Published:Updated:

பயிர்களை அழித்த டி.எஸ்.பிக்கு ரூ. 5 லட்சம் அபராதம்! மனித உரிமை ஆணையம் அதிரடி

டி.எஸ்.பி ஜரீனா பேகம்
டி.எஸ்.பி ஜரீனா பேகம்

சாவித்திரி தன் கண் எதிரே நெற்பயிர்களை அழித்த ஆரணி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகினார்.

காவல்துறைக்கு சட்டம் ஒழுங்கை காக்கக்கூடிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் அதே சமயம், ஆசிரியர்களுக்குச் சொல்லப்படுவது போல, ‘கையில் பிரம்பு இருக்கலாம். ஆனால் அடிக்கக்கூடாது’ வகையில் சட்டத்தை மீறுபவர்களை எச்சரித்து வழிநடத்த வேண்டும். ஆனால், பலரும் அதிகாரத்தைத் தாங்கள் கையிலெடுத்துக் கொள்வது வாடிக்கை.

ஹெல்மட் போடாமல் செல்லும் வாகன ஓட்டிகளை நோக்கி லத்தியை எறிவதில் இருந்து, பல சம்பவங்களை போலீஸாரின் அத்துமீறிய நடிவடிகைகளுக்கு உதாரணமாகக் கூறலாம். அப்படி ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி.

பயிர்கள் அழிக்கப்பட்ட காட்சி.
பயிர்கள் அழிக்கப்பட்ட காட்சி.

இதே ஊரைச் சேர்ந்த சாமுண்டீஸ்ரி என்பவருக்கும் சாவித்திரிக்கும் பரம்பரை விவசாய நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. அடிக்கடி இரு குடும்பத்தினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் இரு குடும்பத்தையும் சமாதானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், சாவித்திரி மீது ஆரணி போலீஸ் நிலையத்தில் சாமுண்டீஸ்வரி புகார் அளித்தார். புகாரையடுத்து சாவித்திரியிடம் விசாரணை நடத்த, ஆரணி டிஎஸ்.பி ஜரீனா பேகம் நேரடியாகச் சென்றார். அப்போது, சாவித்திரியின் விவசாய நிலத்தில் நெற்பயிர்கள் விளைந்து பச்சைபசேலென்று காட்சியளித்தன.

நிலம் தொடர்பாக ஜரீனா பேகம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது , மற்றொருவர் டிராக்டர் மூலம் சாவித்திரியின் விளைநிலத்தின் மீது ஓட்டி பயிர்களை அழித்தார். இதைக் கண்டு பதறிய சாவித்திரி, டிராக்டர் முன்னால் படுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், பயிர்களை அழிப்பதை நிறுத்தவில்லை. தன் கண் எதிரே நெற்பயிர்கள் அழிக்கப்படுவதைக் கண்ட சாவித்திரி துடித்துப் போனார். டி.எஸ்.பி ஜரீனா பேகத்திடம் விளை நிலத்தில் டிராக்டர் ஓட்டுவதை நிறுத்துமாறு சாவித்திரி மன்றாடினார்.

ஆனால், ஜரீனா பேகம் கண்டு கொள்ளவில்லை. நடந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர். இணையத்தில் அந்த வீடியோ வைரலானது. போலீஸ் அதிகாரியின் அராஜகச் செயலுக்கு பல முனைகளில் இருந்தும் கண்டனம் எழுந்தது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஜரீனா பேகம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, பின்னர் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.

ஆனால், சாவித்திரி இந்த விவகாரத்தை அதோடு விடவில்லை. தன் கண் எதிரே நெற்பயிர்களை அழித்த ஆரணி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அணுகினார். இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, சாவித்திரி மன அழுத்தம் காரணமாக மரணமும் அடைந்து விட்டார். எனினும், சாவித்திரியின் குடும்பத்தினர் தொடர்ந்து வழக்கை நடத்தினர்.

வழக்கு முடிந்து மனித உரிமை ஆணையம் தன் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளது.பயிர்களை சேதப்படுத்தக் காரணமாக இருந்த டி.எஸ்.பி. ஜரீனா பேகம் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சத்தை சாவித்திரியின் குடும்பத்துக்கு இழப்பீடாக வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

டி.எஸ்.பி ஜரீனா பேகம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன்

மேலும் அந்த அறிக்கையில், ''போலீஸ் அதிகாரிகள் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்கள். ஆனால், டி.எஸ்.பி. ஜரீனா பேகம் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு, சாவித்திரியின் உரிமையை பறிக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளார். சாவித்திரி இப்போது உயிருடன் இல்லை. எனினும், அவரின் உறவுகள் டி.எஸ்.பி ஜரீனா பேகத்திடம் இருந்து நஷ்டஈடு பெற தகுதியானவர்கள் என்று இந்த ஆணையம் கருதுகிறது'' என்று தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறுகையில், ''தமிழ்நாடு அரசுக்கு ஜரீனா பேகத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். ஜரீனா பேகத்திடம் இருந்து ரூ. 5 லட்சம் வசூலித்து சாவித்திரியின் குடும்பத்திடம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளோம்'' என்று கூறினார்.

சட்டத்தை கையில் எடுத்து அப்பாவி மக்களை வதைப்பவர்களுக்கு மனித உரிமை ஆணையம் காட்டிய காட்டம் பாடமாக அமையட்டும்!

"பஞ்சமி நில விவகாரத்தில், நான் அறிவாலயம் பெயரைப் பயன்படுத்தினேனா?!" - திருமாவளவன் விளக்கம்
அடுத்த கட்டுரைக்கு