Published:Updated:

`மகாத்மா ஜோதிராவ் பூலே' திட்டம்! - விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது மாநில அரசு.

Agriculture
Agriculture

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு. இந்த ஆண்டு வெங்காய விலையால் மத்திய, மாநில அரசுகள் ஆடிப்போயின. இந்தியாவில் அதிகளவு வெங்காயம் விளையும் மாநிலம் மகாராஷ்டிரா. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும், வறட்சி, மழை காரணமாகப் பல விவசாயிகள் கடனில் சிக்கித் தவிக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலின்போது, சிவசேனா ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உத்தவ் தாக்கரே வாக்கு கொடுத்திருந்தார். இந்நிலையில், மாநில அரசின் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. ``2019 செப்டம்பர் 30-ம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிர்க் கடன்கள் எனது அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்படும்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி ஆகும். இந்தத் திட்டம் மகாத்மா ஜோதிராவ் பூலே கடன் தள்ளுபடித் திட்டம் என்று அழைக்கப்படும்' என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். தள்ளுபடி தவிர, கடன்களைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்குச் சிறப்புத் திட்டம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனால், முழுமையான கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. உச்ச வரம்பு தேவையில்லாதது எனக் குற்றம் சாட்டி, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபையை விட்டு வெளிநடப்பு செய்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ``முழு கடன் தள்ளுபடி குறித்த அசல் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை'' எனக் குற்றம் சாட்டியுள்ளார். தள்ளுபடியைத் தொடர்ந்து பல்வேறு விவசாயச் சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.