தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் பலர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை ராமமூர்த்தியை சந்தித்து புகார் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதில், 'மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 48 நாட்கள் ஆகிறது. ஆனால், இதுவரை முசிறி தாலுகாவில் உள்ள வாய்க்கால்களுக்குத் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கும் இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. அதனால் தண்ணீர் வந்து சேர தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். “மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து 48 நாள்கள் ஆச்சு. கடைமடைப் பகுதியான நாகை, திருவாரூர் மாவட்டப் பகுதிகளுக்கு காவிரி தண்ணி போய்ச் சேரலைன்னா கூட, பரவாயில்லைன்னு விட்றலாம். ஆனா, மத்தியில் உள்ள திருச்சி மாவட்டத்துக்கே இன்னும் தண்ணீர் முழுசா வந்து சேரலை. இப்படியிருந்தா எப்படி விவசாயிங்க விவசாயம் செய்ய முடியும்.

குறிப்பாக, முசிறி தாலுகாவில் உள்ள மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், ஆமூர் வாய்க்கால், வடகரை வாய்க்கால், கட்டளை வாய்க்கால் என எந்த வாய்க்காலுக்கும் தண்ணீர் வரலை. மேட்டூர் அணையில் இருந்து 25,000 கனஅடி தண்ணீர் திறந்து விடுறது தான் இதுக்கு ஒரே தீர்வு.
அதேபோல, திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே ஸ்ரீராமசமுத்திரத்தில் வடகரை வாய்க்கால் இருக்கிறது. அந்த வாய்க்காலினுடைய தலைப் பகுதியில், காவிரி ஆற்றில் மணல் அள்ளியிருக்கிறார்கள். இதனால், வாய்க்காலுக்கு தண்ணீர் பிரியும் இடத்தில் காவிரி ஆறு 10 அடிக்கு பள்ளம் உருவாகியிருக்கு. இப்படியிருந்தா எப்படிங்க ஆத்துல போற தண்ணீர், மேல ஏறி வாய்க்காலுக்கு வரும். அதனால மாயனூர் தடுப்பணை பக்கத்துலயே வடகரை வாய்க்காலுக்கு தலைப்பை மாத்தணும்னு சொல்லி அதிகாரிகள்கிட்ட கேட்டிருக்கோம்” என்றார்.