Published:Updated:

மாம்பழத்துக்கு நல்ல விலை; ஆனால் எங்களுக்குப் பலன் இல்லை; மகசூல் இழப்பால் மனம் குமுறும் மா விவசாயிகள்

மாம்பழங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாம்பழங்கள்

விளைச்சல்

மாம்பழத்துக்கு நல்ல விலை; ஆனால் எங்களுக்குப் பலன் இல்லை; மகசூல் இழப்பால் மனம் குமுறும் மா விவசாயிகள்

விளைச்சல்

Published:Updated:
மாம்பழங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாம்பழங்கள்

மா சாகுபடியைப் பொறுத்தவரை, விலையிருந்தால் விளைச்சல் இருக்காது. விளைச்சல் இருந்தால் விலை இருக்காது. ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக தாமதமாக பூவெடுத்து, தாமதமாக காய்ப்புக்கு வந்தது. இந்த தாமதத்தால் விளைச்சல் எப்படி இருக்குமோ, விலை எப்படி இருக்குமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் இருந்தது. வழக்கமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாம்பழ சீஸன் களைகட்டும். இந்த ஆண்டு வரத்து மிகவும் மந்தமாகவே இருந்தது.

மாங்காய்கள்
மாங்காய்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மா விவசாயியும், மாம்பழ கூழ் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பினருமான உதய் சிங், ‘‘இதுவரைக்கும் இப்படிப்பட்ட மகசூல் இழப்பை மா விவசாயிகள் சந்திச்சதே இல்லை. இந்த முறை உரிய நேரத்துல பூ பூக்கலை... வழக்கத்தைவிட ஒரு மாசம், ஒன்றரை மாசம் கழிச்சு, காலதாமதமாகத்தான் பூ பூத்து காய்ப்புக்கு வந்துச்சு. பூஞ்சண தாக்குதலால காய்கள்ல கறுப்பு ஏறி, எண்ணெய் பசைபோல படிஞ்சிருந்துச்சு. இந்த மாங்காய்களை விற்பனை செய்ய முடியாதுங்கறதுனால, இதை அறுவடை செஞ்சா என்னா, செய்யலைனா என்னங்கற மனநிலை விவசாயிகளுக்கு வந்துடுச்சு. மா சாகுபடியைப் பொறுத்தவரை இந்தப் பகுதியில பூ பூக்கும்போது வழக்கமா ஒரு தடவைதான் மருந்து அடிப்போம். ஆனா, இந்த முறை பூஞ்சண தாக்குதலால, பல முறை மருந்தடிச்சும் கட்டுப்படுத்தவே முடியலை. இதனால விவசாயிங்க விழிபிதுங்கி நின்னாங்க.

உதய் சிங்
உதய் சிங்

வழக்கமா மார்ச் மாச கடைசிலேயே செந்தூரா ரகம் அறுவடைக்குத் தயாராகிவிடும். இந்த முறை ஏப்ரல் 15-ம் தேதிக்கு மேலதான் அறுவடைக்கு வர ஆரம்பிச்சது. மலையடிவாரம், நல்ல மண் கண்டம் உள்ள பகுதிகள், பாசன வசதியுள்ள தோட்டங்கள்ல வழக்கமா நல்ல மகசூல் கிடைக்கும். இந்த முறை அங்கேயும் பாதிப்புகள் அதிகம்.

பெங்களூரா மாங்காய் கிலோவுக்கு 10 ரூபாய்க்கு மேல விலை கிடைச்சாலே, விவசாயிகளுக்கு நஷ்டமில்லாம குறைந்தபட்ச லாபம் கிடைச்சிடும். ஜூஸ் பேக்டரிகள் பெரும்பாலும் 10 ரூபாய்க்குத்தான் பெங்களூ ராவை வாங்குவாங்க. ஆனா, இந்தமுறை 15 - 20 ரூபாய் வரைக்கும் விலை கொடுத்து மாம்பழம் கொள்முதல் செய்யத் தயாரா இருந்தாங்க.

மாமரம்
மாமரம்

அதேமாதிரி ஒரு கிலோ செந்தூரா 20 ரூபாய், அல்போன்சா 30 - 50 ரூபாய், நீலம் 18 - 23 ரூபாய்க்கு விலை போச்சு. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆந்திராவுல உள்ள சித்தூர் மாவட்டத்துல இருந்து வழக்கத்தைவிட ரொம்ப குறைவான மாம்பழங்கள்தான் ஜூஸ் பேக்டரிக்கு போச்சு. மற்ற மாவட்டங் கள்ல உள்ள சந்தைங்க, மண்டிகள்லயும் மாம்பழ வரத்துக் குறைவு. மா அதிகமா சாகுபடி செய்யப்படக்கூடிய, மகாராஷ்டிரா மாநிலம் கொங்கன்லயும்கூட இந்தமுறை விளைச்சல் குறைவுதான்’’ எனத் தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி சங்கரனிடம் பேசியபோது, “இந்தியாவில் 22 லட்சம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்திய அளவில் வழக்க மான மாம்பழ உற்பத்தியில் இந்த முறை 45 சதவிகிதம்தான் உற்பத்தி நடந்திருக்கிறது. ஏற்றுமதி 55 சதவிகிதம் பாதித்திருக்கிறது. தென் இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக மழையால் மா விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது என்றால், வட இந்தியாவில் வெப்ப அலைகளால் மா விளைச்சல் குறைந்தது. மா சாகுபடிக்கு குளிரும் வெயிலும் மிகவும் அவசியம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மழையும் குளிரும் இருக்கும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் வெப்பமும் குளிரும் இருப்பது வழக்கம். இந்தச் சீதோஷ்ண நிலை மாறுபடக்கூடாது. இதில் மாற்றம் ஏற்பட்டால் மா விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். இந்த ஆண்டு டிசம்பரிலும் பிப்ரவரியிலும் மழை பெய்தது. அதனால் பூ எடுப்பதற்கும் காய் காய்ப்பதற்கும் தாமதமானது.

மா
மா

இதைத் தவிர, சரியாகக் காய் பிடிக்கும் நேரத்தில் ஆந்தரனோஸ் என்னும் பூஞ்சணம் தாக்குதல் ஏற்பட்டுக் காய்கள் மீது கறுப்புப் புள்ளிகள் விழுந்துவிட்டன. அடுத்து பழ ஈ தாக்குதலாலும் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் தாமதமாகப் பூ எடுத்தது இந்த முறைதான். இதுபோல் எப்போதாவது நடக்கும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பெரும்பாலான பகுதிகளில் மே, ஜூன் மாதங்கள் மட்டும்தான் மா அறுவடை செய்யப்பட்டது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஜூலை வரை அறுவடை நடந்தது. இந்த ஆண்டு மா சாகுபடியில் விளைச்சல் குறைந்திருந்தாலும்கூட, நல்ல விலை கிடைத்தது. இதனால், விவசாயிகளுக்கு வருத்தமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை என்ற நிலை தான்” என்று தெரிவித்தவர், மா சாகுபடியில் நம்முடைய விவசாயிகள் பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறை குறித்து விவரித்தார்.

மா
மா

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மா ரகங்கள்

“மா சாகுபடியைப் பொறுத்தவரை ஒரே ரகத்தைச் சாகுபடி செய்ய வேண்டாம் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மா ரகங்கள் இருக்கின்றன. எங்கள் தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் 750 ரகங்கள் இருக்கின்றன. அதிக மகசூல் கொடுக்கும் ரகங்கள், விளைச்சல் குறைவாகக் கிடைத் தாலும் நல்ல விலை கிடைக்கும் ரகங்கள், பழக்கூழ் தயாரிப்பதற்கான ரகங்கள் என்று கலந்து விதைத்தால் ஒரு ரகம் கைவிட்டாலும் இன்னொரு ரகத்தில் வருமானம் பார்த்துவிட முடியும். கர்நாடகாவில்... மா உற்பத்தி மேம்பாடு மற்றும் சந்தைக் கழகம் (Karnataka State Mango Development and Marketing Corporation Limited) செயல்படுகிறது. மா சாகுபடி செய்யும் விவசாயிகள் அக்கழகத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.

சங்கரன்
சங்கரன்

ஒவ்வொரு மா சீஸன் தொடங்குவதற்கு முன்பும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. அங்கேயே மாம்பழத்துக்கு விலை உறுதி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வியாபாரிகள் முன்தொகை கொடுத்து விடுகிறார்கள். அதேசமயம் விலை குறைவாக இருக்கும் நேரங்களில் குறைந்தபட்ச ஆதார விலை வைத்து கொள்முதல் செய்கிறார்கள். அதுபோன்று தமிழ்நாட்டிலும் கொண்டு வந்தால் மா விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லி முடித்தார்.

பிருந்தா தேவி
பிருந்தா தேவி

கர்நாடக மாநிலத்தில் உள்ளதுபோன்று தமிழ்நாட்டிலும் ஓர் அமைப்பைத் தொடங்க முடியுமா என்பது குறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவியிடம் கேட்டோம். “மா விவசாயிகளுக்கு தொடர் மழை, நோய் உள்ளிட்ட காரணங்களால் இந்த முறை நஷ்டம்தான். நோய் தாக்கிய சமயத்தில் தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்குக் கொடுத்தோம். அதேபோன்று சீஸன் தொடங்கிய சமயத்தில் மா விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் ஒரு கூட்டத்தைக் கிருஷ்ணகிரியில் நடத்தினோம். இப்படி மா விவசாயிகளுக்கு தோட்டக் கலைத்துறை சார்பில் பல உதவிகளைச் செய்து வருகிறோம். அமைப்பு தொடங்குவது குறித்து பரிசீலிக்கிறோம்” என்றார்.

மாம்பழங்கள்
மாம்பழங்கள்

குஜராத் சந்தையைப் பிடித்த மகாராஷ்ட்ரா!

‘‘மகாராஷ்டிரா மாநிலத்துல உள்ள ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்கள்ல இருக்கிற மா விவசாயிகள் தங்களோட தோட்டங்கள்லயே, மாம்பழக் கூழ் உற்பத்தி செய்றதுக்கான அமைப்பை (ஸ்மால் பல்பிங் யூனிட் - Small Pulping Unit) உருவாக்கியிருக்காங்க. இந்த பல்பிங் யூனிட் அமைக்க, 10 லட்சத் திலிருந்து 50 லட்சம் வரை செலவு செஞ்சிருக்காங்க. நல்ல விலை கிடைச்சா, மாம்பழங்களை மார்க்கெட்டுக்கு அனுப்புவாங்க. லாபகரமான விலை கிடைக்கலைனா மொத்தத்தையும் பழக்கூழ் ஆக்கிடுறாங்க. இத தயார் பண்ணி குஜராத்துக்கு அனுப்பிடுறாங்க. குஜராத்திகளோட விசேஷங்கள்ல மேங்கோ ஐஸ்க்ரீம் தவறாம இருக்கும். அதனால, மகாராஷ்டிரா விவசாயிங்க குஜராத்ல ஒரு சந்தையைப் பிடிச்சு வெச்சிருக்காங்க. நம்ம விவசாயிகளும் விளைச்சல் குறைந்தாலோ, நல்ல விலை கிடைக்காமல் போனாலோ இந்த முறையைப் பின்னபற்றலாம்” என்கிறார் உதய் சிங்...