தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணை வேந்தர் தேடுதல் குழு அரசின் விதிமுறை பின்பற்றவில்லை. தகுதியற்றவர்களைத் துணைவேந்தர் பதவிக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்தக் குழுவை கலைத்துவிட்டு, புதிய தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்ற புகார், ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பட்டுள்ளது.
அதில், ``கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்குப் புதிய துணை வேந்தரை பரிந்துரை செய்யும் வகையில், தேடுதல் குழுவின் அமைப்புக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி முனைவர்.வி. குமரேசன், நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழு அலுவலகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டது.

இணையதளத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்கக் கடைசித் தேதி 30.11.2021 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 45-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து முதல்கட்டமாக 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர், இவர்கள் 12.02.2022 அன்று, தேடுதல் குழுவினருடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் நிர்வாக அனுபவம் மற்றும் பேராசிரியர் அனுபவம் சில விண்ணப்பதாரர்களுக்குக் குறைவாக இருந்தன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதன் மூலம் துணைவேந்தர் தேர்வுக்குத் தேவையான மிக முக்கியமான விதிமுறைகளைத் தேடுதல் குழு புறக்கணித்துள்ளது. மேலும், தகுதி குறைவான விண்ணப்பதாரர்களிடம் அனுபவச் சான்றிதழை 09.02.2022 தேதிக்கு முன் அஞ்சல் மூலம் நோடல் அதிகாரிக்கு அனுப்புமாறும் தேடுதல் குழு விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவித்துள்ளது. ஆனால், விண்ணப்பம் அனுப்ப கடைசித் தேதி 30.11.2021 அன்றே முடிந்துவிட்டது. தேடுதல் குழுவுக்கு ஏதேனும் தெளிவு தேவைப்பட்டால், அவர்கள் பணிபுரிந்த இடத்தில் தேவையான விவரங்களை ரகசியமான முறையில் பெற்றிருக்க வேண்டும்.

இப்படிச் செய்யாமல், விதிமுறைகளை மீறி தேடுதல் குழு செயல்பட்டுள்ளது. மேலும், தேடுதல் குழுவில் உள்ளவர்கள், சில விண்ணப்பதாரர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுள்ளார்கள். ஆகையால், இந்தக் குழுவின் பரிந்துரைப்படி துணைவேந்தர் நியமானம் நடைபெற்றால் அது தகுந்த வாய்ந்தவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிப்பது போல இருக்கும். எனவே, ஆளுநர் அவர்கள், தேடுதல் குழுவையும் அவர்கள் பரிந்துரையினையும் புறக்கணித்துவிட்டு, புதிய தேடுதல் குழுவை அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’’ என்று அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.