Published:Updated:

விவசாயிகள் போராட்டம்: `ஒருத்தர் வாழ்வதற்குத்தான் இந்தியாவா?' - கொதிக்கும் பாலபாரதி!

மோடிக்கும், அமித் ஷாவுக்கும் எவ்வளவு பிடிவாதம் இருக்கிறதோ அதைவிடப் பல மடங்கு பிடிவாதம் கொண்டவர்கள் விவசாயிகளும் நாங்களும் - பாலபாரதி

``விவசாயி என்றால் போராட்டம்... போராட்டம்தான் இனி விவசாயம்'' என்று முழங்கி, விவசாயிகளுக்கு ஆதரவாகத் தனது கருத்துகளைத் தொடர்ந்து அழுத்தமாகப் பதிவு செய்துவருகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி. மூன்று வேளாண் சட்டங்களையும் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடும் விவசாயிகளுடன் களம் காண்கிறார். அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

``மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை உண்மையாக உணர்ந்திருக்கிறதா?''

``டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் என்பது இந்தியாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத போராட்டம். இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு நடப்பதுபோல் மோடியும், பா.ஜ.க ஆதரவாளர்களும் சொல்வது கேலிக்குரிய வார்த்தைகள். உண்மை என்ன என்பதை உணர்வதற்கு மறுக்கும் அரசாங்கத்தின் பிடிவாதம் இது.’’

பாலபாரதி
பாலபாரதி

``எதிர்க்கட்சிகள் பின்புலமாக இல்லாமல் இவ்வளவு விவசாயிகள் டெல்லியில் திரளக்கூடிய சாத்தியம் இருக்கிறதா?’’

``நிச்சயம் இருக்கிறது. தன்னிச்சையக எழுந்த போராட்டம் இது. பெரும் உலக நாடுகளின் கவனத்தையும் இந்தப் போராட்டம் ஈர்த்திருக்கிறது. கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய நாடுகள் சபை இப்படி நான்கு முக்கிய இடங்களிலிருந்தும் தங்கள் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். `விவசாயிகள் பிரச்னையை உடனே பாருங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது அவர்களையெல்லாம் எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டிருப்பார்கள் என்று சொல்வார்களா... எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டுத்தான் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது என்ற பிரசாரம் மிகவும் மோசடியானது.''

``டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 19 நாள்களைக் கடந்தும், மத்திய அரசு இறங்கி வருவதுபோல் தெரியவில்லையே?’’

``அவர்களுக்கு இனி இறங்கி வருவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஏனென்றால், விவசாயிகள் தங்கள் குழந்தைகள், குடும்பங்கள் என ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு உறுதியோடு தெருவில் உட்கார்ந்து போராடுகிறார்கள். அப்படியிருக்கும்போது வெறும் கையோடு அவர்கள் திரும்பிப் போவார்களா... ஆனால், மத்திய அரசாங்கம் விவாதிக்க வேண்டும் என்று இப்போது சொல்கிறார்கள். அதெல்லாம் பின்னால் நாடாளுமன்றத்தில் விவாதித்துக்கொள்ளலாம். மாநில சட்டசபையில் பேசிக்கொள்ளலாம். முதலில் சட்டத்தை வாபஸ் வாங்கி, களத்தில் இருக்கும் 1.20 கோடிப் பேரையும் பத்திரமாக வீடு திருப்புங்கள்.''

பாலபாரதி
பாலபாரதி

``உண்மையிலேயே இந்தச் சட்டம் விவசாயிகளை பாதிப்படைய வைக்கிறதா?''

``ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 10,000 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலைகள் செய்துகொள்கிறார்கள். விவசாயிகள் விரும்பிச் சாவை ஏற்பார்களா... காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது மோடி `` `ஜெய் ஜவான்... ஜெய் கிசான்' என்று முழக்கமிட்டார். `மன்மோகன் சிங் ஆட்சியில் தற்கொலைகள் நடக்கின்றன. எங்கள் ஆட்சி வந்தால் விவசாயிகளைப் பாதுகாப்போம், ராணுவ வீரர்களைப் பாதுகாப்போம்' என்றார். ஆனால், இன்றைக்கு விவசாயிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. மோடியின் ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை மேலும் அதிகரித்திருக்கிறது.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``மோடி அரசாங்கம் விவசாயிகளுக்குக் கொடுத்த ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை என்று சொல்கிறீர்களா?''

``இல்லையே... ஒன்றரை மடங்கு விலை உயர்வு கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள். அதை நிறைவேற்றினார்களா... இல்லையே. இந்தச் சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகபட்ச விலை கொடுப்பார்கள். அதனால், விவசாயிகளுக்குப் பெரும் லாபம் கிடைக்கும் என்கிறார்கள். பெரும் முதலாளிகள் விவசாயிகளிடமிருந்து வாங்கினால் அவர்களுக்கு லாபம் இல்லாமலா வாங்குவார்கள் அல்லது விவசாயிகள் லாபம் அடைய வேண்டும் என்று வாங்குவார்களா... அடுத்தது, விவசாயிகள் சுயமாக விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும். 10,000 ஏக்கர் நிலத்தை அதானி குழுமம் திண்டுக்கல்லில் எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் திண்டுக்கல் மக்களுக்கு என்ன தேவை, தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டு விவசாயம் செய்வார்களா?

உலக நாடுகளுக்கு என்ன மாதிரியான பொருள்களை அனுப்பினால் லாபம் வருமோ அதைத்தான் பயிர் செய்ய விரும்புவார்கள். மாம்பழ ஜூஸ், உருளை சிப்ஸ் செய்ய 10,000 ஏக்கர் எடுத்துக்கொண்டால்... அப்போது நமக்குப் பாசிப் பயிறு, துவரம் பருப்பு, காய்கறிகளெல்லாம் எப்படிக் கிடைக்கும்?

நம் விவசாயம்தானே அழிந்துபோகும்... இன்னொரு பக்கம், உணவுப்பொருள்களின் விலை கடுமையாகக் கூடும். அதனால்தான் கடுமையாக எதிர்க்கிறோம்.''

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

``விவசாயிகள் உட்பட எல்லாருமே லாப நோக்கில்தானே தொழில் செய்கிறார்கள்?''

``கார்ப்பரேட் உள் நுழைந்தால், அவர்கள் தாங்கள் விரும்பிய பணப்பயிரைத்தான் சாகுபடி செய்வார்கள். இன்னொரு விஷயம், நிலத்தைக் குத்தகைக்குக் கொடுக்கும் விவசாயிக்குக் காலப்போக்கில் அந்த ஒப்பந்தம் பிடிக்காமல் போகலாம் அல்லது ஏதாவது பிரச்னை ஏற்படலாம். பிரச்னை ஏற்பட்டால், அவர் மாநில அரசிடம் அதைக் கொண்டு செல்ல முடியாது. மாநில அரசு இந்தப் பிரச்னையில் தலையிட உரிமையில்லை என்று இந்த சட்டம் சொல்கிறது. அடுத்து அவர்கள் நீதிமன்றம் செல்லவும் உரிமையில்லை. எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, எதிர்காலத்தில் பிரச்னை என்றால் எங்கு சென்று அவர்கள் முறையிட முடியும்... ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி நீதி கேட்க எங்குப்போவார்... சிறு, குறு விவசாயிகள் அனைவரும் அடிபட்டுப்போவார்கள். அவர்கள் காலப்போக்கில் நிலத்தை இழந்துவிடுவார்கள்.''

``நிலத்தைக் குத்தகைக்குக் கொடுக்கும் விவசாயி, இந்தச் சட்டத்தைத் தெரிந்து, புரிந்துகொண்டு முழுச் சம்மதத்தோடுதானே கொடுக்க முன்வருவார்... அப்படியிருக்க என்ன பிரச்னை எழப்போகிறது?''

``நீங்கள் உங்கள் நிலத்தைக் கொடுப்பீர்கள். நான் உங்களுக்குப் பக்கத்து நிலம். நான் தர மாட்டேன். அது என் உரிமை. ஆனால், உங்கள் நிலம் மட்டும் அந்த கார்ப்பரேட்காரனுக்குப் போதுமா... அதை மட்டும் எடுத்து சாகுபடி செய்வானா? அவனுக்குத் தேவை மொத்த நிலம் தானே... நான் தனியாக விவசாயம் செய்வேன் என்ற சுதந்திரம் இங்கு அடிப்படுகிறதே... அடுத்து, விவசாயிகளை ஏஜென்ட்டை வைத்து அடித்து வாங்கும் வியாபாரம் தொடங்கும். நிலம் போய்விட்டதென்றால் விவசாயிகள் என்ன செய்வார்கள்? அதனால்தான் விவசாயிகள் தங்கள் நிலத்தை கார்ப்பரேட்களிடம் கொடுக்கும் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு வகையில் முன்னோர்கள் பாடுபட்ட அந்த நிலத்தை அவன் உழுது, அடுத்த தலைமுறைக்கும் கொடுப்பான். அதைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இங்கு இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் லட்சம் லட்சமாக... கோடி கோடியாகச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது விவசாயி நிலத்திலும் கைவைத்தால் எப்படிப் பொறுக்க முடியும்... நிலம் அவன் சொத்து. அதையும் அவன் வைத்திருக்கக் கூடாதா... எதற்காக இந்தச் சட்டம்? நான் ஒப்பந்தம் போடுவேன், போடாமல் இருப்பேன். அதற்கு ஒரு சட்டம் வேண்டுமா?''

