நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மத்திய பட்ஜெட் 2020-21 வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்...

பட்ஜெட் பரிந்துரை

2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்த முறை வேளாண் தொடர்பாக பட்ஜெட்டில் இடம்பெறவிருக்கும் அம்சங்கள் குறித்து, பொதுமக்களிடமும் நிறுவனங்களிடமும் கருத்துகளைக் கேட்டிருக்கிறது மத்திய நிதி அமைச்சகம். விவசாயம், பாசனம், சுற்றுச்சூழல் தொடர்பாக துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு, விவாதித்து தேவையான பரிந்துரைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது பசுமை விகடன்.

மத்திய பட்ஜெட் 2020-21 வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்

இதற்கான கலந்துரையாடல் கூட்டம் சென்னை, மெட்ரோ மேனர் ஹோட்டலில் கடந்த நவம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. பொருளாதார நிபுணர் வ.நாகப்பன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், வேளாண் ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி, மூத்த பொறியாளர் வீரப்பன், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பூவுலகு சுந்தர்ராஜன், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஆலோசகர் ராம சுப்ரமணியன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

1. கடன் தள்ளுபடி

 • தற்போது கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை பிணையம் மற்றும் வட்டி இல்லாமல் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இதை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தக் கடன் தொகையை 3 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும்.

 • வறட்சி, வெள்ளக் காலங்களில் பயிர்களுக்காக வாங்கிய கடனை அரசாங்கமே ஈடுசெய்ய வேண்டும். `நிவாரணம்’ என்ற பெயரில் வழங்கும் தொகை போதுமானதாக இருப்பதில்லை என்பதால், வங்கிக்கடனை அரசாங்கமே செலுத்த வேண்டும்.

 • `இயந்திரங்களுக்காக வாங்கிய கடனில் வட்டியைத் தள்ளுபடி செய்துவிட்டு, அசலை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும்’ என்று அறிவிப்பது விவசாயிகளின் சுமையைக் குறைக்கும்.

 • உரிய காலத்துக்குள் பயிர்க்கடன் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த கடன்களைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டிச் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிச் செலுத்த முடியாதவர்களிடமிருந்து கூடுதல் வட்டி வசூலிக்கக் கூடாது. ஏற்கெனவே அறிவித்த வட்டி சதவிகிதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.

 • இந்தச் சலுகைகளைச் சிறு, குறு மற்றும் அனைத்து விவசாயிகளும் முழுமையாகப் பயனடையும் வகையில் அமலாக்க வேண்டும். வியாபார நோக்கில் செயல்படும் பெருநிறுவனங்கள்/பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு இந்தச் சலுகை வழங்கப்படக் கூடாது.

 • மத்திய, மாநில வங்கிகள் விவசாயக் கடன்களை வழங்கும்வகையில் தனியாக வைப்பு நிதியைப் பராமரிக்க வேண்டும்.

 • எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி (சி2+50%) உற்பத்திப் பொருள்களுக்கு சாகுபடிச் செலவோடு 50 சதவிகித விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதை அமல்படுத்தும் வரை பயிர்ச்சேதம் ஏற்பட்டால், கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

 • விவசாயம் சாராதவர்கள், `விவசாயம்’ என்ற பெயரில் இயங்கிவரும் பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாயக் கடன்களை வழங்கக் கூடாது. அப்படி அந்த நிறுவனங்கள் வாங்கியிருந்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

 • விவசாயிகள் பாதிக்கப்படும்போது, கார்ப்பரேட் பொதுசேவைத் திட்டத்தின்கீழ் (Corporate Social Responsibility) உதவிகளை வழங்கும்வகையில் அந்த விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இதற்கான விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். நேரடியாக விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

 • வங்கிகளில் பயிர்க்கடனுக்கான நிதி ஒதுக்கீட்டை 30 சதவிகிதம் உயர்த்த வேண்டும்.

‘‘தனிநபர் இன்ஷூரன்ஸ்போல, தனி விவசாயியின் பயிர் பாதிப்புக்கு ஏற்ப (Individually) இழப்பீட்டுத் தொகை வழங்குமாறு மாற்றியமைக்க வேண்டும்.’’

