Published:Updated:

​படையெடுக்கும் எறும்புகளால் பலியாகும் கால்நடைகள்! ஊரை காலி செய்யும் விவசாயிகள்…

எறும்புகள்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊர் அருகே உள்ள முளையூரில் வினோத எறும்புகள் தரையெங்கும் பரவியுள்ளது எனவும், அதனால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த எறும்புகள் மண்புற்றுகள் ஏற்படுத்தி நகர்ந்து கொண்டே வரத் தொடங்கின.

​படையெடுக்கும் எறும்புகளால் பலியாகும் கால்நடைகள்! ஊரை காலி செய்யும் விவசாயிகள்…

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊர் அருகே உள்ள முளையூரில் வினோத எறும்புகள் தரையெங்கும் பரவியுள்ளது எனவும், அதனால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த எறும்புகள் மண்புற்றுகள் ஏற்படுத்தி நகர்ந்து கொண்டே வரத் தொடங்கின.

Published:Updated:
எறும்புகள்

​திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியை ஒட்டிய வேலாயுதம்பட்டி, ஆத்திப்பட்டி, குட்டிப்பட்டி ஆகிய கிராமங்களில் கால் வைக்கும் இடமெல்லாம் கட்டெறும்பு போன்ற வினோத எறும்புகள் மொய்க்கின்றன. சார் கால்களில் ஏறும் எறும்புகளை உதறி மட்டும் விடுங்கள் அடித்துவிடாதீர்கள் என எங்களை எச்சரித்து கொப்புளங்களாகவும், புண்களாகவும் இருந்த அவர்களின் கால்களை காட்டினார் வேலாயுதம்பட்டி விவசாயி பாக்கியம்.

விவசாயி பாக்கியம்
விவசாயி பாக்கியம்

அவரிடம் பேசினோம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான கரந்தமலையை ஒட்டி வேலாயுதம்பட்டி, உலுப்பக்குடி உள்ளிட்ட பல விவசாய கிராமங்கள் உள்ளன. அனைவர் வீடுகளிலும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊர் அருகே உள்ள முளையூரில் வினோத எறும்புகள் தரையெங்கும் பரவியுள்ளது எனவும், அதனால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த எறும்புகள் மண்புற்றுகள் ஏற்படுத்தி நகர்ந்து கொண்டே வரத் தொடங்கின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவை சாதாரண எறும்புகள் போல இல்லை. செந்நிறத்தில் கூட்டம் கூட்டமாகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மனிதர்களின் கால்களை மொய்க்கும் எறும்புகள் தோலை கடிப்பது இல்லை. ஆனால் நாம் எறும்புகளை அடித்துவிட்டால் அதிலிருக்கும் அமிலம் பட்டு தோலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டு புண்ணாகிவிடுகிறது. சிலருக்கு எறும்பினால் உண்டான காயத்தால் நடக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மலையடிவாரத்தில் வசித்துவந்த விவசாயிகள் எறும்பு அச்சத்தால் வேறு இடங்களுக்கு குடியேறி வருகின்றனர்.

எறும்பு
எறும்பு

காட்டுமாடு, காட்டுப்பன்றி, மயில், முயல், பாம்பு மற்றும் ஓணான் உள்ளிட்ட ஊர்வன உயிரினங்களின் கண்களை இந்த எறும்புகள் மொய்த்து திண்கின்றன. மேலும் கால் பாதங்களில் உள்ள குழம்புகளையும் அரிந்துவிடுகின்றன. இதனால் உயிரினங்கள் கண்தெரியாமலும், நடக்கமுடியாமலும் வனத்திற்குள் கிடந்து உயிரிழக்கின்றன.

எனது தோட்டத்தில் ஒரு காட்டுமாட்டு கன்று கூட நடக்கமுடியாமல் ஒரே இடத்தில் கிடந்து உயிரிழந்தது. இதுபோல ஏராளமான பாம்பு, முயல் போன்ற வனஉயிர்கள் பலியாகி வருகின்றன. குரங்கு, மான் போன்ற உயிர்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. எங்கள் பகுதியில் மட்டும் விவசாயிகள் வளர்க்கும் 200 ஆடு, மாடுகள் இந்த வினோத எறும்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னை காரணமாக விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.

பாதிக்கப்பட்ட ஆடு
பாதிக்கப்பட்ட ஆடு

தற்போதைக்கு சைட்டோடெக்ஸ் எனப்படும் பொடியை மருந்துக்கடைகளில் வாங்கி வந்து வீடுகளைச் சுற்றி தெளித்துக் கொள்கிறோம். இதற்கு ஒன்றிரண்டு நாள்கள் தப்பிக்கலாம். எனது உறவினர் குழந்தையின் முகத்தில் ஏறிய எறும்புகளை குழந்தை தெரியாமல் அடித்துவிட்டது. இதனால் அந்தக் குழந்தையின் முகம் காயமானாது. கண்களை தாக்கியிருந்தால் பார்வையிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். இதையெல்லாம் உணராத வனத்துறை அதிகாரிகள், எங்களால் எப்படி எறும்புகளைக கட்டுப்படுத்த முடியும் எனக் கைவிரித்துவிட்டனர் என்றார்.

