Published:Updated:

30 ஏக்கருக்கு ஒரு மாடு... வேலி யாருக்கும் சொந்தம்... பல்லுயிர் நிர்வாகக் குழு!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

30 ஏக்கருக்கு ஒரு மாடு... வேலி யாருக்கும் சொந்தம்... பல்லுயிர் நிர்வாகக் குழு!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளோம். இதற்கு நாட்டு மாட்டுச் சாணத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? 5 ஏக்கர் நிலத்துக்கு எத்தனை நாட்டு மாடுகள் வேண்டும்?’’

சி.கணேசன், தொட்டியம்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இயற்கை வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் பதில் சொல்கிறார்.

‘‘சுபாஷ் பாலேக்கர் இயற்கை வேளாண்மை (ஜீரோ பட்ஜெட்) முறையில் விவசாயம் செய்ய முன் வந்துள்ளதற்கு வாழ்த்துகள். நான் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளில் இதைப் பற்றிக் கட்டாயம் சொல்லி வருகிறேன். பசுமை விகடன் இதழிலும் பல முறை இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது. உங்களைப் போன்ற புதியவர்களுக்காக மீண்டும் இதைச் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

மண்புழுக்கள் மண்ணில் பொதிந்து கிடக்கும் சத்துகளை வெளியே கொண்டுவந்து பயிர்களுக்குக் கொடுக்கும் பணியைச் செய்து வருகின்ற மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றல் நம் நாட்டுமாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு. இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்துவிட்டால் போதும், மண்புழுக்கள் அங்கு வந்துவிடும். நிலத்தில் கீழே, மேலே என்று மாற்றி மாற்றிச் சென்றுகொண்டே இருக்கும். பொழிகின்ற மழை நீர், இதன் காரணமாக உங்கள் நிலத்தில் இறங்கி நீர்மட்டம் உயரும்.

மாடுகள்
மாடுகள்

பயிருக்கு வேண்டிய சத்தான உரத்தை ஒரு பக்கம் கொடுப்பது மட்டுமல்லாமல், நீர்ச்சேமிப்புக்கும் அவை உதவுகின்றன. மண்புழுக்களின் உடல் மீது நீர்பட்டால் அதுவும் உரமாக மாறிவிடும். இதை ‘வெர்மி வாஷ்’ என்று சொல்கிறார்கள். பயிர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் திறனும், அதிகமாகக் காய்ப்பிடிக்க வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

மண்புழுக்களை அதிகமாகப் பெருக்க வேண்டும் என்றால் நாட்டுப் பசுமாடு அவசியம். ஏறத்தாழ நாட்டு மண்புழுவும், நாட்டுப் பசுமாடும் நகமும் சதையும் போல, நாட்டு மாட்டுச் சாணத்தில் மட்டுமே மண்புழுக்கள் அதிக அளவில் பெருகும் என்பதை மறந்து விட வேண்டாம்.

உலகில் 65 லட்சம் உயிரினங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. நம் நாட்டுப் பசுமாட்டுக்கு என்று தனிச் சிறப்பம்சம் உள்ளது. நாட்டுப் பசுவின் சாணத்தில்தான் நன்மை செய்யும் உயிரிகள் இருக்கின்றன என்றால், எத்தனை மாட்டை வாங்கிக் கட்டுவது என்று கணக்குப் போட வேண்டாம். என்னுடைய ஆய்வின் மூலம் ஏக்கருக்கு 10 கிலோ சாணம் இருந்தால் போதும் என்று கண்டுபிடித்துள்ளேன். நாட்டு மாடு நாள் ஒன்றுக்கு 11 கிலோ சாணம் கொடுக்கும். இதை வைத்து 30 ஏக்கர் நிலம் முழுக்க விவசாயம் செய்ய முடியும்.

சுபாஷ் பாலேக்கர்
சுபாஷ் பாலேக்கர்

இந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி நாடு முழுக்கப் பல விவசாயிகள் பலன் பெற்று வருகிறார்கள். நாட்டு மாடு கொடுக்கும் சாணம் மற்றும் சிறுநீர் இவற்றை வைத்து ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் போன்றவற்றைத் தயாரிக்கலாம். இவை மண்ணுக்கு உரமல்ல, மண்ணில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கான உணவு. இதனால் வண்டி, வண்டியாக அதைக் கொட்ட வேண்டியதில்லை. தேவையான அளவுக்குக் கொடுத்தாலே போதுமானது.’’


‘‘எங்கள் நிலத்தில் வேலி அமைக்க உள்ளோம். நான்கு புறமும் வேலி அமைக்க வேண்டுமா? கிராம வழக்கப்படி மேற்கு, வடக்குத் திசையில் மட்டும் அமைத்துக் கொண்டால் போதுமா? மேலும், எங்கள் நிலத்தில் உள்ள மரம் ஒன்று, பக்கத்து நிலத்தில் சாய்ந்தபடி உள்ளது. இதை வெட்டி எடுக்கும்படி பக்கத்து நிலத்துக்காரர் சொல்கிறார். மரத்தை வெட்ட வேண்டுமா?’’

ம.தட்சிணாமூர்த்தி, திருவாரூர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் சொல்கிறார்.

‘‘நிலத் தகராறுகள் உருவாவதில் வேலி பிரச்னையும் ஒன்று.

பக்கத்து வீட்டுக்காரர் அல்லது பக்கத்து நிலத்தில் உள்ளவர்களால் ஏற்படும் தவிர்க்க முடியாத சர்ச்சை இது. கிராம வழக்கப்படி மேற்கு, வடக்குத் திசையில் நீங்கள் வேலி அமைக்க வேண்டும். பக்கத்து நிலத்துக்குக்காரர் அடுத்த திசைகளில் வேலி அமைக்க வேண்டும். இது ஜென்டில்மேன் அக்ரிமென்ட்போல. நிலத்தைச் சுற்றி யுள்ளவர்கள் பேசிக்கொண்டு, அதை மீறாமல் நடந்துகொள்ளும் நடைமுறை. ஆனால், சட்டத்தின் முன்பு இவை செல்லாது. ஒருவரின் நிலத்தின் எல்லை எதுவோ, அந்த இடத்தில், நான்கு திசையிலும் அவர் வேலி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்டப்படி சரியானது.

விவசாய நிலம்
விவசாய நிலம்

அடுத்து, உங்கள் நிலத்தின் வேலியைத் தாண்டி மரக்கிளைகள் பக்கத்து நிலத்தில் நீட்டிக்கொண்டு இருந்தால், அது தவறுதான். அதை வெட்டி எடுத்து விட வேண்டும். ‘பக்கத்து நிலத்தில் உள்ள மரத்தின் நிழல், என் நிலத்தில் படுகிறது. இதனால், பயிர் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. அதற்கு மரத்துக்காரர் எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும்’ என்று ஒரு விவசாயி வழக்கு தொடுத்திருந்ததை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

ரமேஷ்
ரமேஷ்

மேலைநாட்டில் புகழ் பெற்ற வழக்கு ஒன்று உள்ளது. ஒருவர் தன் குதிரையைச் சவாரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு நிலத்தில் கம்பி வேலிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த விஷச் செடியைக் குதிரை கடித்துத் தின்று இறந்து விட்டது. உடனே, குதிரைக்காரர் வழக்கு தொடுத்தார். வேலிக்கு வெளியில் செடி வந்தது தவறு என்று அந்தத் தோட்டக் காரரிடமிருந்து நஷ்ட ஈடு வசூலித்துக் குதிரைக்காரருக்கு கொடுத்தார்கள். ஆகையால், நம் நிலத்தின் எல்லையைத் தாண்டி எதுவும் இருக்கக் கூடாது.’’

‘‘கடந்த இதழில் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் பற்றி எழுதியிருந்தீர்கள். இந்த அலுவலகத்தின் தொடர்பு எண் கொடுக்கவும். எங்கள் ஊரில் பல்லுயிர் நிர்வாகக் குழு தொடங்க உள்ளோம். இதற்கு உதவி செய்வார்களா?’’

@சி.வளர்மதி

புறாபாண்டி
புறாபாண்டி

‘‘இந்தியாவில் எந்த உயிரினங்கள், தாவரங்கள் அல்லது அதைச் சார்ந்த பாரம்பர்ய அறிவு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் அதை ஒரு வியாபாரத்துக்காகப் பயன்படுத்துவதென் றாலும், தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத் தின் அனுமதியோ, மாநில பல்லுயிர் பரவல் வாரியத்தின் அனுமதியோ பெற்றிருக்க வேண்டும்.

வியாபாரத்துக்கான அனுமதியின்போது, ஒரு குறிப்பிட்ட சதவிகித தொகையை இந்த அமைப்புகள் வசூலிக்கின்றன. இதை அந்த விளைபொருள் விளைந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக அங்குள்ள பல்லுயிர் நிர்வாகக் குழுவுக்குக் கொடுக்கிறார்கள். புதிய குழு தொடங்கவும் வழிகாட்டி வருகிறார்கள்.’’

தொடர்புக்கு,

தேசிய பல்லுயிர் ஆணையம்,

டைசல் பார்க், 5-வது மாடி

சி.எஸ்.ஐ.ஆர் சாலை,

தரமணி,

சென்னை - 600113.

தொலைபேசி: 044 22541071.

செல்போன்: 90956 67589.