2.விவசாயக் கடன் விவசாயிகளுக்கே!

 • சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் பாதிக்கப்படும்போது, அவர்களின் வங்கிக் கடன்களை ஈடுசெய்யும் வகையில் தனியார் நிறுவனங்கள் வங்கிகளுக்குப் பணத்தைச் செலுத்திவிடுகின்றன. சம்பந்தபட்ட தொழில்நிறுவனங்களிடமிருந்து குறைந்தவட்டியுடன் இவை வசூல் செய்துகொள்கின்றன.

இதேபோல விவசாயிகள் பாதிக்கப்படும்போதும் பிற நிறுவனங்கள் முதலீடு வழங்கி உதவும் முறையை உருவாக்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் பினாமி கடன் பெறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி, அந்தக் கடன்களை வழங்கிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • விவசாயிகளுக்குப் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீட்டு உதவிகளை வழங்க வேண்டும்.

3. சுழல் நிதி

 • விவசாயிகளின் வருமானப் பாதுகாப்புக்காக (Income Security) சுமார் 2 லட்சம் கோடி நிதியை இருப்பு வைக்க வேண்டும். இந்த நிதியை பயிர்ச்சேதமடையும் போதும், பேரிடர் காலங்களின்போதும் அவர்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

 • விவசாயம் செய்பவர்களுக்குக் குறைந்தபட்ச மாத வருமானம் கிடைக்க வழிசெய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயக் குடும்பங்களின் தேவைகளை ஈடுகட்ட முடியும். அதற்கு வருமானப் பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும்.

4. மானாவாரி பயிர்களுக்கு ஊக்கத்தொகை

 • விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்களை உயர்த்த வேண்டும். குறிப்பாக மானாவாரி உணவுப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம் வேண்டும்.

60 சதவிகித விவசாய மக்கள் மானாவாரி விவசாய முறை செய்வதால், அவர்களுக்காகச் சிறப்புத் திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.

5. பயிர்க் காப்பீடு

 • பயிர்க் காப்பீடு முறையிலுள்ள குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும். கிராம அளவில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே தற்போது இழப்பீடு என்ற முறை உள்ளது. இதை, தனிநபர் இன்ஷூரன்ஸ்போல தனி விவசாயியின் பயிர்ப் பாதிப்புக்கு ஏற்ப (Individually) இழப்பீட்டுத் தொகை வழங்குமாறு மாற்றியமைக்க வேண்டும்.

 • குறிப்பிட்ட விளைச்சல் தரவுகளை (அதாவது ஒரு ஏக்கருக்கு சராசரியாக எவ்வளவு மகசூல் உத்தரவாதமாகக் கிடைக்கும்) அடிப்படையாகவைத்து காப்பீடு வழங்க வேண்டும்.

 • விவசாயக் காப்பீடு விஷயத்தில் தனியார் நிறுவனங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும்.

 • பிரீமியம் தொகையில் விவசாயி, மத்திய மற்றும் மாநில அரசுகள் என மூன்று பங்கு உண்டு. பிரீமியம் தொகையை விவசாயிகளிடமிருந்து பெறாமல் மத்திய, மாநில அரசுகளே அளிக்க வேண்டும்.

 • தோட்டக்கலைப் பயிர்களுக்குப் பிரீமியம் தொகை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைக் குறைத்து, அனைத்துப் பயிர்களுக்கும் ஒரே மாதிரியான பிரீமியம் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.

 • காப்பீட்டுத் திட்டத்திலிருக்கும் மறைமுகச் செயல்பாடுகளைத் தவிர்த்து வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். தற்போது காப்பீட்டு நிறுவனங்கள், பாலிசி ஆவணங்களை விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. அந்த நிலையை மாற்றி, காப்பீட்டு நிறுவனத்துக்கும் விவசாயிக்குமான ஒப்பந்த நகல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

  6. சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை மீட்க...

