Published:Updated:

வேளாண் ஏற்றுமதிக்கு உதவும் `அபிடா' இப்போது சென்னையில்... ஏற்றுமதியாளர்களுக்கு என்ன நன்மை?

வேளாண் ஏற்றுமதி
வேளாண் ஏற்றுமதி

வேளாண்மை சார்ந்த பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென்றால் நிச்சயமாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அபிடாவில் உறுப்பினராகி இருக்கவேண்டும்.

ஏற்றுமதியில் அதிக சிக்கல் இல்லாததும் அதேநேரம் எளிதாக அனைவரும் விரும்புவதும் வேளாண் ஏற்றுமதியைத்தான். காரணம் இதற்கான மூலப்பொருள் அதிகம் இருப்பதே காரணம். இந்தியா விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. அதனால் வேளாண் பொருள்கள் பரந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பொருள்களை உள்நாட்டில் வாங்கி விற்பது ஒருவகை என்றால், வெளிநாட்டில் விற்பனை செய்தால் அதற்கான விலை அதிகம்.

வேளாண்மை சார்ந்த பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென்றால் நிச்சயமாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அபிடா-வில் (APEDA-Agricultural and Processed Food Products Export Development Authority) உறுப்பினராக வேண்டும்.

ஏற்றுமதி
ஏற்றுமதி

அதேபோன்று வேளாண்மை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள், அறிவிப்புகள், மானியங்களைச் செயல்படுத்துவதும் இந்த அமைப்புதான். வேளாண் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த அமைப்பின் உதவியின்றி ஏற்றுமதி மேற்கொள்ள முடியாது. பல ஆண்டுகளாக பெங்களூருவில் மட்டுமே இயங்கிய மண்டல அலுவலகம் இப்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ளது.

இதுகுறித்து அபிடாவின் தலைவர் அங்கமுத்து ஐ.ஏ.எஸ் பேசியபோது, ``வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா, வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. உலக வர்த்தக அமைப்பின் தரவின்படி உலக வேளாண் ஏற்றுமதி நாடுகளில் 2019-ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியா 9-வது இடத்தில் இருக்கிறது.

அங்கமுத்து ஐ.ஏ.எஸ்
அங்கமுத்து ஐ.ஏ.எஸ்

இதுவரை பெங்களூருவில் மட்டுமே செயல்பட்டு வந்த அபிடாவின் மண்டல அலுவலகம், தமிழ்நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் சென்னை, கிண்டியில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் பயன்படுத்திக் கொள்ளவும். தமிழ்நாடு தவிர்த்து, பஞ்சாப் மாநிலத்துக்கு சண்டிகர், கேரளாவுக்கு கொச்சி மற்றும் மத்தியப்பிரதேசத்துக்கு போபால் ஆகிய இடங்களில் புதிய விரிவாக்க அலுவலகம் தொடங்கப்பட உள்ளன” என்றார்.

அபிடா சென்னை மண்டல உதவி பொது மேலாளர் தங்கம் ராமச்சந்திரன் பேசியபோது, ``தொழில்முனைவோர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஆகியோர் வேளாண் ஏற்றுமதியில் ஈடுபடலாம். அபிடாவால் பட்டியலிடப்பட்டுள்ள பொருள்களுள் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு அதிகமானவற்றை ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு நபரும் ஏற்றுமதியாளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (RCMC), அபிடாவின் பட்டியலிடப்பட்ட பொருள்களின் ஏற்றுமதியாளருக்கு வழங்கப்படுகிறது.

வேளாண் ஏற்றுமதி
வேளாண் ஏற்றுமதி

அபிடாவின் கீழ் வரும் வேளாண் விளைபொருள்கள்/ மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க நிதியுதவி வழங்கப்படுகிறது. உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டம், தர மேம்பாட்டுக்கான திட்டம், சந்தை ஊக்குவிப்புக்கான திட்டம், இயற்கை வழி வேளாண் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டம் உள்ளிட்ட திட்டங்களின்படி நிதிஉதவி வழங்கப்படுகிறது. ஏற்றுமதிக்கான திட்டங்கள் குறித்த தகவல்கள் apeda.gov.in இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்” என்றார்.

வேளாண் ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீனிடம் பேசியபோது, ``இத்தனை நாள்களாக பெங்களூருவில் உள்ள அபிடாவை அணுகுவதற்கு மொழி பிரச்னை ஒரு தடையாக இருந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கப்பட்டிருப்பதால் இனி மொழி பிரச்சனை இருக்காது. அதேபோன்று அபிடாவிலிருந்து ஏற்றுமதியாளர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அபிடாவில் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால், அதில் சுமார் 1 லட்சம் பேர்தான் ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஏற்றுமதி செய்ய ஆர்வமுள்ளவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுமதி செய்வதற்கான சான்றிதழை 5,900 ரூபாய் கொடுத்து எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஏற்றுமதி மட்டும் செய்வதில்லை. ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க அபிடா முன் வர வேண்டும்.

கே.எஸ்.கமாலுதீன்
கே.எஸ்.கமாலுதீன்

அதேபோன்று மற்ற நாட்டில் உள்ள இறக்குமதியாளர்களையும் நம் நாட்டு ஏற்றுமதியாளர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்க வேண்டும். பேக்கேஜில் இன்னும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். வேளாண்மை சார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு நிறைய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். வேளாண் ஏற்றுமதிக்கு மேலும் பல சலுகைகளைக் கொண்டு வர வேண்டும். ஆங்காங்கே அலுவலகம் தொடங்குவது நல்லது என்றாலும், அதன் பணிகளால் மட்டுமே அது சிறப்பு பெறுகிறது. இதை உணர்ந்து அபிடா தங்களுடைய பணிகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு,

அபிடா மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம்,

சிபெட் சாலை,

திரு வி.க தொழிற்பேட்டை வளாகம்,

கிண்டி,

சென்னை- 600032

அடுத்த கட்டுரைக்கு