ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

பால் கொள்முதல் விலை... விவசாயிகளை ஏமாற்றிய அரசு!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

கடைத்தெரு செல்லும் வழியில்... ‘காய்கறி’ கண்ணம்மா, ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி மூவரும் சந்தித்துக்கொண்டார்கள். “வாங்க, அந்த மரத்தடியில கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு அப்புறமா கிளம்புவோம்’’ என ஏரோட்டி சொல்ல, மூவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.

‘‘வாத்தியாரய்யா எனக்கு ஒரு சந்தேகம்... நம்ம ஊரு விவசாயிங்க செண்டுமல்லி, மல்லி எல்லாம் சாகுபடி செய்றாங்க. ஆனா, ஏன் குங்குமப்பூ சாகுபடியில இறங்க மாட்டேங்குறாங்க. அது, அதிக விலை விக்கிது... அதைப் பயிர் பண்ணினா சீக்கிரம் பணக்காரங்க ஆயிடலாம்ல’’ ஏரோட்டி எழுப்பிய கேள்வியுடன் அன்றைய மாநாடு தொடங்கியது.

‘‘கேட்டாலும் கேட்டீங்க... வாத்தியாரய்யாவே வாயடைச்சுப் போற மாதிரி, அப்படியொரு கேள்வியை அருமையா கேட்டிங்க. எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம் உண்டு. இப்பகூட குங்குமப்பூக்குத் தட்டுப்பாடாதான் இருக்கு. என் சித்தப்பா பொண்ணு முழுகாம இருக்கு. அதுக்கு குங்குமப்பூ வாங்கிக்கிட்டுப் போகலாம்னு டவுனுக்குப் போயி, கடை கடையா அலைஞ்சு பார்த்தேன்... கிடைக்கவே இல்லை’’ சலிப்புடன் சொன்னார் காய்கறி.

‘‘குங்குமப்பூ நம்ம ஊரு மாதிரியான வெப்ப மண்ட பூமியில எல்லாம் விளையாது. நல்லா குளிர்ச்சியான காஷ்மீர் மாதிரியான பகுதிகள்ல தான் அது விளையும். ஆனா, பருவநிலை மாற்றத் துனால, இப்ப அங்கயேகூட சரியான விளைச்சல் இல்லையாம். அந்த ஊரு விவசாயிங்க ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. குங்குமப்பூ உற்பத்தி முடங்கிக் கிடக்குறதுனால, காஷ்மீர் அரசாங்கமும் ரொம்பக் கவலையில இருக்காம். அதனால புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டங்கள்ல குங்குமப்பூ வளர்க்க, அங்கவுள்ள ஆராய்ச்சி மையத்தினர் பயிற்சி கொடுக்குறாங்க. அதைக் கத்துக்க, காஷ்மீர் பெண்கள் ரொம்பவே ஆர்வம் காட்டுறாங்களாம்’’ என அந்தத் தகவலை முழுமையாகச் சொல்லி முடித்த வாத்தியார், ‘‘இப்போ உங்க ரெண்டு போரோட சந்தேகமும் தீர்ந்துப் போச்சா’’ எனப் பெருமிதத்துடன் பார்வையை வீசினார்.

‘‘இது ஒரு பெரிய விஷயமா வாத்தியாரய்யா. என் அக்கா மவன் ஆறாம் கிளாஸ்தான் படிக்கிறான். எந்தச் சந்தேகம்னாலும் அவன்கிட்ட கேட்டா போதும்... போன்ல பார்த்தே எல்லாம் சொல்லிடுவான். சரி அதை விடுங்க. நான் ஒரு சேதி சொல்றேன் கேக்குறீகளா?’’ என்ற காய்கறி.

பால்
பால்

‘‘தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிங்க, தமிழக அரசாங்கத்துக்கு ஒரு அருமையான யோசனை சொல்லியிருக்காங்க. பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்துல, பச்சரிசி, வெல்லம், கரும்பு உட்பட 21 வகையான பொருள்கள் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. அதோட சேர்த்து வெத்தலையும் தேங்காயும் கொடுக்கலாம். பொங்கல் பண்டிகையில இந்த ரெண்டும் ரொம்பவே முக்கியமானது. இந்த ரெண்டு பொருள்களுக்கும் நியாயமான விலை நிர்ணயம் செஞ்சு, இங்கவுள்ள விவசாயிங்ககிட்ட கொள்முதல் செஞ்சா, ரொம்பவே சந்தோஷப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினை மனதார வாழ்த்துவோம்னு, அந்தச் சங்கத்துக்காரங்க சொல்லியிருக்காங்க’’ என்றார்.

‘‘ஆஹா! இது நல்ல யோசனையா இருக்கே கண்ணம்மா. இந்த வருஷம் தேங்காய்க்கும் வெத்தலைக்கும் லாபகரமான விலை கிடைக் காததால, விவசாயிங்க ரொம்பவே நொந்து போய்ட்டாங்க. தமிழக அரசாங்கம் நல்ல விலை கொடுத்து கொள்முதல் செஞ்சா, அவங்களுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும்’’ என்று சொன்ன ஏரோட்டி, ‘‘ஆனா, இதுலயும் ஒரு பிரச்னை இருக்கு’’ எனப் பீடிகை போட்டார்.

‘‘போன வருஷம் பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்துக்குக் கரும்பு கொள்முதல் செஞ்சதுல ஏகப்பட்ட முறை கேடுகள் நடந்துச்சு. அதனால விவசாயிங்க கடுமையா பாதிக்கப்பட்டாங்க. அந்தக் கதையா ஆயிடக் கூடாது’’ என்றார்.