 • மாநிலப் பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதில், பேரிடர்கள் ஏற்படும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 • பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 • தேசியப் பேரிடர் எதிர்ச்செயல் நிதிக்கென, குறைந்தபட்சம் 1 லட்சம் கோடியாவது ஒதுக்க வேண்டும். 50 சதவிகித விவசாய இழப்புகளை, தேசியப் பேரிடர் எதிர்ச்செயல் நிதியின்கீழ் கொண்டுவர வேண்டும்.

‘‘உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருக்கிறது. இதன் அளவை பாதியாகக் குறைக்க வேண்டும்.’’
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்...
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்...

7. சந்தைப்படுத்துதல் ஆதரவு நிதி (Marketting Supporting Fund)

 • விளைபொருள் விலை வீழ்ச்சியடையும்போது மத்திய, மாநில அரசுகள் அந்த விளைச்சலுக்குக் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது விலைப் பாதுகாப்பை (Price Protection) உறுதி செய்ய வேண்டும்.

8.நிலையான விலை கிடைக்க நிதி

 • நிலையான விலையை நிர்ணயிப்பதற்கான நிதி ஒதுக்க வேண்டும். சந்தையில் விலை வீழ்ச்சியடைந்தாலும், விவசாயிகள் அதனால் பாதிக்கப்படாதவாறு இருக்க வேண்டும் (Price Stabilisation Fund).

9.பொதுச்சந்தையிலும் ஆதரவு விலை

 • பொதுச்சந்தையில் அரசுத் தலையீடு மற்றும் ஆதரவு விலை வேண்டும் (Market Intervention and Price Support Scheme).

10. தேசிய விவசாயிகள் பதிவேடு

 • தேசிய - குடிமக்கள் பதிவேடுபோலவே விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாய நிலங்கள் அடங்கிய பதிவேடுகளைத் தயாரித்து, சரியாகப் பராமரிக்க வேண்டும். இற்கான கணக்கெடுப்பைச் சரிவர நடத்த வேண்டும். ஆதார்போல இந்தப் பதிவேட்டிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் முழுமையான தகவல்கள் இடம்பெற வேண்டும்.

 • ஆண் விவசாயிகள், பெண் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரையும் இந்தக் கணக்கெடுப்பில் கொண்டுவர வேண்டும். பொய்யான நபர்கள் `விவசாயிகள்’ என்ற பெயரில் சலுகைகளை அனுபவிப்பதைத் தடுக்க இது உதவும்.

11. நிலத்தடி நீர்ச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்.

 • காலநிலை மாற்றத்தைக் கணக்கில்கொண்டு, தொடர்ந்து கொண்டிருக்கும் வறட்சியைக் கட்டுப்படுத்த நிலத்தடிநீர்ப் பாதுகாப்பை அவசியமாக மேற்கொள்ள வேண்டும்.

 • தேசிய நிலத்தடிநீர்ப் பாதுகாப்புச் சட்டம் தேவை.

 • ஒவ்வோர் ஐந்து ஏக்கருக்கும் ஒரு பண்ணைக் குளத்தை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும்.

 • நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளையும் மீட்டெடுத்து, பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும். நீர்நிலைகளின் எல்லைகளை வரையறுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். உள்ளூரைச் சேர்ந்த விவசாயிகள், பொதுநல அமைப்புகள் உள்ளிட்டோர்கொண்ட குழுக்களை உருவாக்கி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டும். இதற்கென 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தனித் திட்டம் கொண்டுவர வேண்டும்.

 • அந்த நிதியின் மூலம் சிறிய மற்றும் பெரிய அணைகளை ஆழப்படுத்த வேண்டும்.

12. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை மறுபரிசீலனை

 • 2006-ம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை வழங்கப்பட்டது. தற்போது 14 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில், அந்த அறிக்கையிலிருக்கும் விஷயங்களை அப்படியே கணக்கில்கொள்ளாமல் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உற்பத்திச் செலவு உள்ளிட்ட அனைத்தும் விவசாயிகளின் நலனுக்காக, தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு திருத்தி அமைக்கப்பட வேண்டும். லாபகரமான, நியாயமான விலையை விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

13. விவசாய கமிஷன்

 • விவசாயச் சீர்திருத்தத்துக்கு என நிரந்தரமாக ஒரு கமிஷன் அமைக்க வேண்டும்

14. இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை

 • `ஜீரோ பட்ஜெட் வேளாண்மை ஊக்கப்படுத்தப்படும்’ என்று 2019-20-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கெனத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதேபோல ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் அனைத்துவிதமான பாரம்பர்ய இயற்கை வேளாண் முறைகளையும் அரசாங்கம் ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கேற்ப அனைத்துவிதமான இயற்கை வேளாண்மை முறைகளையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்.

 • ரசாயனங்களற்ற பயிர்ப் பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 • மரபுவிதைக் கூடங்கள், விதைப் பதிவேடு உருவாக்க நிதி ஒதுக்க வேண்டும்.

 • ரசாயன உரங்களற்ற விவசாய முறைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்க வேண்டும். (Individual Fund allocation for all non-chemical farm approaches-Agro-Ecology).

 • இயற்கை விவசாயத்தின் மூலமாக, சூழலியல் பாதுகாப்புக்குப் பங்களிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்கும் திட்டம் வேண்டும். (Incentivise ecological services).

 • நாடு முழுக்க இயற்கை விவசாயத்தைக் கொண்டுவர, தனிக்குழு அமைக்க வேண்டும்.

 • இயற்கை வேளாண்மைக்கு என தனிக் கொள்கைகள் வேண்டும்.

15.பாதுகாப்புத்துறைக்கு இணையாக விவசாயத்துக்கும் நிதி

 • பட்ஜெட்டில் ஒவ்வோர் ஆண்டும் விவசாய நிதி ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரித்து, அடுத்த ஐந்தாண்டுகளில் பாதுகாப்புத்துறைக்கு நிகராக விவசாயத்துறைக்கும் நிதி ஒதுக்க வேண்டும். அதற்கான தொடக்கமாக, 2.5 சதவிகிதமாக இருக்கும் விவசாய நிதி ஒதுக்கீட்டை, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 5 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். (Agri funds equal to Defence fund in next 5 years gradually. Especially In this budget increase it to 5%.)

16. காலநிலை மாதிரி

 • இந்தியாவுக்கென, தனி காலநிலை மாதிரியை வடிவமைக்க வேண்டும் (India’s unique climate model).

 • ஒவ்வொரு மாநிலத்திலுமே பலவிதமான காலநிலை நிலவுவதால், மண்டலவாரியாகப் பிரித்தறியும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். உள்ளூர் நிலவியல் அமைப்புகளை, காலநிலைகளை, விவசாய முறைகளைக் கணக்கில்கொண்டு, காலநிலை மாதிரியை உருவாக்க வேண்டும்.

17. மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு

 • மேற்குத் தொடர்ச்சி மலைச் சூழலியல் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்.

 • மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைப் பாதுகாக்க, சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

 • மாதவ் காட்கில் தலைமையிலான அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் சூழலியல் மண்டலங்கள் 1, 2, 3-ஐ உருவாக்க வேண்டும்.

18. எண்ணிக்கை குறைக்க வேண்டும்

 • உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கான (Farmers Producer Organisation) இப்போதிருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதன் அளவை பாதியாகக் குறைக்க வேண்டும்.

19. விளைபொருள்களுக்கு தனிச் சரக்கு நிலையம்

 • ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை இருப்புவைக்கும் குடோன்களிலேயே விவசாய விளைபொருள்களும் வைக்கப்படுகின்றன. இது ஆபத்தானது. விளைபொருள்களுக்கு எனத் தனியாகக் கொள்கலன் சரக்கு நிலையம் (Container Fright station) வேண்டும்.

20. தரப் பரிசோதனை நிலையம்

 • பால், இயற்கை விளைபொருள்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான உணவுப் பொருள்களின் தரத்தைப் பரிசோதித்து அறியும் வகையில் ஆய்வுக்கூடங்களை, மாநிலந்தோறும் மண்டலவாரியாக அமைக்க வேண்டும்.

 • விளைபொருள்களில் பூச்சிக்கொல்லியின் தாக்கம், அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் இருக்கிறதா என்பது உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்வதற்கு ஏற்ப பரிசோதனை மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். பரிசோதனைக்கான கட்டணத்தில் 50 சதவிகிதத் தள்ளுபடி அளித்து, பரிசோதனையை ஊக்குவிக்க வேண்டும்.

