Published:Updated:

காவிரி-வைகை-குண்டாறு திட்டம்... மாற்றுவழியில் ரூ.4,000 கோடி மிச்சம்!

காவிரி ஆறு
பிரீமியம் ஸ்டோரி
காவிரி ஆறு

- நிறைவேறுமா மக்களின் எதிர்பார்ப்பு!

காவிரி-வைகை-குண்டாறு திட்டம்... மாற்றுவழியில் ரூ.4,000 கோடி மிச்சம்!

- நிறைவேறுமா மக்களின் எதிர்பார்ப்பு!

Published:Updated:
காவிரி ஆறு
பிரீமியம் ஸ்டோரி
காவிரி ஆறு

நீங்கள் ஒரு திட்டம் போடுகிறீர்கள். அதற்கு 8,000 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிகிறது. அதே திட்டத்தை எந்தவித சேதாரமும் இல்லாமல் அதேசமயம், பெரிய சிக்கல்கள் ஏதுமின்றி 4,000 கோடி ரூபாயிலேயே முடித்துவிடலாம் என்றால் என்ன செய்வீர்கள்?

4,000 கோடி ரூபாய் மிச்சமாகிறது என்றால் கசக்கவா செய்யும்.

இதுவே அரசாங்கத் திட்டமென்றால்?
கசக்கும்தான். பின்னே, அந்த 8,000 கோடியில் எப்படி எப்படியெல்லாம் கமிஷன் அடிக்கலாம் என்று பார்த்துப் பார்த்து திட்டமிட்ட பிறகு, நாலாயிரம் கோடியை மிச்சப்படுத்தலாம் என்று சொன்னால்... மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் அத்தனை சுலபமாக அது ஏறிவிடுமா என்ன?

மேலே சொல்லிக் கொண்டிருப்பது கதையல்ல நிஜம்.

திட்ட தொடக்க விழா
திட்ட தொடக்க விழா

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தடபுடலாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், திறந்தவெளிக் கால்வாய் என்கிற வகையிலேயே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனக் கால்வாய், சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் கிருஷ்ணா கால்வாய் போன்ற திட்டங்கள் எல்லாமே இப்படி திறந்தவெளிக் கால்வாய் என்கிற வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு சிக்கல்களை அவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, தண்ணீர் திருட்டு என்பது பெரும்பிரச்னையாகவே இருக்கிறது.

இத்தகைய சூழலில், “திறந்தவெளிக் கால்வாய் என்பது நிறைய குறைபாடுகளைக் கொண்டது. எனவே, கான்கிரீட் குழாய்கள் மூலமாகத் தண்ணீரைக் கொண்டு செல்வதுதான் பல்வேறு சிக்கல்களுக்கும் தீர்வு தருவதோடு, பணத்துக்கும் பங்கமில்லாமல் இருக்கும்” என்கிறார் தமிழகப் பொதுப்பணித்துறையின் முன்னாள் சிறப்பு தலைமைப் பொறியாளரான முனைவர் அ.வீரப்பன். குறிப்பாக 4,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்பதுதான் இவர் முன்வைக்கும் கான்கிரீட் குழாய் திட்டத்தின் சிறப்பு! தேர்தல் நேரத்தில் இப்போதைய அரசின் காதுகளில் இதெல்லாம் விழவே இல்லை. ஒருவேளை, அடுத்து அமையப்போகும் அரசாவது கையில் எடுக்கட்டுமே என்று காத்திருக்கிறார்கள், வீரப்பனும் அவர் சார்ந்திருக்கும் தமிழக மூத்த பொறியாளர் சங்கத்தின் உறுப்பினர்களும்!

வீரப்பன்
வீரப்பன்

இணைப்புக் கால்வாய் எதற்காக?

தாங்கள் முன்வைக்கும் திட்டம் பற்றி விரிவாகவே பேசினார் வீரப்பன்.

“தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாநிலம். காவிரி, தாமிரபரணி இந்த இரண்டு ஆறுகளிலும் இரண்டாண்டு அல்லது நான்காண்டுகளுக்கொருமுறை பெருமழை பெய்து மிகையான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இது, ஏறக்குறைய 260 டி.எம்.சி அளவுக்கு கடலில் அப்படியே கலக்கிறது. காவிரியில் மட்டுமே 100 டி.எம்.சி-க்கு அதிகமான நீர் கடலில் கலக்கிறது என்பதுதான் புள்ளிவிவரங்கள் சொல்லும் தகவல். இத்தகைய வெள்ளநீரை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற வறட்சிப் பகுதிகளுக்குத் திருப்புவதற்காகத் தீட்டப்பட்டதுதான் காவிரி-வைகை-குண்டாறு திட்டம். சுமார் 25,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பற்றாக்குறையை நீக்குவதோடு, ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்தையும் நிலைப் படுத்தும் என்பதுதான் திட்டத்தின் நோக்கம்.

இதன்படி 260 கி.மீ நீளத்துக்கு இணைப்புக் கால்வாய் வெட்டி இணைக்கும்வகையில் திட்டமிடப் பட்டுள்ளது. இந்தத்திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப் படவிருக்கிறது. முதற்கட்டமாகக் காவிரியின் கட்டளை நீரொழுங்கி யிலிருந்து புதுக்கோட்டைக்குத் தெற்கே உள்ள தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ தொலைவுக்கு சுமார் 7,000 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இதன்மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒரு தடவை 8.59 டி.எம்.சி அளவுக்கான வெள்ளநீர் கொண்டு செல்லப்படும்.

அரசின் காவிரி-குண்டாறு திட்டம்
அரசின் காவிரி-குண்டாறு திட்டம்

அரசுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் எவை?

ஆனால், இந்தத் திட்ட அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. நீண்ட தொலைவுக்குத் திறந்த கால்வாயின் வழியாகச் செல்லும் நீர் கடைசியிலுள்ள பகுதிகளுக்கு நீர் ஆவியாதல் மற்றும் செல்லும் வழியில் முறையற்ற வகையில் திருடப்படுதல் போன்ற காரணங்களால் முழுமையாகப் போய்ச்சேராது. அதேபோல, 16 நாள்களில் ஏரிகள், கண்மாய்கள், ஊருணிகளை நிரப்பி நிலத்தடி நீரைச் செறிவூட்ட முடியும் என்று சொல்லப்பட்டிருப்பதும் இயலாத காரியமே. இதற்கு 60 முதல் 100 நாள்கள் வரை தேவைப்படும். மேலும் கால்வாயை உருவாக்க சில இடங்களில் 30 மீட்டர் முதல் 37.95 மீட்டர் வரை ஆழமாகத் தோண்ட வேண்டியிருக்கிறது. சில பகுதிகளில் 10 மீட்டர் உயரம் வரை மண்ணைக் கொட்டி நிரப்பிக் கால்வாய்க் கரையை அமைக்க வேண்டியுள்ளது. இரண்டு இடங்களில் 10 கி.மீ நீளமுள்ள சுரங்கங்களை வெட்ட வேண்டியிருக்கிறது. சுமார் 4,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. இடையில் குறுக்கிடும் சிற்றாறுகள், பாலங்கள், மாநிலச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகள், சுரங்கங்கள் என்று பலவற்றுக்கும் புதிய கட்டுமானங்கள் தேவைப்படும்.

மாற்றுத்திட்டம்!

8.59 டி.எம்.சி வெள்ளநீருக்குப் பதிலாக 5 டி.எம்.சி வெள்ளநீரை மட்டுமே கொண்டு செல்லும் வகையில்தான் மாற்றுத்திட்டத்தை முன்வைக்கிறோம். இதை, இரண்டு வழித்தடங்கள் மூலமாகக் கொண்டு செல்லலாம். அதாவது, காவிரியின் கட்டளை (மாயனூர்) என்ற இடத்திலிருந்து மணப்பாறை, விராலிமலை வழியாக ஒரு தடமும், மண்டியூர், கீரனூர் வழியாக மற்றொரு தடமும் வெள்ளாறு வரை நீரைக் கொண்டுசெல்லும். இதை உறுதியான பெரிய கான்கிரீட் குழாய்கள் மூலமாகவே செயல்படுத்த வேண்டும். தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் அத்திக்கடவு-அவினாசி திட்டமும் இந்த வகையில்தான் செயல்படுத்தப்படுகிறது.

மாற்றுத் திட்ட வரைபடம்
மாற்றுத் திட்ட வரைபடம்

இந்தத்திட்டத்தின் மூலமாக நிறைய பலன்கள் இருக்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட பெருஞ்சாலைகளின் ஓரமாகவே இந்தக் குழாய்களைப் பதித்து எடுத்துச் செல்லலாம் (சென்னைக் குடிநீருக்கு எடுத்துச் செல்லும் வீராணம் குழாய்கள்போல). இதிலும் தேவைப்படுமிடங்களில் இறைவை நிலையங்கள் அமைத்து தண்ணீரை ஏற்றவும் செய்யலாம். வழியிலுள்ள ஏரிகள், கண்மாய்கள் மற்றும் ஊருணிகளை நிரப்பவும் முடியும். தனியார் நிலங்கள், விவசாய நிலங்கள் எனப் பெரிதாகக் கையகப்படுத்தத் தேவையிருக்காது. பாலங்கள், சுரங்கங்கள் என்று கட்டுமானங்களுக்கும் பெரிதாக வேலையிருக்காது. மிக ஆழமாகத் தோண்டவோ, உயரமாகக் கரைகளை அமைக்கவோ தேவையில்லை. திட்டமிட்டபடி நீர் போய்ச் சேர வேண்டிய கடைசி இடம் வரை சேதாரமின்றி நீரைக் கொண்டு சென்றுவிட முடியும். ஆவியாதல், தண்ணீர் திருட்டு எந்தப் பிரச்னையும் இருக்காது. குழாய்கள் பதித்து இரண்டு வழித்தடங்கள் மூலமாக வெள்ளாறு வரை தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு 3,175 கோடி ரூபாய்தான் செலவு பிடிக்கும். அந்த வகையில் தற்போதைய திட்டச் செலவினத்திலிருந்து சுமார் 4,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும். இதை 2 அல்லது 3 ஆண்டுகளிலேயே நிறைவேற்றிடவும் முடியும்” என்று சொன்ன வீரப்பன்,

காவிரி ஆறு
காவிரி ஆறு

“பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு இதுதொடர்பாக முழுமையான விவர அறிக்கையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் கோரிக்கை மனுவுடன் அனுப்பி வைத்துள்ளோம். அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், 4,000 கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை மிச்சப்படுத்தும் இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்தால், மக்கள் நலன் கொண்ட அரசு என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்” என்று அக்கறையுடன் சொன்னார்.

மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அரசு அமைய வேண்டுமே!

குறையும் திட்டச் செலவுகள்

நிலம் கையகப்படுத்துதல்: ரூ.1,486.90 கோடி

குறுக்குக் கட்டுமானங்கள்: ரூ. 983.34 கோடி

12 சுரங்கங்கள்: ரூ.1,585.50 கோடி

மொத்தமாக மிச்சமாகும் தொகை: ரூ.4,055.00 கோடி


மூன்று கட்ட திட்டம்

முதல் கட்டம்: காவிரி (கட்டளை மாயனூர்) முதல் தெற்கு வெள்ளாறு வரை - 118.45 கி.மீ

இரண்டாம் கட்டம்:

தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை - 107.24 கி.மீ

மூன்றாம் கட்டம்: வைகை முதல் குண்டாறு வரை - 34.29 கி.மீ

மொத்தம்: 259.98 கி.மீ