Published:Updated:

`ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000; 1லி பாலுக்கு ரூ.60' - பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரைக் கூட்டத்தில் ஒலித்த குரல்!

விவசாயிகள் கூட்டம்
விவசாயிகள் கூட்டம்

பசுமை விகடன் நடத்திய மத்திய, மாநில பட்ஜெட் 2020-21 கூட்டத்தின் சிறப்பம்சங்கள்...

ஆட்சியிலிருக்கும் கட்சியின் தேர்தல் அறிக்கைகள், அப்போதைய பொருளாதார சூழல்... இவற்றுக்கு ஏற்றவாறுதான் ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டின் சாராம்சங்கள் இருக்கும். இந்த முறை மத்திய நிதியமைச்சகம், `பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து, பொதுமக்கள், அமைப்புகள், நிறுவனங்களும் பரிந்துரைக்கலாம்' என்று அறிவித்திருந்தது.

இதையடுத்து, வேளாண்மை குறித்து விவாதித்து, பரிந்துரைகளை அனுப்பும் நோக்கில் பசுமைவிகடன், `மத்திய, மாநில நிதிநிலை 2020-21 வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்’ என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. பொருளாதார நிபுணர்கள், ஏற்றுமதி நிபுணர்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் பேசும்போது, "ஐம்பது ஆண்டுக்காலமாகப் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்களுக்கான மானியம், கடன் தள்ளுபடி, விளைபொருளுக்கு மானியம், இலவச மின்சாரத்துக்கு மானியம் என்று கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்குக் கிடைத்த நன்மை என்ன? அவர்களுடைய விளைபொருள் விற்பனை சரியாக இருக்கிறதா, அவர்களுடைய வாழ்வு மேம்பட்டிருக்கிறதா என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். எல்லாவிதமான வருமானத்துக்கும் வரி இருப்பதுபோல், விவசாய வருமானத்துக்கும் வருமான வரி விதிக்க வேண்டும். அந்தத் தொகையை மற்ற வருமான வரி தொகையைப் பொதுக்கணக்கில் சேர்ப்பதுபோல் அல்லாமல், விவசாய வரி மூலம் கிடைக்கும் பணத்தை விவசாயத்துக்கான வளர்ச்சிக்கே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் விவசாயத்துக்குக் கூடுதல் பலன் கிடைக்கும்” என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி, "எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி, `உற்பத்தி செலவோடு 50 சதவிகித விலையைக் கூட்டி நிர்ணயிக்க வேண்டும்' என்றது. ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏக்கருக்கான நெல் உற்பத்தி செலவு ரூ.1,900 என்றது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். ஆனால், அரசு ரூ.1,700தான் கொடுக்கிறது. உண்மையில் இது போதாது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 விலை நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாகப் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை இல்லை.

ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய ரூ.40 செலவாகிறது. உற்பத்தி செலவோடு 50 சதவிகிதம் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி பார்த்தால், ஒரு லிட்டருக்கு ரூ.60 வழங்க வேண்டும்.
இந்தியச் சந்தையைக் குறிவைக்கும் பன்னாட்டுப் பால் நிறுவனங்கள்!

அப்படி வழங்கினால் கிராமங்களில் ஒரு மாடு, இரண்டு மாடுகள் வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்குப் பால் உற்பத்தி லாபகரமானதாக இருக்கும். இன்னொன்று பால் பண்ணைத் தொழிலும் லாபகரமானதாக மாறும். மற்ற துறைகளில் இருப்பவர்களும் பால் உற்பத்தியை நோக்கி வர அதிகம் வாய்ப்பிருக்கிறது. அதேபோன்று விவசாயிகளுக்காகச் சுழற்சி நிதி (ரிவால்விங் பண்டு) என்று ஒரு லட்சம் கோடியை உருவாக்க வேண்டும். இதை விவசாயிகளுக்குக் கடனாக இல்லாமல், அவர்கள் நலிவுறும் காலத்தில் அதாவது கடினமான சூழலில் கொடுத்து உதவினால் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க முடியும்” என்றார்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், "விவசாயத்தில் உத்தரவாதமான வருமானம் இல்லை. ஏனென்றால், அரசு விளைபொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. காரணம் விலை உயர்ந்தால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்று. இதைத் தளர்த்த வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இவ்வளவு நிலம் வைத்திருக்கிறார் என்றால், அவருக்கு அதற்குத் தகுந்த வருமானம் ஆண்டுக்கொருமுறை கிடைக்கிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஒரு திட்டமாக இருக்கிறது. அதைச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

விவசாயத்துக்குக் கொண்டுவரப்படும் திட்டங்களில் பெரும்பான்மையானவை இறவை பாசன விவசாயத்துக்கு மட்டுமே அதிகமாக இருக்கிறது. மானாவாரி விவசாயம் அதில் வரவில்லை. துவரம் பருப்பை ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மானாவாரி நிலங்களில் துவரையை உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை இல்லை. இனிவரும் நிதிநிலைகளில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் ஒவ்வொரு பயிருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஏனென்றால் அங்கு விளைபவைதான் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு உடல் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.