கால்நடை மருத்துவர் சிங்கமுத்து, கரந்தமலை வனப்பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டோம். எறும்பு பரவல் அதிகமாக உள்ளது. இந்த வினோத எறும்பில் உள்ள பார்மிக் அமிலம் தோலில் படும்போது அரிப்பை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துகள் கொடுத்துவருகிறோம். இந்த எறும்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக வனத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.

பாதிக்கப்பட்ட ஆடுகள்
பாதிக்கப்பட்ட ஆடுகள்

மாவட்ட வன அலுவலர் பிரபு, “அவை எந்த வகையான எறும்புகள் என்பதை முதலில் அறிந்து கொள்வதற்காக நிபுணர்களை வரவழைத்தோம். பெங்களூர் அசோகா சுற்றுசூழல் மற்றும் சூழலியல் ஆய்வுக் குழுவினர் 5 பேர் கரந்தைமலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் அளித்துள்ள ரிப்போர்ட்டை தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்றார்.

பிரியதர்ஷன், அசிஷா உள்ளிட்ட பூச்சியியல் ஆய்வாளர்கள் கொடுத்துள்ள ஆய்வறிக்கையில், இவ்வகையான எறும்புகள் ஆசிய மஞ்சள் பைத்தியம் என அழைக்கப்படுகிறது. இந்த எறும்பு படையெடுப்பு பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை குறிப்பாக பூர்வீக இனங்கள் மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிரினங்களை பாதிக்கிறது.

வேலாயுதம்பட்டி
வேலாயுதம்பட்டி

கிறிஸ்மஸ் தீவில் உள்ள​ நண்டு​ இனத்தையே இவ்வகை எறும்புகள் அழித்துள்ளன. இது சுற்றுச்சூழலின் முழுமையான அழிவுக்கு வழிவகுக்கும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும்​. உலகின் முதல் 100 ஆபத்தான உயிரினங்களில் இவ்வகை எறும்பும் ஒன்று. பெரும்பாலும் ஆஸ்திரேலியா, மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த எறும்புகள் கடந்த காலங்களில் கேரள மாநிலத்தில் உள்ள காடுகளில் காணப்பட்டுள்ளது. அதை கேரள மத்திய பல்கலைக்கழக பிரதிநிதிகள் ஆய்வுக்கு உள்படுத்தியிருக்கின்றனர். உணவு சங்கிலியை துண்டிக்கும் இந்த எறும்பால் இயற்கையின் சமநிலை பாதிக்கும்.

பாதிப்பு
பாதிப்பு

இந்தப் படையெடுப்பு, வேறு எந்தப் பூச்சிகளோ அல்லது வேறு எந்த சிறு விலங்குகளோ தரையில் காணப்படாத அளவுக்கு விரிவடைந்துள்ளது. வனப்பகுதி முழுவதும், மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் பரவியுள்ளன. ​இந்த எறும்புகளால் ​பலவீனமான விலங்குகளே பொதுவாக பாதிக்கப்படுவதைக் கண்டறிந்தோம். மேலும் , முக்கிய தொற்று கண்கள், குளம்புகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் காணப்படுவதால் . கிராமவாசிகளின் நம்பிக்கைக்கு மாறாக எறும்புகள் ஃபார்மிக் அமிலத்தை தெளிப்பதால் தொற்று ஏற்படுகிறது என்று எங்கள் குழு நம்பவில்லை. எறும்பு கடித்தால்​,​ அமில ஒவ்வாமையை உருவாக்குவதன் விளைவாக கால்கள் மற்றும் கால்களில் வீக்கத்தைக் காட்டினர்.

கோடை மழையின் காரணமாக நிலப்பரப்பின் ஒரே நேரத்தில் வெப்பமான, ஈரப்பதமான மற்றும் ஈரமான நிலை மற்றும் அதிகரித்த உற்பத்தித்திறன் ஆகியவை எறும்புகளின் வளர்சிதை மாற்ற நடவடிக்கைகளுக்கு சாதகமாக இருந்திருக்கலாம்​.

வேலாயுதம்பட்டி
வேலாயுதம்பட்டி

கிராம மக்கள் எறும்புகளிடம் இருந்து தப்பிக்க சைபர்மெத்ரின் போன்ற வலுவான இரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அதை வெறுங்கையுடன் பயன்படுத்துவதைக் காண முடிந்தது. இது ஒவ்வாமை எதிர்வினைகளையும் ஏற்படுத்தக்கூடும். இத்தகைய இரசாயனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்​ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.