 • சுதந்திர தின விழாவில் மண்வளத்தைக் காக்க வேண்டிய அவசியத்தைப் பற்றிப் பிரதமர் பேசியதுபோல், பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாட்டை அடுத்த ஐந்தாண்டுகளில் படிப்படியாகக் குறைப்பதை ஆண்டுதோறும் உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

21. சான்றளித்தல்

 • அரிசி, பருப்பு போன்ற ஏற்றுமதி செய்யும் உணவுப் பொருள்களுக்கு ஆரோக்கியச் சான்றிதழ் வழங்க தாமதமாகிறது. அதைக் களைய ஏற்பாடு செய்ய வேண்டும்.

 • இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்த பொருள்களுக்கு இயற்கை வேளாண் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். சான்றிதழ் பெறுவதற்கு விவசாயிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டணத்தை நீக்க வேண்டும்.

22. ஏற்றுமதிக்கு மானியம்

 • விவசாயப் பொருள்கள் ஏற்றுமதிக்கு மானியம் வழங்க வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதியும் அதிகரிக்கும்; விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்.

 • சர்வதேச வர்த்தக மற்றும் வணிக ஒப்பந்தங்கள் இந்தியாவுக்குப் பயனளிக்கின்றனவா என்பதை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

 • வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

23. கால்நடைப் பாதுகாப்பு

 • இந்தியாவில் உள்ள பாரம்பர்ய கால்நடை இனங்களைப் பாதுகாக்க சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும். பாரம்பர்ய கால்நடைகளின் பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தியை பெருக்க, தனி கவனம் செலுத்த வேண்டும்.

24. ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இருக்கும் 100 நாள் வேலைத் திட்டம், இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். பயிர்ச் சாகுபடி நடக்கும் காலங்களில், இந்தத் திட்டம் விவசாய வேலைகளுக்கு மட்டுமே பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும். அதாவது, விவசாய வேலைகளுக்கு வரும் தொழிலாளர்களுக்குக் கூடுதல் ஊக்கத்தொகையாக இந்தத் திட்டத்தின் நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.

25. கல்வித்திட்டம்

 • விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கல்வியை, பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். அவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கானதாக இல்லாமல், அந்தந்த மாநிலங்களின் சூழலியல் மற்றும் பயிர்களுக்கு ஏற்றவகையில் இடம்பெற வேண்டும்.

26.லாபகரமான விலை

 • லாபகரமான, நியாயமான விலையை விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

27. சூழலியல் கணக்கெடுப்புகள்

 • ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி வாரியாக சூழலியல் கணக்கெடுப்புகள் மக்கள் பங்களிப்போடு நடத்தப்பட வேண்டும். அதற்காகப் பல்லுயிர்வள மேலாண்மைக் கமிட்டி அமைக்க வேண்டும்.

28. விவசாயிகளுக்குப் பென்ஷன் வழங்கும் திட்டம் வேண்டும்

 • இந்திய அரசு, விவசாயிகளுக்குப் பென்ஷன் வழங்கப் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அது பாராட்டுக்குரியது. இருந்தாலும், அதை இன்னும் மேம்படுத்தி விரிவுப்படுத்த வேண்டும். நாடு முழுக்க அனைத்து மாநிலங்களிலும் 58 வயதுக்கு மேற்பட்ட கிராமப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆண், பெண் வேறுபாடில்லாமல் மத்திய, மாநில அரசுகள் பென்ஷன் வழங்க வேண்டும்.அதிலும், பெண் விவசாயிகள், பெண் விவசாயத் தொழிலாளர்களுக்குச் சிறப்புத் திட்டம் வேண்டும். கிராமப்புறங்களில் போதை மீட்பு மறுவாழ்வு மையங்கள் அமைக்கவேண்டும்.

இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசிடம் சேர்க்கும் பணியில் பசுமை விகடன் ஆசிரியர் குழு ஈடுபட்டுள்ளது.