Published:Updated:

டெல்லி: `இது விவசாயிகளுக்கு ஆதரவான குரல்...' சீக்கிய மதகுரு தற்கொலை! - யார் இந்த பாபா ராம் சிங்?

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக சீக்கிய மத குரு ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், போராட்டம் தொடங்கி 21 நாள்களாகியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. `வேளாண் சட்டங்களை அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்’ என்று விவசாயிகளும் உறுதியாக இருக்கிறார்கள். போராட்ட களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு பெருகிவருகிறது. பஞ்சாப் டி.ஐ.ஜி., தன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்தார், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் சிலர் தங்கள் விருதுகளை அரசுக்குத் திருப்பியளித்து விவசாயிகளுக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

நவம்பர் 26-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில், தற்போதுவரை சில விவசாயிகள் இறந்திருப்பதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு செய்தி அறிக்கையை மேற்கோள்காட்டி, 17 நாள்களில் 11 விவசாயிகள் இறந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தநிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக சீக்கிய மத குரு ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

யார் இந்த பாபா ராம் சிங்?

ஹரியானா, கர்னல் மாவட்டத்தின் நிசிங் பகுதியிலுள்ள சிங்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்த் பாபா ராம் சிங். சீக்கிய மதகுருவான இவருக்கு 65 வயதாகிறது. பாபா ராம் சிங், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் சிங்கு எல்லையிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள டெல்லி - சோனிபட் எல்லையிலுள்ள குண்ட்லி பகுதிக்கு நேற்று வருகை தந்தார். அங்கு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை எழுதிவைத்துவிட்டு, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.

இதையடுத்து பானிபட்டிலுள்ள பார்க் மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் ராம்சிங் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக விட்டுச் சென்ற குறிப்பில் `விவசாயிகளின் வலியைத் தாங்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாபா ராம் சிங் தன் தற்கொலைக் குறிப்பில், `விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக, சாலைகளில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் நீதி வழங்கவில்லை, இது மிகக் கொடுமை. துன்புறுத்தலை சகித்துக்கொள்வதும் பாவம், ஒடுக்குவதும் பாவம். சிலர் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், கொடுமைக்கு எதிராகவும் நிற்கின்றனர். சிலர் விருதுகளைத் திருப்பி அனுப்பியிருக்கின்றனர். அரசின் கொடுமைக்கு எதிராக நான் தற்கொலை செய்துகொள்கிறேன். இது கொடுமைக்கு எதிரான குரல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல்" என்று பஞ்சாபி மொழியில் குறிப்பிட்டிருந்தார்.

சந்த் பாபா ராம் சிங்கின் இறுதிச் சடங்குகள் கர்னாலில் நடைபெறும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பாபா ராம் சிங்கின் தற்கொலைச் சம்பவம் விவசாயிகளின் போராட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடிதம்
கடிதம்

பாபா ராம் சிங் தற்கொலை தொடர்பாக மத்திய அரசைக் கடுமையாகச் சாடியிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``பல விவசாயிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். மோடி அரசு கொடுமையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது. பிடிவாதமாக இருப்பதை நிறுத்துங்கள். உழவர் எதிர்ப்பு சட்டங்களை திரும்பப் பெறுங்கள்’’ என்று இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார். மேலும், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், சந்த் பாபா ராம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தன் ட்விட்டர் பக்கத்தில், ``சந்த் பாபா ராம் சிங் ஜியின் தற்கொலை பற்றிய செய்தி வேதனையானது. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் விவசாயிகள் தங்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள். விவசாயிகளின் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும். மூன்று கறுப்பு சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ``பாபா ராம்சிங் ஜியின் மரணம் சமூகம், நாடு, மாநிலம் மற்றும் எனக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது மிகுந்த துக்கத்தின் தருணம். பாபா ஜி ஆத்மா தெய்விகத்தை சந்தித்தது. அவர் காட்டிய மனித நலப் பாதையில் நடப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும்” என்று தன் இரங்கலை பதிவு செய்திருக்கிறார்.

டெல்லி: `நியாயம் கிடைக்கவில்லையென்றால் 2024 வரை போராடத் தயார்!’ - விவசாயிகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு