அமுல் என்றாலே பாலும், பால் சார்ந்த உணவுப் பொருள்களும் நினைவுக்கு வரும். அமுல் என்ற பெயரில் பால் சார்ந்த பொருள்களைத் தயாரித்து வழங்கி வரும் நிறுவனமான `குஜராத் கோ ஆப்பரேடிவ் மில்க் மாா்க்கெட்டிங் ஃபெடரேஷன்' (ஜி.சி.எம்.எம்.எஃப்), இதற்கு பிறகு ஆர்கானிக் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, நிறுவனத்தின் முதல் முயற்சியாக `அமுல் ஆா்கானிக் ஹோல் வீட் ஆட்டா' (கோதுமை மாவு) விற்பனையைத் தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் பாசுமதி அரிசி போன்ற உணவுப் பொருள்களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உணவுப் பொருள்கள் அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் உள்ளதா என்பதைப் பரிசோதிப்பதற்காக ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மேலும், விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் மிக பெரிய சவாலே, ஆர்கானிக் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான தொடர்புகள் இல்லாமல் இருப்பதும், உணவுப் பொருள்கள் ஆர்கானிக் முறையில் உருவாக்கப்பட்டதா என்பதை பரிசோதிப்பதற்கான செலவுகள் அதிகம் இருப்பதே. எனவே, ஆர்கானிக் உணவுகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதோடு, 5 இடங்களில் ஆர்கானிக் சோதனை ஆய்வகங்களைத் தொடங்க அமுல் முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் ஆய்வகம் அகமதாபாத்தில் உள்ள அமுல் பால் பண்ணையில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த மாதத்திலிருந்து அமுல் ஆர்கானிக் கோதுமை மாவு அமுல் பார்லர்களிலும், சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் குஜராத், டெல்லி, மும்பை, புனேவில் ஜூன் முதல் ஆன்லைனில் ஆர்டர் செய்து ஹோம் டெலிவரி செய்யும் வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமுல் ஆர்கானிக் ஆட்டாவின் இரண்டு பேக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. 1 கிலோ கிராம் கொண்ட கோதுமை மாவு 60 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் கொண்ட கோதுமை மாவு 290 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தமிழகத்திலும் ஆவின், அமுதம் கூட்டுறவு அங்காடி போன்றவற்றின் மூலம் ஆர்கானிக் உணவுப் பொருள்களின் விற்பனையைத் தொடங்கினால், இயற்கை விவசாயிகளின் வருமானத்துக்கு வழி வகுப்பதாக இருக்கும்.