Published:Updated:

இனி நாட்டுமாடுகளே தேவையில்லையா... என்ன சொல்கிறது புதிய கால்நடைச் சட்டம்?

தமிழக அரசு புதிதாகக் கொண்டுவரவிருக்கும் கால்நடைச் சட்டம் நாட்டு மாடுகள் மற்றும் விவசாய ஆர்வலர்களிடையே பெரும் எதிர்ப்பை சந்தித்துவருகிறது.

நாட்டு மாடு
நாட்டு மாடு

அதிக பால் உற்பத்திக்காக மத்திய அரசு `வெண்மைப் புரட்சி'யைக் கொண்டுவந்தது. இதனால் அதிக அளவில் வெளிநாட்டு மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு கலப்பின மாடுகள் உருவாக்கப்பட்டன. அப்போதே நாட்டு மாடுகளுக்கு ஆபத்து என்று எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கின. ஆனால், அப்போதைய வெண்மைப் புரட்சி தாகத்தால் பால் உற்பத்தி அதிகமாகி, நாட்டு மாடுகள் உற்பத்தி குறையத் தொடங்கின. அதிகமான பாரம்பர்ய நாட்டு மாடுகளைக் கொண்ட இந்தியாவில் இப்போது பர்கூர், காங்கேயம், உம்பளாச்சேரி, சாகிவால், தார்பார்க்கர், ஓங்கோல் உள்ளிட்ட சில இனங்களே எஞ்சி நிற்கின்றன. ஆனால், மிச்சம் இருக்கும் அந்த நாட்டு மாடுகளையும் அழிக்கும் நோக்கில் தமிழக கால்நடைத் துறை இறங்கியிருப்பதுதான் நாட்டு மாட்டு ஆர்வலர்களைக் கவலையடைய வைத்திருக்கிறது.

தமிழகத்தில் மாடுகள் மற்றும் எருமைகளின் இனப்பெருக்க நடவடிக்கைளை முறைப்படுத்துவதற்காக, `தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம்-2019' (Tamilnadu Bovine Breeding Act 2019) என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின்படி கால்நடைத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும். கால்நடை வளர்ப்போர் அனைவரும் இந்த அமைப்பின் கீழ் கொண்டுவரப்படுவர். இந்த அமைப்பு சொல்லும் விதிகளைத்தான் முறையாகப் பின்பற்ற வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தில் முழுமையாக ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன், ஜெர்சி போன்ற வெளிநாட்டு மாட்டு இனங்களை ஊக்குவிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள், நாட்டு மாட்டு ஆர்வலர்கள்.

இதுகுறித்து காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர், கார்த்திகேய சேனாபதி பேசும்போது, ``எதற்காக புதிய சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவருகிறது என்பது சந்தேகத்தைத்தான் ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 80 லட்சம் மாடுகளுக்கு மேல் இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, செயற்கை முறையில் கருவூட்டப்படும் 90 சதவிகித மாடுகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற மலிவு விலை சினை ஊசிகளைத்தான் பயன்படுத்துகின்றனர். அதற்கெல்லாம் இன்று அரசாங்கம்தான் 15 ரூபாய் முதல் 40 ரூபாய் எனும் மலிவு விலையில் சினை ஊசி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் கால்நடை வளர்ப்போரும் எளிதாகக் கால்நடைகளை சினைக்குக் கொண்டு வருகிறார்கள். இந்தச் சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் இதுநாள்வரை அரசாங்கத்திடம் இருந்த சினை ஊசித் தயாரிப்பானது தனியார் நிறுவனங்களின் வசம் போய்விடும். தனியார் வசம் போனால் அவர்கள் வைப்பதுதான் விலை என்ற நிலை ஏற்படும்.

Vikatan

தற்போது 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஊசி, தனியார் மூலம் 2,000 ரூபாய் வரைக்கும் விற்பனையாகும். காளைகளை வைத்திருப்போர் அரசாங்கம் உருவாக்கப்போகின்ற புதிய அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப் பதிவு செய்யாவிட்டால், 50,000 ரூபாய் வரைக்கும் அபராதம் விதிக்கப்படும். கால்நடைகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் சாதாரண விவசாயியால் எப்படி 50,000 ரூபாயைக் கட்ட முடியும். மாடுகளை வைத்திருக்கும் எந்த விவசாயியின் வீட்டையோ தோட்டத்தையோ, எப்போது வேண்டுமானாலும், அதிகாரிகளால் சோதனையிட முடியும். பதிவுசெய்யப்பட்ட காளை முழு உடற்தகுதியுடன் இல்லாத பட்சத்தில், அந்தக் காளைகளை அந்த அமைப்பு கொல்லச் சொல்லும். இது முழுமையாக மாடுகளின் இனப்பெருக்கத்துக்குச் சினை ஊசிகள் மட்டும்தான் தீர்வு என்கின்ற நிலையை நோக்கி நகரும். இன்னும் சொல்லப்போனால், கால்நடைத்துறை விலை போய்விட்டது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது" என்றார்.

நாட்டு மாடு vs கலப்பின மாடு
நாட்டு மாடு vs கலப்பின மாடு

இதுபற்றி கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர், உடுமலை ராதாகிருஷ்ணனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ``இதுபற்றிய விவரங்களைக் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநரிடம் என்னுடைய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். அதனால் அவரிடம் பேசுங்கள்." என்றார்.

கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் பாஸ்கரனிடம் பேசினோம். ``இப்போது அவர்களுடைய இஷ்டத்துக்கு மாடுகளை வளர்க்கிறார்கள். நோய் வாய்ப்புள்ள ஒரு காளை மற்ற பசுக்களுடன் இணையும்போது நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம். அதனால் காளைகளை வளர்ப்போர் முழுத்தகுதியுடன் இருக்கிறதா என்பதைச் சோதனை செய்து பதிவுசெய்ய வேண்டும். அதேபோல ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன் ஆகிய மாடுகள் குளிர் பிரதேசங்களிலும், ஜெர்சி மாடுகள் சமவெளிப் பகுதிகளிலும் மட்டுமே நன்றாக வளரும். புதிய சட்டத்தின்படி, இனி வெளிநாட்டு மாடுகளை அந்தந்தப் பகுதிகளில்தான் வளர்க்க வேண்டும். மேலும், அரசின் சினை ஊசி உற்பத்தி மையங்கள் மூன்று இருக்கின்றன. புதிதாக ஒன்று அமைக்கப்பட இருக்கிறது.

இப்படி நாட்டுமாடுகளின் பங்கைக் குறைப்பதில் அதற்காக அரசு தீவிரம் காட்டுகிறது என்பதுதான் பலரின் சந்தேகமாக இருக்கிறது.

எனவே, நாங்கள் ஏன் தனியாருக்கு சினை ஊசி செலுத்தும் பொறுப்பையோ, தயாரிக்கும் மையங்களையோ கொடுக்கப் போகிறோம். எப்போதும் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தனியார் பால் நிறுவனங்களையும், தனியார் மாடுகளை வளர்ப்பவர்களையும் முறையாக மாடுகளை வளர்க்க இந்தச் சட்டம் உதவும். இதில் பயப்படத் தேவையே இல்லை. நாங்கள் பால் உற்பத்தியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இனி நாட்டு மாடுகளின் தேவை நமக்கு இல்லை. அவற்றால் அதிக பால் கொடுக்க முடியாது. அதனால் அவற்றைத் தவிர்த்து இனி வெளிநாட்டு மாடுகளின் மீதுதான் கவனம் செலுத்தப் போகிறோம்." என்றார்.

இப்படி நாட்டுமாடுகளின் பங்கை குறைப்பதில் எதற்காக அரசு தீவிரம் காட்டுகிறது என்பதுதான் பலரின் சந்தேகமாக இருக்கிறது.