Published:Updated:

நிலுவைத் தொகையைத் தராவிட்டால்... தமிழக அரசை எச்சரிக்கும் கரும்பு விவசாயிகள்

நிலுவைத் தொகையைத் தராவிட்டால்... தமிழக அரசை எச்சரிக்கும் கரும்பு விவசாயிகள்
நிலுவைத் தொகையைத் தராவிட்டால்... தமிழக அரசை எச்சரிக்கும் கரும்பு விவசாயிகள்

கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகையை தமிழக அரசு, விவசாயிகளுக்கு வழங்காவிட்டால் செப்டம்பர் 5-ம் தேதி கரும்புக் கோட்டங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்- விவசாய சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் ஆர்.எஸ்.மாத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு 2014-ம் ஆண்டு முதல் வெட்டிய கரும்புக்கு, சர்க்கரை ஆலையால் பிடித்தம் செய்யப்பட்டுள்ள 36 கோடியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் கரும்பு விவசாயிகளின் பாக்கித் தொகையை தமிழக அரசு தரவில்லையென்றால் வரும் செப்டம்பர் 5-ம் தேதி எறையூர் சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான அனைத்து கரும்புக் கோட்டங்களையும் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். 

கரும்பு டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்; ஆலையில் அரசு கொண்டுவந்த இணைமின் திட்டத்தையும் ஆலை விரிவாக்கத் திட்டத்தையும் விரைந்து நிறைவேற்றிட கூடுதல் நிதி வழங்க வேண்டும்; வெட்டிய கரும்புக்கு அரசு தரவேண்டிய தொகை பாக்கி இருக்கும்போது, வங்கியில் கரும்புக்காக வாங்கிய கடனை கட்டச்சொல்லி விவசாயிகளை நிர்பந்தப்படுத்தி, பல வழிகளில் அச்சுறுத்தும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் டெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடும் அய்யாக்கண்ணு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.