அதேபோன்று பெண் விவசாயிகள் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. பட்ஜெட்டில் அவர்களுக்கு ஒரு ஒதுக்கீடு இருக்க வேண்டும். குத்தகை விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை இல்லை. அவர்களையும் விவசாயிகளாக அங்கீகரித்து நிலமுள்ள விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளை அவர்களுக்கும் வழங்க வேண்டும். அதேபோன்று காடுகளில் பயிர் செய்யும் பழங்குடி விவசாயிகளையும் காக்க வேண்டும். கேரளாவில் கடன் நிவாரணக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு விளைபொருளை விற்க முடியவில்லையென்றாலோ, அதன்மூலம் கடன் ஏற்பட்டாலோ அந்தக் குழு உதவி செய்கிறது. அதைப் பின்பற்றி மத்திய அரசும் இதை இந்தியா முழுக்கச் செயல்படுத்த முயல வேண்டும். இந்திய விவசாயத்தில் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. அதை பட்ஜெட்டிலும் சேர்க்க வேண்டும். அதற்கேற்றவாறு திட்டங்களை வகுக்க வேண்டும்” என்றார்.

அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி "'ஊழின் பெருவலி யாவுள’ என்று தமிழ் இலக்கியம் சொல்கிறது. அந்த ஊழ்வினைதான் தற்போது இருக்கும் பருவநிலை மாற்றம். பூமியில் தண்ணீர் இல்லை. இருக்கிற தண்ணீரையெல்லாம் உறிஞ்சி மானாவாரி நிலங்களை இறவை நிலங்களாக மாற்றிவிட்டோம். இன்று அந்த இறவை நிலங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்துகொண்டிருக்கின்றன. இதற்குத்தான் பயிர்வாரி முறையைச் சட்டமாக்க வேண்டும் என்று கூறுகிறோம். இன்னின்ன நிலங்களில் இந்தப் பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும் என்று சட்டமியற்றினால்தான், இருக்கும் நிலங்களைக் காப்பாற்ற முடியும். தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து மீள முடியும். குடிநீரின் அவசியத்தைக் கணக்கில் கொண்டு ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதைக் குறைக்க வேண்டும். பூமியில் நிலத்தடி நீர் குறையாமல் இருக்கச் சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.

தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், “1990களில் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளால் இந்திய விவசாயம் ஒதுக்கப்பட்டு, கார்ப்பரேட் வளங்கொழிக்கவும், ஜி.டி.பியை உயர்த்தவுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் விளைவுகளைத்தான் இன்று விவசாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகள். இந்தியாவிலுள்ள 328 மில்லியன் ஹெக்டேர் நிலங்களின் நிகர சாகுபடி பரப்பளவு 141 மில்லியன் ஹெக்டேர். இவற்றில் 68 மில்லியன் இறவைச் சாகுபடி நிலங்கள், அதிலும் 45 மில்லியன் நிலங்கள் நிலத்தடி நீரை நம்பிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 6,40,000 கிராமங்களில் ஒன்றரை லட்சம் கிராமங்களை நகரங்கள் விழுங்கிவிட்டன. மீதியிருக்கும் 5 லட்சம் கிராமங்களில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நுண்ணிய அளவில் திட்டமிடல் மற்றும் செயலாக்கம் மூலமாகப் பசுமை கிராமங்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் 2030-க்குள் இந்தியாவில் தன்னிறைவான கிராமங்கள் உருவாகிவிடும். இதுதான் இன்றைய இந்திய விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும். இதைப்பற்றி ஜே.சி.குமரப்பா தெளிவான வரையறை வகுத்துள்ளார். அதை நாம் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் அரைமணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்று சொல்கிறது கணக்கெடுப்பு.

விவசாயி
விவசாயி
ம.அரவிந்த்
பாதுகாப்புத் துறைக்கு 16 சதவிகிதத் தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. அதாவது சுமார் 4 லட்சம் கோடி. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்துக்கு 2 சதவிகிதத்துக்கு மேல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கிடையாது. பாதுகாப்புத் துறைக்கு இணையாக விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

இந்திய விவசாயிகளைப் பாதிக்காத அளவுக்கு இறக்குமதி விதிகள் இருக்க வேண்டும். கடன் தள்ளுபடி செய்யக்கூடாது. 2008லிருந்து கடன் தள்ளுபடியால் பெரிய பலன்கள் விவசாயிகளுக்குக் கிடைத்துவிடவில்லை. விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில், தேவையான நேரத்தில் கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்கு 4 சதவிகிதத்துக்கு மேல் வட்டி இருக்கக்கூடாது.”

 ``நஞ்சற்ற விவசாயம்... நல்ல மகசூல்..!"- கலக்கும் காரைக்குடி விவசாயிகள் #MyVikatan

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, ஆலோசகர் ராம சுப்ரமணியன், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, பூவுலகு சுந்தர்ராஜன், வேளாண் ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன், மூத்த பொறியாளர் அ.வீரப்பன், வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோர் இந்த பட்ஜெட் கூட்டத்தில் பேசினர். அனைவரின் கருத்துகளையும் பதிவு செய்து அதுகுறித்து விவாதித்து, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

பின் செல்ல