ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

டி.என்.பி.எல் சவுக்கு சாகுபடி... புயலுக்குத் தாங்குமா மகோகனி... முருங்கை இலை மதிப்புக்கூட்டல்...

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘சவுக்கு சாகுபடி செய்ய விரும்புகிறோம். ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வாங்கிக்கொள்வதாகக் கேள்விப்பட்டோம். அதன் விவரத்தைச் சொல்லுங்கள். ஒரு ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?’’

@ஆர்.சரவணக்குமார்

கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED) முதன்மை பொது மேலாளர் (வனத்தோட்டம் மற்றும் ஆராய்ச்சி) இரா.சீனிவாசன் பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாடு அரசு மூலம் இந்தச் செய்தித்தாள் காகித நிறுவனம் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே ஆண்டுக்கு 10 லட்சம் டன் கரும்புச் சக்கையை மூலப்பொருளாக உபயோகிக்கும் மிகப் பெரிய காகித நிறுவனம் TNPL ஆகும். பல கட்ட விரிவாக்கப் பணிகளின் காரணமாகக் காகித உற்பத்திக்குத் தேவையான 60,000 மெட்ரிக் டன் கூழ் மர மூலப்பொருளின் தேவை, இப்போது 10 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால், சவுக்கு, தைல மரங்களைக் கொண்ட கூழ் மரத்தோட்டங்கள் உருவாக்கும் பணிகளையும் செய்து வருகிறோம். இதன் மூலம் கடந்த 17 ஆண்டுகளில் 2,11,280 ஏக்கர் நிலத்தில் 40,379 விவசாயிகள் பயன்பெற்றுள்ளார்கள்.

சவுக்கு
சவுக்கு

தனியார், அரசுத்துறை நிறுவனங் கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான, சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களைக் கண்டறிந்து, அந்நிலங்களை மேம்படுத்திக் கூழ்மர சாகுபடி செய்ய ஊக்குவித்து வருகிறோம். இதன் மூலம் தரிசு நிலங்கள் பயனுள்ளதாக மாற்றப்படுவதுடன் மண் அரிப்பும் தடுக்கப்பட்டு மண் வளமும் மேம்படுத்தப்படுகிறது. பெரு, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் தரிசு நிலங்களிலிருந்து நிலை யான வருவாய் பெறும் பொருட்டு TNPL வனத்தோட்ட துறையானது இரண்டு வகையான வனத்தோட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

1. பண்ணை வனத்தோட்ட திட்டம் (Farm Plantation). 2. மூலதன வனத்தோட்ட திட்டம் (Captive Plantation). இந்த இரண்டு திட்டங்கள் மூலமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தைல மற்றும் சவுக்கு மரத் தோட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

பண்ணை வனத்தோட்டத் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப கூழ் மரக்கன்றுகள் மானிய விலையில் நிலங்களுக்கே சென்று வழங்கப்படுகின்றன.

சாகுபடிக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் களத்துக்கே சென்று வழங்குகிறோம். அறுவடை செய்யும்போது, ஒப்பந்தப்படி பரஸ்பரம் ஒப்புக்கொண்ட விலையில் விவசாயிகளிடமிருந்து கூழ் மரங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அறுவடை மற்றும் போக்குவரத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறோம். இதன் மூலம் விவசாயிகள் பலன் பெற்று வருகிறார்கள். அடுத்து, மூலதன வனத்தோட்ட திட்டம் என்பது விவசாயம் செய்யாமல் பல ஆண்டு களாகத் தரிசாக உள்ள, குறைந்தபட்சம் 50 ஏக்கர் நிலம் ஒரே இடத்தில் தனியாருக்கோ, ஒரு குடும்பத்துக்கோ, நிறுவனத்துக்கோ சொந்தமாக இருந்தால் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.

சவுக்கு சாகுபடி செய்தால் 3-ம் ஆண்டு அறுவடைக்கு வரும். ஏக்கருக்கு 60 டன் விளைச்சல் கிடைக்கும். இன்றைய தேதிப்படி ஒரு டன் 6,100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி பார்த்தால் 3,66,000 வருமானம் கிடைக்கும். சாகுபடிக்கு 55,000 ரூபாயும் அறுவடைக்கு 1,50,000 ரூபாயும் செலவாகும். மொத்தம் 2,05,000 ரூபாய் செலவு போக, 1,61,000 ரூபாய் லாபம் கிடைக்கும். தமிழ் நாட்டை 5 மண்டலங்களாகப் பிரித்து, களப்பணிகளைச் செய்து வருகிறோம். கூழ் மரச்சாகுபடி குறித்துக் கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், எங்கள் கள அலுவலர் களைத் தொடர்பு கொள்ளவும்.’’

வடக்கு - 94425 91408

கிழக்கு - 94425 91420

தெற்கு - 94425 91417

மேற்கு - 94425 91437

நடு மண்டலம் - 94425 91433.

பாலசுப்பிரமணியன், இரா.சீனிவாசன்
பாலசுப்பிரமணியன், இரா.சீனிவாசன்

‘‘எங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் உள்ளது. தண்ணீர் வசதி நன்றாக உள்ளது. இதில் மகோகனி வைக்கலாமா? புயல் வீசும் பகுதி என்பதால், மரம் சாய்ந்து விடும் என்கிறார்கள்?’’

எம்.இந்திரா, வண்டலூர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மரச் சாகுபடித்துறையின் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் பாலசுப்பிரமணியன் பதில் சொல்கிறார்

‘‘இந்த மாவட்டத்துக்கு ஏற்ற மர வகைகள் இரண்டு உள்ளன. 1. மகோகனி, 2. வேங்கை. வடிகால் வசதி உள்ள நிலங்களில் இவை நன்றாக வளர்கின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு... உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் புயல் வீசும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு அச்சப்பட்டுக்கொண்டு மரங்களே வளர்க்காமல் இருக்க முடியாது. புயலை எதிர்கொள்ளத் தொழில்நுட்பம் உள்ளது. அதாவது, பெரும்பாலும் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில்தான் புயல் வீசுகிறது. இந்தப் பருவ மழைத் தொடங்கும் முன்பே மரக்கிளைகளை வெட்டி விடலாம். இதன் மூலம் மரத்தின் எடை குறையும். புயல் வீசும் போது பாதிப்பும் குறையும். மகோகனியை ஒப்பிடும்போது, வேங்கை மரத்துக்கு நல்ல விலைக் கிடைக்கின்றது. ஆகையால், உங்கள் பகுதியில் உள்ள மர வியாபாரிகளிடம் விசாரித்துவிட்டு, கூடுதல் லாபம் கொடுக்கும் மரத்தை நடவு செய்யவும்.

புறாபாண்டி
புறாபாண்டி


அடுத்து, தேக்கு, மலைவேம்பு, செம்மரம் சாகுபடி செய்யலாமா? என்றும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அடிக்கடி கேட்கிறார்கள். தேக்கு மரம் வலிமையான மரம். ஆனால், தண்ணீர் தேங்கி நின்றால், சில நாள்களில் இலைகளைத் தீயிட்டுக் கொளுத்தியதுபோலக் காய்ந்து விடும். தண்ணீர் நிற்காத கரைப்பகுதி களில்தான், தேக்கு செழித்து வளரும். மலைவேம்புக்குத் தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும். தண்ணீர் அதிகம் நின்றாலும் பாதிப்பு; தண்ணீர் கொடுக்கவில்லை என்றாலும் மரம் சரியாக வளராது. செம்மரத் துக்குத் தண்ணீர் ஆகாது. அது வறட்சியை விரும்பும் மரம். மழைப்பொழிவு அதிகம் கொண்ட இந்த மாவட்டங்களுக்கு ஏற்றது அல்ல. மரச் சாகுபடி குறித்துக் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் எங்கள் துறையைத் தொடர்புகொள்ளவும்.’’

தொடர்புக்கு, முனைவர் பாலசுப்பிரமணியன்,

செல்போன்: 94435 05845.

இ-மெயில்: balafcri@gmail.com

முருங்கை இலை
முருங்கை இலை


‘‘முருங்கை சாகுபடி செய்துள்ளோம். இதன் இலைகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’

சி.நடராஜன், பள்ளப்பட்டி.

‘‘கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் முருங்கைப் பொடி உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கிறார்கள். இது கட்டணப் பயிற்சி என்பது குறிப்பிடத் தக்கது.’’

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641 003 தொலைபேசி: 0422 6611268