‘‘புகழூர் சர்க்கரை ஆலையும் அந்த விவசாயிகளை இழந்துடக் கூடாதுங்கறதுல ரொம்ப உறுதியா இருக்காம். ஆனா, சர்க்கரை துறை அதிகாரிங்க இதுக்கு மறுப்புத் தெரிவிச்சு முரண்டுப் பிடிக்குறாங்க.’’

‘‘ஏகாம்பரம், நீங்க கரும்பை பத்தி பேசினதும்தான், ஈரோடு மாவட்டத்துல நடந்துகிட்டு இருக்குற அந்தப் பிரச்னை ஞாபகத்துக்கு வருது’’ என்று சொன்ன வாத்தியார், அது தொடர்பான தகவலை விவரித் தார்.

‘‘அந்த மாவட்டத்துல உள்ள அறச்சலூர், வேலம்பாளையம், வடுகபட்டி, கொல்லங்கோவில், விளக்கேத்தி உட்பட 9 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிங்க சுமார் 2,000 பேர், கரூர் மாவட்டம், புகழூர்ல உள்ள இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில கடந்த 30 வருஷமா, கரும்பு விற்பனை செஞ்சுகிட்டு இருந்தாங்களாம். ஆனா, இனிமே நீங்க சக்தி சர்க்கரை ஆலைக்குத்தான் உங்க கரும்பைக் கொடுக்கணும்னு சர்க்கரை துறை ஆணையர் உத்தரவு போட்டதுனால, அந்தப் பகுதி விவசாயிங்க ரொம்பவே கொந்தளிச்சுப்போய் கிடக்குறாங்க.

காரணம், தமிழ்நாட்டுல உள்ள மத்த சர்க்கரை ஆலைங்க எல்லாம், விவசாயிங்களுக்குத் தர வேண்டிய கரும்பு பணத்தை முழுமையா கொடுக்காம நிலுவை வச்சப்ப, புகழூர் இ.ஐ.டி சர்க்கரை ஆலை மட்டும்தான், கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்துல முழுமையா பணத்தைக் கொடுத்தாங்களாம். அதோட கரும்பு வெட்டி எடுத்துக்கிட்டுப் போறதுக்கான போக்கு வரத்து செலவுகளை அந்த ஆலை நிர்வாகமே ஏத்துக்கிட்டாங்களாம். விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையையும் ஒழுங்கா கொடுக்கப் பட்டுருக்கு. அதனால வழக்கம்போல புகழூர் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு கொடுக்குறது தான் எங்களுக்கு வசதியா இருக்கும்’னு அந்த விவசாயிங்க சொல்றாங்க. புகழூர் சர்க்கரை ஆலையும் அந்த விவசாயிகளை இழந்துடக் கூடாதுங்கறதுல ரொம்ப உறுதியா இருக்காம்.

இந்த நிலையில ‘ஈரோடு மாவட்டத்துல இருக்கிற சக்தி சர்க்கரை ஆலை கடந்த காலத்தில் நிதி நெருக்கடியில் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வருடமாக எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சக்தி சர்க்கரை ஆலை பதிவு செய்ய விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’னு சர்க்கரைத் துறை ஆணையர் விளக்கம் கொடுத்திருக்காரு. பார்ப்போம் என்ன நடக்கப்போகுதுனு’’ என்றார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“பால் கொள்முல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கு கேள்விபட்டீங்களா?” என்றார் வாத்தியார். அதைக் கேட்டு கொந்தளித்த ஏரோட்டி, ‘‘விவசாயிங்க, தங்களோட உற்பத்திப் பொருளுக்குத் தாங்களே விலை நிர்ணம் செய்ய முடியாத நிலை இருக்குறதே மிகப் பெரிய அநீதி. இந்த லட்சணத்துல, தங்களோட பொருளை, தங்களுக்கு வசதி யான இடத்துல விக்கக்கூட உரிமை இல்லைங்கறது எவ்வளவு பெரிய கொடுமை. இது ஒரு பக்கம்னா, பால் கொள்முதல்ல ஆவின் நிர்வாகம், விவசாயி களுக்குச் செய்ற துரோகம் ரொம்ப மோசம். ஆரஞ்சு நிற பாக்கெட் பாலோட விலை ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப் பட்டுருக்கு. இதனால மக்கள் கொந்தளிச்சு கிடக்குறாங்க. அவங்களை சமாதானப்படுத்த ஆவின் நிர்வாகம் ஒரு விளக்கம் கொடுத்திருக்குப் பாருங்க.

‘பால் கொள்முதல் விலையை உயர்த் தினதுனாலதான், விற்பனை விலையை உயர்த்த வேண்டிய தாயிடுச்சுனு கொஞ்சமும் மனசாட்சி இல்லாம பொய் சொல்லியிருக்காங்க. உண்மை யைச் சொல்லணும்னா, பால் கொள்முதல் விலை வெறும் 3 ரூபாய்தான் உயர்த்தப் பட்டுருக்கு. ஆனா, விவசயிகளுக்கு ஏதோ நிறைய அள்ளிக்கொடுத்த மாதிரி ஆவின் நிர்வாகம் கதை விட்டுக்கிட்டு இருக்கு. நம்பிக்கையோட இருந்த விவசாயிகளை அரசு ஏமாத்திடுச்சு’’ என அவர் ஆதங்கத் துடன் சொல்லி முடிக்க, “ஒவ்வொரு தடவை ஆட்சி மாறும்போதும், தேனாறும் பாலாறும் ஓடும்பாங்க. ஆனா, எப்பவுமே சாக்கடைதான் வத்தாம ஓடுது” என்று வாத்தியார் கொந்தளித்தபடியே துண்டை உதறிக் கொண்டு எழ, முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு.