்தில் ஆர்.பி.கணேசன்
செம்மரத் தோட்டத்தில் ஆர்.பி.கணேசன்
Jayakumar T

இதைக் கருத்தில் கொண்டுதான் 2012-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கு சம்பந்தமாக தமிழ்நாடு வனத்துறையும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தகவல் அறியும் சட்டப்படி கிடைத்த தகவலில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அழிந்து வரும் மரங்களோட பட்டியலே இல்லை என்ற தகவல் கிடைச்சிருக்கு. இந்த மாதிரி விவசாய நிலங்கள அரசு பணிகளுக்கு கையகப்படுத்தும்போது, அதில் உள்ள மரங்களை எப்படி பாதுகாப்பது பற்றி எந்தவித வழிகாட்டுதலும் இல்லை.

அழிந்து வரும் மரங்களை பாதுகாப்பதற்கான யோசனைகளை பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பியிருக்கிறேன். இப்படி அனுப்பும் மனுக்களை சேகரித்தும் வருகிறேன். அழிந்து வரும் மரங்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன். வனத்துறையிடம் மரங்களுக்கான இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கு எந்த வித வழிகாட்டுதலும் இல்லை. ஒரு விவசாயி ஒரு மரத்தை வளர்ப்பதற்கு ஆகும் செலவு, அந்த மரத்தின் மதிப்பு, அதற்கு எவ்வளவு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதை கணக்கீடு செய்ய தெரியாமல் இருக்கிறது வனத்துறை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு வெற்றி பெற்றால் 1,300 மரங்களுக்கான நியாயமான இழப்பீடு கிடைக்கும். தென்னை மரத்தை வெட்டணும்னா ஒரு மரத்துக்கு 50,000 ரூபாய் இழப்பீடு கொடுக்கிறாங்க. அதேபோல செம்மரம், சந்தன மரம், தேக்கு போன்ற விலையுயர்ந்த மரங்களுக்கும் இழப்பீடு கிடைக்கணும் என்பதே என் நோக்கம். இதற்காக என்னோட செம்மர தோட்டத்துக்கு முன்பு விழிப்புணர்வு வாசகங்களை வெச்சு பிரசாரம் செஞ்சிட்டு வர்றேன். மரங்களோட மதிப்பை அரசாங்கம் உணர வேண்டும். ஏதோ போகிற போக்கில் வெட்டித் தள்ளுவதற்காகவா கஷ்டப்பட்டு மரங்களை வளர்க்கிறோம். நியாயமான இழப்பீடு கிடைக்காமல் செம்மரங்களை வெட்ட அனுமதிக்க மாட்டேன்” என்றார் உறுதியான குரலில்.