Published:Updated:

`30 வருஷமா கண்மாயை ஆக்கிரமிச்சு அனுபவிச்சிட்டு வர்றாங்க!'- அதிகாரிகளை பதறவைத்த போஸ்டர்#MyVikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெட்டுக்குளம் கண்மாய் ஆய்வு
வெட்டுக்குளம் கண்மாய் ஆய்வு

குடிமராமத்து பணியிலாவது கண்மாயை மீட்டு மராமத்து செஞ்சிடலாம்னு போனவாரம்கூட புதுக்கோட்டை கலெக்டர்கிட்டே மனு கொடுத்தேன். ஆனா எதுவுமே நடக்கலை.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகள் அரசின் செவிகளை எட்டுவதற்கு ஏதேதோ செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியொரு காரியத்தைச் செய்து அதிகாரிகளை ஓடவிட்டிருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள கருத்தாயுதக் குழு எனும் அமைப்பு.

அப்படி அவர்கள் என்னதான் செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை... புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ, ஆர்.டி.,ஓ, தாசில்தார், வி.ஏ.ஓ. வேலைக்கு ஆட்கள் தேவை என்ற சுவரொட்டியை ஏரியா முழுவதும் ஒட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கான காரணத்தை, அதில் உள்ள வாசகங்களே அனைவருக்கும் ஓரளவு புரிய வைக்கிறது. அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தாயுதக்குழு யார் என விசாரித்து தொடர்புகொண்டு பேசினேன்.

துரை.குணா
துரை.குணா

`` நான் துரை.குணா, எழுத்தாளர். கருத்தாயுதக் குழு ஒருங்கிணைப்பாளர், நாங்கதான் அந்த போஸ்டரை ஒட்டினோம். குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள வெட்டுக்குளம் கண்மாய் அரசு ஆவணங்களில் மட்டுமே இருக்கு. ஆனால், 8 ஏக்கர் பரப்பளவு உள்ள அந்தக் கண்மாயை சிலர் ஆக்கிரமிச்சு விவசாய நிலங்களாக மாற்றி 30 வருஷமா அனுபவிச்சிட்டு வர்றாங்க. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாயை மீட்டுத் தரணும்னு நாங்க பல வருஷமா மனுக் கொடுத்துட்டு வர்றோம். 2008ல் கலெக்டர், டி.ஆர்.ஓ, தாசில்தார் இப்படி எல்லா அதிகாரிகளுமே வந்து நேரில் ஆய்வு செஞ்சாங்க. அதுக்குப் பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றலை. இந்தக் கண்மாயை மீட்டுத் தரச் சொல்லி எங்க கிராம மக்கள் பல வருஷமா போராடிக்கிட்டு இருக்கோம்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இது சம்பந்தமா வழக்கும் போட்டிருக்கோம். இப்போது நடக்கிற குடிமராமத்து பணியிலாவது கண்மாயை மீட்டு மராமத்து செஞ்சிடலாம்னு போனவாரம்கூட புதுக்கோட்டை கலெக்டர்கிட்டே மனு கொடுத்தேன். ஆனா எதுவுமே நடக்கலை. அதுக்குப் பிறகுதான் இந்தப் புதுவித போஸ்டர் ஒட்டினோம்” என்றவரிடம், `இந்தப் போஸ்டர் பார்த்துட்டு பொதுமக்கள், அரசு அதிகாரிகள்கிட்டே இருந்து என்ன மாதிரியான ரியாக் ஷன் வருது?' எனக் கேட்டேன்.

Lake Map
Lake Map

``அப்பாவி மக்கள் சில பேரு உண்மைதானோனு நினைச்சு மனுவை எங்கே கொடுக்கணும்.. எப்படி அனுப்பணும்.. சம்பளம் எவ்வளவுனு கேட்கிறாங்க. சில பேரு சம்பளம் எல்லாம் சரியாக் கொடுப்பீங்களா.. வேலை நேரம் எவ்வளவு.. ஜீப், பங்களா எல்லாம் கொடுப்பீங்களா.. எனக் கிண்டலா கேட்கிறாங்க. அரசாங்க தரப்பிலிருந்தும் கால் வந்துச்சு. எங்க கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. மட்டும்தான் முதல்லே கால் பண்ணினாரு. அவர் போன் செஞ்சு கருத்தாயுதக்குழுவில எத்தனை பேர் இருக்கீங்க.. யார் தலைவர்னு கேட்டாரு. நான்தான் ஒருங்கிணைப்பாளர். பொதுமக்கள் எல்லோருமே உறுப்பினர்கள்னு சொன்னேன். உங்களை விசாரிக்கணும்னு சொன்னார். எப்போ கூப்பிட்டாலும் வர்றேன். உங்க விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர்றேன்னு சொல்லி இருக்கேன்” என்றார் துரை குணா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சூழலில் போஸ்டர் ஒட்டப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வெட்டுக்குளம் கண்மாயை புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, கறம்பக்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் நலதேவன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழு ஆய்வுசெய்தனர்.

வெட்டுக்குளம் கண்மாய்
வெட்டுக்குளம் கண்மாய்

அவர்கள் முன்னிலையில் நில அளவீடு செய்யப்பட்டது. அதிகாரிகளின் இந்தத் துரித நடவடிக்கை கருத்தாயுதக்குழுவின் நூதனப் போஸ்டர் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி என இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் குளந்திரான்பட்டு வெட்டுக்குளம் 30 ஆண்டுக்கால ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து விடுபடும் என அக்கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு