Published:Updated:

மயிலாடுதுறை: `மன உளைச்சல்; விடுபட உதவும் காய்கறித் தோட்டம் போட்டி!’ - அசத்தும் பேரூராட்சி

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம்

தோட்டம் அமைக்க இடமே இல்லை என வருந்தும் நகர் பகுதி மக்கள் மாடித்தோட்டம் அமைக்கலாம். வணிக நோக்கில் அமைக்கப்படும் பண்ணைகளுக்கு பரிசு இல்லை. எந்த ஒரு தோட்டம் அமைத்தாலும் கட்டாயம் ஒரு கீரை வகையாவது பயிரிடப்பட வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் காய்கறித் தோட்டங்களை அமைக்கும் வகையில், 'ஆடிப் பட்டம் தேடி விதை - எங்கள் வீட்டுத் தோட்டம்' என்று ஒரு பரிசுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் பேரூராட்சி செயல் அலுவலர் குகன். இத்திட்டம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்து பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

செயல் அலுவலர் குகன்
செயல் அலுவலர் குகன்

சிறந்த வீட்டுத் தோட்டத்துக்கு சிறப்புப் பரிசு அறிவித்துள்ள பேரூராட்சி, கலந்து கொள்ளும் அனைவருக்கும் பேரூராட்சியின் இயற்கை உரம் பரிசாகத் தருகிறது.

இதற்கான விதிமுறைகளை பேரூராட்சி அறிவித்துள்ளது. தமிழ் ஆடி மாதத்துக்குள் தோட்டம் புதியதாக அமைக்க வேண்டும். காய்கறித் தோட்டம் எனில் மரபணு மாற்றம் செய்யப் படாத கத்திரி, வெண்டை, அவரை, புடலை, தக்காளி, கொத்தவரை போன்ற நாட்டுக் காய்கறிகள்தான் விதைக்கப் பட வேண்டும். மூலிகைத் தோட்டம் எனில் கற்றாழை, துளசி, ஓமவல்லி, நாயுருவி, நொச்சி, ஆடாதொடை, கண்டங்கத்திரி, மூக்கரட்டை மற்றும் இதர நோய் தீர்க்கும் பாரம்பர்ய மூலிகைகள் இடம் பெற வேண்டும்.

பூந்தோட்டமும் அமைக்கலாம். பூக்களின் அழகு மனதை மகிழ்விக்கும், நறுமணம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் என்பதால் மன நலன் கருதி பூந்தோட்டங்களுக்கும் பரிசு உண்டு. தோட்டம் அமைக்க இடமே இல்லை என வருந்தும் நகர் பகுதி மக்கள் மாடித்தோட்டம் அமைக்கலாம். வணிக நோக்கில் அமைக்கப்படும் பண்ணைகளுக்கு பரிசு இல்லை. எந்த ஒரு தோட்டம் அமைத்தாலும் கட்டாயம் ஒரு கீரை வகையாவது பயிரிடப்பட வேண்டும்.

இதுவரை 70 பேர் வீட்டுத் தோட்டங்களும், 20 பேர் மாடித் தோட்டங்களும் அமைந்துள்ளனர். ஜானகிராமன் என்பவர் வீடு கட்ட அஸ்திவாரம் போட்டுள்ளார். மேற்கொண்டு வீடுகட்ட பணமில்லாத்தால் அந்த அடித்தளத்தையே தோட்டமாக்கியுள்ளார். அதில் முள்ளங்கி, வெண்டை, கீரை, கொத்தவரை ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளார். அவரின் விவசாய ஆர்வத்தைப் பாராட்டிய செயல் அலுவலர் குகன், அவருக்குச் சால்வை அணிவித்து, உரம் தயாரிக்கும் சாதனம் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம்

இதுபற்றி செயல் அலுவலர் குகனிடம் பேசினோம். ``நாங்கள் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கிறோம். இது மக்களுக்குப் பயன்பட வேண்டும். மரபணு காய்கறிகளைத் தவிர்த்து நமது பாரம்பர்ய காய்கறிகளை இயற்கை முறையில் பயிரிட்டு ஆரோக்கியமான உணவை அருந்தணும். மேலும், கொரோனா ஊரடங்கால் மன உளைச்சலில் இருந்து விடுபட இத்தோட்டம் உதவும். இயற்கை உரங்களை இலவசமாகத் தருவதோடு அவர்களே உரங்கள் தயாரிக்க ஒரு கிட்டும் தருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு