Published:Updated:

சீர்திருத்த அறிவிப்பு... விவசாயிகளுக்கு நன்மை தருமா?

அரசின் அறிவிப்புக்கு ஆதரவும் அதிருப்தியும்!

பிரீமியம் ஸ்டோரி
கோவிட்-19 நோய்த் தொற்றால் முடங்கிக் கிடக்கும் நம் பொருளாதாரத்தை முடுக்கிவிட ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதன் ஒரு பகுதியாக, ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் விவசாயத் துறையில் உள்கட்டமைப்பை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களையும் அறிவித்திருக்கிறார். அத்துடன், விவசாயத் துறையில் வளர்ச்சியைக் கொண்டுவரும் சில சீர்திருத்த அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அரசின் இந்த அறிவிப்புகளுக்கு எதிராக விமர்சனக் குரல்கள் ஒருபக்கம் எழுந்தாலும், சில பொருளாதார அறிஞர்களும், விவசாயத்துறை நிபுணர்களும் இவற்றை வரவேற்கவே செய்கிறார்கள்.

சீர்திருத்த அறிவிப்பு... விவசாயிகளுக்கு நன்மை தருமா?

எங்கு வேண்டுமானாலும் விற்கலாம்..!

`விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டுபோய் விற்கலாம்’ என்று அரசு இப்போது வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார் விவசாயப் பொருளாதாரத்துறை நிபுணரான அசோக் குலாட்டி. இவர், விவசாய விளைபொருள்களுக்கான விலை நிர்ணயம் தொடர்பான அரசு அமைப்பின் (Commission for Agricultural Costs and Prices) முன்னாள் தலைவர்; சர்வதேசப் பொருளாதார உறவுக்கான இந்திய கவுன்சிலின் (Indian Counsil for Research on International Economic Relations) பேராசிரியர்.

சந்தை
சந்தை

‘‘ `விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை உள்ளூர் மண்டிகளில் விவசாய விளைபொருள் மார்க்கெட்டிங் கமிட்டியிடம் (APMC) மட்டுமே விற்க வேண்டும்’ என்று இருப்பதை மாற்றி, எங்கு தேவை இருக்கிறதோ, அங்கு கொண்டுபோய் விற்க அனுமதிக்க வேண்டும்’ என்று கடந்த 20 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். பிரதமர் மோடி கடந்த ஆட்சிக் காலத்திலேயே இதைச் செய்திருக்க வேண்டும். கோவிட்-19 நெருக்கடியைப் பயன்படுத்தி இப்போதாவது செய்திருக்கிறார்களே என்று மகிழ்ச்சியடைகிறேன். விவசாயிகள் தங்கள் விளைபொருளை எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோய் விற்கும்போது போட்டி அதிகரிக்கும். இதனால் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்’’ என்கிறார் அவர்.

இந்தச் சீர்திருத்த அறிவிப்புகள் குறித்து `ஸ்வராஜ்யா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான எம்.ஆர்.சுப்பிரமணி இப்படிச் சொன்னார்... ‘‘ `1991-ம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் கொண்டுவந்த சீர்திருத்த நடவடிக்கையைவிட முக்கியமானதாக அரசின் இந்த நடவடிக்கை இருக்கும்’ என விவசாய விளைபொருள்களை வாங்கி விற்கும் வர்த்தகர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக, மேற்கு வங்காளத்தில் உருளைக்கிழங்கு விளைச்சல் மிக நன்றாக இருக்கிறது. ஆனால், அதை அண்டை மாநிலங்களில் விற்க அந்த மாநில அரசாங்கம் அனுமதிப்பதில்லை. எனவே, ஒடிசாவுக்குத் தேவையான உருளைக்கிழங்கை பஞ்சாப்பிலிருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மத்திய அரசு இப்போது கொண்டுவந்திருக்கும் மாற்றத்தால் ஈரோட்டில் மஞ்சள் விளைவிக்கும் விவசாயி, தன் விளைபொருளை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

சந்தை
சந்தை

விவசாயிகள்தான் கஷ்டப்பட்டு விளைபொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், அவர்களிடம் பொருளை வாங்குபவர் ஒருவர், அவரிடமிருந்து வாங்கி விற்பவர் இன்னொருவர் எனப் பத்துக்கும் மேற்பட்ட கைகள் மாறி, அந்தப் பொருள் வாடிக்கையாளரைச் சென்றடைகிறது. பொருளை ஒவ்வொருவரும் கைமாற்றிவிடும்போது தங்களுக்கெனச் சில சதவிகித லாபத்தை வைப்பதால், பொருளின் விலை அபாரமாக உயர்ந்துவிடுகிறது. இதனால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதில்லை; அதை வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளரும் அதிக விலை தர வேண்டியிருக்கிறது. இனி மொத்த விற்பனையாளர் நேரடியாக விவசாயியை அணுக வாய்ப்பிருப்பதால், வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமான விலை விவசாயிக்குக் கிடைக்கும்; அதைக் குறைந்த விலைக்கு வாடிக்கையாளருக்குத் தரவும் முடியும்’’ என்றார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல சில விவசாய விளைபொருள்கள் அத்தியாவசியமான பொருள்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றின் விலை சந்தையின் தேவைக்கேற்ப இருக்கும்படி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. தானியங்கள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய பொருள்கள் அவை. அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலின்கீழ் இந்தப் பொருள்கள் இருப்பதால், நல்ல விலை கிடைக்கும்போது விவசாயிகளால் இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. இனி இவற்றை எந்தக் கட்டுப்பாடுமின்றி கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், விலை அதிகமாக உயரும்போதோ, பஞ்சம் ஏற்படும்போதோ, தேசியப் பேரிடர் காலத்திலோ அதிக அளவில் கையிருப்பில் வைத்துக்கொள்ள முடியாது என்பது முக்கியம்.

சீர்திருத்த அறிவிப்பு... விவசாயிகளுக்கு நன்மை தருமா?

எதிர் விமர்சனங்கள்..!

‘‘விவசாயத்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதைவிட, விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்குகிற மாதிரி நிவாரணத் திட்டங்களை அறிவித்திருக்கலாம்.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சீர்திருத்தங்களால் விவசாயிகள் பலனடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். அதுவரை விவசாயிகள் கஷ்டப்பட வேண்டுமா?’’ என்கிறார்கள் விவசாயிகள்.

`விளைபொருள் விதைக்கப்படுவதற்கு முன்னரே விலை ஒப்பந்தம் செய்துகொள்ள உதவும் ‘கான்ட்ராக்ட் ஃபார்மிங்’ முறையைக் கொண்டுவருவது மாதிரி சட்ட விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்’ என்று நிதியமைச்சர் சொல்லியிருப்பது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும்; இதனால் விவசாயிகளின் வருமானம் குறையும் என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

தங்கள் ஆட்சிக்காலம் முடிவதற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவோம் என்று முன்பே சொல்லியிருக்கிறது பா.ஜ.க அரசாங்கம். மத்திய அரசாங்கம் இப்போது கொண்டுவந்திருக்கும் சீர்திருத்த நடவடிக்கை மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகுமா என்று பார்ப்போம்.

விவசாயிகளுக்குப் பயனளிக்காத அறிவிப்புகள்!

நிதியமைச்சரின் அறிவிப்பு குறித்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தர விமலநாதனிடம் பேசினோம். ‘‘மத்திய அரசின் அறிவிப்பால் தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் பயிர்க் கடனை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தினால் வட்டி கிடையாது. இதைத்தான் பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்திவருகிறார்கள். இந்த நிலையில், `பயிர்க் கடனுக்கு மூன்று மாதங்கள் வட்டி ரத்து’ என்று அறிவித்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை இது பலனற்ற அறிவிப்பு.

சீர்திருத்த அறிவிப்பு... விவசாயிகளுக்கு நன்மை தருமா?

பயிர் விதைக்கும்போது கடன் வாங்கி, அறுவடை முடிந்த பிறகு கடனை அடைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஊரடங்கு காரணமாக விளைபொருள்களை விற்பனை செய்ய முடியாமல் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள் விவசாயிகள். இதனால் ஏற்கெனவே வாங்கிய பயிர்க் கடன் நிலுவையில் இருக்கிறது. கடன் நிலுவையில் இருக்கும்போது, புதிய கடன் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் கடன் கேட்கவில்லை. கடன் தள்ளுபடியைத்தான் எதிர்பார்த்தோம்.

சேமிப்புக் கிடங்குகள், மாநிலம்விட்டு மாநிலம் விளைபொருள்கள் விற்பனை, ஆன்லைனில் விற்பனை எனப் பல அறிவிப்புகள் விவசாயிகளுக்குத் துளியும் பயன்படாதவை. தமிழக விவசாயிகள் பெரும்பாலும் சேமிப்புக் கிடங்குகளைப் பயன்படுத்துவதில்லை. வியாபாரிகள்தான் விவசாயிகள் பெயரில் பயன்படுத்திவருகிறார்கள். `விளைபொருளுக்கான விலையை விவசாயிகளே முடிவு செய்யலாம்’ என்ற அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால், விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை அரசு அறிவித்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் அல்லது விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் விலை நிர்ணயித்தாலும், வியாபாரிகள் அதை வாங்க வேண்டுமே! எனவே, இந்த அறிவிப்பும் பயனற்றது.

தேனீ வளர்ப்பு அறிவிப்பு சற்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. ஆனால், அதன் மூலம் பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற முடியாது. அதுவும் நடைமுறைக்கு வந்தால்தான் உண்மையில் பயனளிக்குமா என்பது தெரியும். ஆக இது விவசாயிகளுக்கான அறிவிப்பு இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அறிவிப்பாகத் தோன்றுகிறது’’ என்றார் அவர்.

- ஆர். குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு