Published:Updated:

வெற்று அறிவிப்பா... வேளாண் பாதுகாப்பு மண்டலம்?

சந்தேகம் கிளப்பும் விவசாய சங்க பிரதிநிதிகள்...

பிரீமியம் ஸ்டோரி

தஞ்சாவூர், கரூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகளை, சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை ஒட்டுமொத்த தமிழக மக்களும் வரவேற்கிறார்கள்; பாராட்டுகள் குவிகின்றன. அதேசமயம், ‘`தேர்தல் நேரத்தில் வந்திருக்கும் இந்த அறிவிப்பு உள்நோக்கம்கொண்டது’’ என்று எச்சரிக்கிறார்கள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசினார், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன். “மத்திய அரசின் அனுமதி இல்லாமல், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுவிட்டால், அந்தந்தப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்ட அளவைப் பொறுத்து அங்கு அனுமதிக்கப்பட்ட ஆழத்துக்குமேல் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்குக்கூட மத்திய அரசுத் துறையின் அனுமதியைப் பெற வேண்டும். அப்படி இருக்கும்போது மாநில அரசே எப்படி இதை தன்னிச்சைாக அறிவிக்க முடியும்?

வெற்று அறிவிப்பா... வேளாண் பாதுகாப்பு மண்டலம்?
வெற்று அறிவிப்பா... வேளாண் பாதுகாப்பு மண்டலம்?

இது அரசியல் ஆதாயத்துக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், டெல்டா பகுதிகளில் அ.தி.மு.க கடும் சரிவைச் சந்தித்தது. அதற்கு, விவசாயிகளின் கோபம்தான் காரணம். இதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட தமிழக அரசு, வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில்வைத்து இப்படி ஒரு கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. தமிழக முதல்வர் உண்மையாகவே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என நினைத்திருந் தால், ஒரு வாரத்துக்கு முன்பாகக் கூட்டிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதை சட்டமாக நிறைவேற்றிவிட்டு, அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்.

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஏற்கெனவே நான்கு கட்டங்களாக டெண்டர்கள் விட்டாயிற்று.

ஓ.என்.ஜி.சி நிறுவனம், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவுசெய்து குழாய்களைப் பதித்துவிட்டு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதற்கு மத்திய அரசு எப்படிச் சம்மதிக்கும்? இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்’ என்றார். அவர் பேசிய அடுத்த வாரத்திலேயே ஹைட்ரோ கார்பனுக்கான இரண்டாம்கட்ட ஏல அறிவிப்பு வருகிறது. இந்த அரசு உண்மையாகவே விவசாயிகள்மீது அக்கறை கொண்டிருந்தால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி இதை சட்டமாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு முன்பாக, விவசாய சங்கப் பிரதிநிதிகளைக்கொண்டு குழு அமைத்து ஆலோசனை கேட்க வேண்டும்” என்றார் தீர்க்கமாக.

 இளங்கீரன் - ராஜ்குமார் - துரைக்கண்ணு
இளங்கீரன் - ராஜ்குமார் - துரைக்கண்ணு

தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவரான கே.வி.ராஜ்குமார் கூறுகையில், ‘‘அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து, சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும் அல்லது சட்டமன்றத்தில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். இரண்டையுமே செய்யவில்லை. காவிரி டெல்டாவுக்கான நீரை கர்நாடக அரசு எப்போது தடுத்து நிறுத்தியதோ அந்தக் காலத்திலிருந்தே நாங்கள் டெல்டாவை வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது வாக்குவங்கியைக் குறிவைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர். அதனாலேயே எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கேட்டோம்.

‘‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதையே நீங்கள் விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள முதல்வரின் அந்தக் கடிதத்தில், `மீத்தேன் திட்டத்தின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்த ஆய்வுக்குழு 2014-ம் ஆண்டில் பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. அதில், மீத்தேன் திட்டத்தால் டெல்டாவில் 4,266 வேளாண்மை நிலம் ஆக்கிரமிக்கப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் கிலோலிட்டர் நீரை 25 ஆண்டுக்காலம் உறிஞ்சும் என்பதால், அந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. ஜெயலலிதா இப்படியான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு, மத்திய அரசு மாநில அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றார். தற்போது தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கும் முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அங்கு ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை விவசாயி என அடையாளப்படுத்திக்கொள்ளும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உடனே சட்டமாக்கினால் மட்டுமே விவசாயிகளும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் இந்த அரசை நம்புவார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு