Published:Updated:

பனை விதைகளுக்கு ரூ.10 கோடி... சிறுதானியங்களுக்கு ரூ.13 கோடி

தமிழக சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழக சட்டசபை

வரிசை கட்டும் விவசாய அறிவிப்புகள்!

அறிவிப்பு - பசுமைக் குழு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஜூலை 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. ஜூலை 16-ம் தேதி 110 விதியின்கீழ் விவசாயம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த அறிவிப்புகள் கீழே இடம் பெறுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
 • வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பனைமரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

 • நடப்பாண்டில், மிக நீள இழைப்பருத்தி ரக விதைகள், உயிர் உரங்கள், பருத்தி அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடுபொருள்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 • சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்களைக் குறைந்த நீரில் சாகுபடி செய்ய முடியும் என்பதோடு, மண்வளம் குறைவான நிலப்பகுதியிலும் சாகுபடி செய்ய இயலும். எனவே, இப்பயிர்களின் சாகுபடியினை அதிகரிக்க நடப்பாண்டில் 13 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 • சென்னை, வண்ணாரப்பேட்டையில் வேளாண் பொறியியல் துறைக்குச் சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நகரப்புற மக்களைக் கவரும் வகையில் ‘தோட்டக்கலை பாரம்பர்ய பூங்கா’ அமைக்கப்படும்.

 • கரும்பு விவசாயிகள், குறித்த நேரத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக நடப்பாண்டில், 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கூடுதலாகக் கரும்புச் சாகுபடி இயந்திரங்களுக்கான 10 வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

 • மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக, நடப்பாண்டில் மேலும் 150 மதிப்புக்கூட்டும் மையங்களை உருவாக்குவதற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 • இந்த ஆண்டு, 243 கிராம அளவிலான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் 19 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

 • வேளாண் இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் விலைக்கு வாங்க 70 கோடியே 30 லட்சம் ரூபாய் நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.

 • தென்னை அதிகம் சாகுபடி செய்யும் மாவட்டமான கன்னியாகுமரியில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் ஒன்று 16 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

 • நடப்பாண்டில், 12 கோடி ரூபாய் செலவில், 20 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் விதைச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

 • விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்ய 90 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், 100 உழவர் சந்தைகளிலும் கூடுதலாகக் கடைகள், மின்னணு எடைமேடை, கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் 268 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தித் தரப்படும்.

 • உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் வசதி பெற்றுத் தொழில் துவங்க, நபார்டு வங்கியின் நாப்கிசான் (NABKISAN) நிதி நிறுவன உதவியுடன் நடப்பாண்டில், 266 கோடி ரூபாய் வரை கடன் உதவி அளிக்கப்படும்.

 • மதுரை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில், பண்ணை அளவில் விளைபொருள்களைப் பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய அளவிலான குளிர்பதன அலகுகளை நிறுவிடத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், 100 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

 • கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில், பழங்கள், காய்கறிகள் மற்றும் விரைவில் அழுகும் ஏனைய பொருள்களுக்கான விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும். மேற்கண்ட 10 மாவட்டங்கள் தவிர சேலம், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில், இத்திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.

 • பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்குப் பாசனநீர்க் குழாய்களை நிறுவுதல், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இப்பணிகளுக்காக நடப்பு ஆண்டிலும், 116 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

 • கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சர்வதேச மலர்கள் ஏல மையம் 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.