Published:Updated:

`டெல்லி போராட்டம் 2.0’ - உயர்மின் கோபுரத்துக்கு எதிராகத் தயாராகும் விவசாயிகள்

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்குச் சென்று, ஒரு தீர்வோடு வருவது என்ற முடிவில் தீர்க்கமாக இருக்கின்றனர்.

விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரம்
விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரம் ( ரமேஷ் கந்தசாமி )

கெயில், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் வரிசையில், கொங்கு மண்டலப் பகுதிகளில் விவசாய நிலங்களில் அமைக்கப்படும் ‘உயர்மின் கோபுரங்களால்’ விவசாயிகள் கொதித்துப் போய்க் கிடக்கின்றனர். விவசாய விளை நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டால், பயன்படுத்த முடியாத அளவிற்கு நிலம் பாழாய்ப் போய்விடும் என விவசாயிகள் கதறுகின்றனர். எனவே, ‘ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள உயர் மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய இழப்பீடும், வருட வாடகையும் வழங்க வேண்டுமெனவும், எதிர்காலத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்காமல், சாலையோரமாக புதைவடக் கம்பிகளை அமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பலகட்ட போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்
ரமேஷ் கந்தசாமி

விவசாயிகளின் இந்தப் போராட்டங்களை அரசு கொஞ்சம் கூட செவிகொடுத்துக் கேட்கவில்லை. தமிழக மின்சாரத்துறை அமைச்சரான தங்கமணி, ``உயர்மின் கோபுர திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையே, விவசாய நிலங்களில் போலீஸார் உதவியோடு உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது விவசாயிகளை கொதிப்படைய வைத்திருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று அடுத்தகட்டமாக, உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வரும் ஜூலை 22, 23, 24 ஆகிய மூன்று நாள்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.

பட்ஜெட்: விவசாயிகளுக்கு கிடைத்ததும் கிடைக்காததும்!

நாடாளுமன்றம் நடந்துவரும் வேளையில், அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள விவசாயிகள், ‘உயர்மின் கோபுரம் அமைக்காமல், மாற்று வழியாக கேபிள் அமைத்து சாலையோரங்களில் கொண்டு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் நில உரிமையையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகளை கடுமையாகப் பாதிக்கும் இந்திய தந்திச் சட்டத்தை (1885) ரத்து செய்ய வேண்டும். ஐடிபிஎல், கெயில் குழாய்த் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் PMP ACT - 1963-ஐ ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை உள்ளடக்கிய ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்’ எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதோடு, அதேசமயம் மத்திய மின்சாரத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை, வேணாண் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்களையும், நிதி ஆயோக் குழுவையும் சந்தித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்த உள்ளனர்.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்
ரமேஷ் கந்தசாமி

ஜூலை 20-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ மூலம் விவசாயிகள் டெல்லிக்கு கிளம்ப உள்ளனர். உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் இந்த டெல்லி போரட்டத்திற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு, ஒரு தீர்வோடு வருவது என்ற முடிவில் தீர்க்கமாக இருக்கின்றனர்.