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

``அப்படி நடக்குமோ... இப்படி நடக்குமோ என யூகங்களின்படிகூட விவசாயிகள் பயப்படலாமா?''

``யூகங்களுக்கு இங்கு இடமே இல்லை. நடப்பதை, நடக்கப்போவதை விவசாயிகள் உணர்ந்திருக்கிறார்கள். அதானி, அம்பானி குழுமங்கள் கிட்டத்தட்ட 95 லட்சம் டன் உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்கக்கூடிய கிடங்குகளைக் குளிர்சாதன வசதியோடு கட்டி முடித்துவிட்டார்கள். மத்திய அரசின் உணவுக் கிடங்குகளைவிட மூன்று மடங்கு இது பெரியது. இந்த குடோனை எதற்கு இப்போது கட்டினார்கள்... அரசாங்கம் சொல்லித்தானே இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டியிருப்பார்கள்... அடுத்து அரிசியும் கோதுமையும் அங்கே சென்று பதுங்கிவிடும். மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கான பொருள்களின் விலை மிக அதிகமாகிவிடும். இது மிக கவனமாகப் பார்க்க வேண்டிய சட்டம். அதனால்தான் 18 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்த்தார்கள். பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்ற விவசாயத்துறை மந்திரியே ராஜினாமா செய்துவிட்டார்.''

``தமிழக அரசு இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறதே... முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `நான் ஒரு விவசாயி... இந்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை' என்கிறாரே?''

``முதல்வர் ஒன்றும் புரியாமல் இந்தச் சட்டத்துக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார். கொரோனாவால் ஓர் உயிரிழப்புகூட ஏற்படாது என்று சட்டசபையில் சொன்னார். கொரோனாவால் எவ்வளவோ உயிர்கள் தமிழகத்தில் போயின... உயிர் போன பின், `கடவுளின் செயல்' என்று சொல்லிவிட்டார். இப்படி மாற்றி மாற்றிப் பேசுபவர், இதில் மட்டும் எப்படித் தெளிவாகப் பதில் தர முடியும்?''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``மோடியும், அமித் ஷாவும், சட்டத்தை வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள். அப்படியிருக்க விவசாயிகளும் நீங்களும் என்ன செய்ய முடியும்?''

``அதற்காகத் தெருவிலேயே விவசாயிகள் இருக்க முடியுமா? அடுத்து ஐக்கிய நாடுகள் சபையைத் தலையிட வைப்போம். இன்னும் எல்லா மாநிலங்களிலும் போராட்டத்தை விரிவு படுத்துவோம். இனி அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டிவிட்டுத்தான் ஆக வேண்டும். எங்களுக்கும் வேறு வழி இல்லை. இந்தியாவில் ஒரு மனுஷன்தான் வாழுவானா?

அதிகார மையத்தை ஆடவைப்போம். மோடிக்கும் அமித் ஷாவுக்கும் எவ்வளவு பிடிவாதம் இருக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு பிடிவாதம் கொண்டவர்கள் விவசாயிகளும் நாங்களும்.''

வேளாண் சட்டங்கள்: `தீர்வுகளை பா.ஜ.க அரசுக்கு புரியவைக்க முடியாது!’ - பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

``கொரோனா இரண்டாம் அலை வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்தச் சமயத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடுவது ஆபத்து என்று மத்திய அரசு சொல்வது ஏற்கத்தக்க வாதம்தானே?''

``கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தியும், உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. எந்த அளவுக்குப் பாதுகாப்போடு போராட வேண்டுமோ அந்த அளவுக்குப் பாதுகாப்போடுதான் போராடுகிறார்கள். இந்த அரசுக்கு உண்மையாகவே விவசாயிகளின் நலன், மக்கள் நலன் மீது அக்கறை இருந்தால் உடனே சட்டத்தை வாபஸ் வாங்குங்கள். எல்லாரும் உடனே கலைந்து வீடு திரும்புவார்கள். கொரோனா அச்சுறுத்தலுக்குப் போராட்டக்காரர்கள் காரணம் கிடையாது. அரசாங்கம்தான் காரணம். அதன் பிடிவாதம்தான் காரணம். நிச்சயம் இந்தச் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் ஓயாது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு