Published:Updated:

விவசாயத்துக்கான நகை அடமானக்கடன் மானியம் ரத்து; வட்டிவிகிதம் உயர்வு! - மத்திய அரசு அதிரடி

விவசாய நகை அடமானக்கடனை, விவசாயிகளுக்குப்பதிலாக, வட்டிக்குப் பணம் கொடுத்து வியாபாரம் செய்பவர்கள்தான் அதிகம் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு பரவலாக இருந்துவருகிறது.

நகை அடமானக்கடன்
நகை அடமானக்கடன் ( vikatan )

விவசாயத்துக்கு வழங்கப்படும் நகை அடமானக்கடனுக்கு வழங்கப்படும் மானியம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் மற்றும் நகை அடமானக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயப் பயன்பாட்டுக்காக நகை அடமானக்கடன் பெறுவோருக்கு 7% வட்டியில் கடன் வழங்கப்பட்டுவந்தது. அந்தக் கடனை ஒரே ஆண்டுக்குள் அடைத்தால் 3% மானியமாக வழங்கப்பட்டு 4% வட்டி மட்டுமே பிடிக்கப்பட்டுவந்தது. தற்போது இந்த நகை அடமானக்கடனுக்கான மானியத்தை நாளை (21.12.19) முதல் ரத்துசெய்வதோடு, வட்டியை 9 சதவிகிதமாக உயர்த்துவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, பொதுத்துறை வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுவருகிறது.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை
vikatan

விவசாய நகை அடமானக்கடனை, விவசாயிகளுக்குப் பதிலாக, வட்டிக்குப் பணம் கொடுத்து வியாபாரம் செய்பவர்கள்தான் அதிகம் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு பரவலாக இருந்துவருகிறது. பொதுமக்களிடம் நகையை அடமானமாகப் பெற்று அதற்கு அதிக வட்டி வசூலிப்பதோடு அந்த நகையை வங்கிகளில் விவசாய நகை அடமானமாக வைத்து 4% வட்டியில் பணம் பெற்று அதிக லாபம் சம்பாதிப்பதாக நிறைய புகார்கள் எழுந்தன. இந்த நகை அடமானக்கடனைப் பெறுவதற்கு, `தான் ஒரு விவசாயி' என்று அறிவிப்புக்கடிதம் கொடுத்தால் மட்டும் போதும். உண்மையில் விவசாய நிலம் இருக்கிறதா என்று சோதனை செய்யவேண்டிய தேவையில்லை. இந்த விதிமுறையை முறைகேடாகப் பயன்படுத்தி பலரும் நகை அடமானக்கடனைப் பெற்று வந்ததால் தற்போது அதைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதன்படி, விவசாயத்துக்கான நகை அடமானக்கடனுக்கான மானிய உதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 7% என்றிருந்த வட்டியை 9 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. விவசாயத்துக்கு குறைந்த வட்டியில் கடன் வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு, `கிஷான் கிரெடிட் கார்டு' மூலமாக 4% வட்டிக்கு, பயிர்க்கடன் மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். அதைப் பெறுவதற்கு விவசாய நிலத்துக்கான பட்டா, அடங்கல் பத்திரங்களோடு, பயிரிட்டுள்ள பயிர் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். விளையும் பயிர், விளைச்சல் நிலத்தின் அளவீட்டின்படி பயிர்க்கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும். இந்தப் பயிர்க்கடன், ஓரளவுக்குப் போதுமானதாக இருக்கும். அதற்கும்மேல் கூடுதலாக விவசாயக்கடன் தேவைப்படுபவர்கள், இனிமேல் 9% வட்டியில் நகை அடமானக்கடன் பெற்றாக வேண்டும்.

விவசாயக்கடன் தேவைப்படும் விவசாயிகள்
விவசாயக்கடன் தேவைப்படும் விவசாயிகள்
vikatan

விவசாயத்துக்கான நகை அடமானக்கடன் வட்டிவிகிதம் உயர்த்தப்படுவதால் அதை முறைகேடாகப் பயன்படுத்துவது கட்டுப்படக்கூடும். அதேவேளை, அதை நம்பியிருக்கும் சிறு விவசாயிகளுக்கு பாதகமாகக்கூடும். எனவே, நகை அடமானக்கடனுக்கும் விவசாய நிலச் சான்றுகளைச் சரிபார்த்து மானியத்தோடு கடன் வழங்கினால் நல்லது என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.