ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

மரபணு மாற்றுக் கடுகு... மீண்டும் கிளம்பும் பூதம்; பெருகும் எதிர்ப்பு!

கடுகு
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு ( மாதிரி படம் )

சூழல்

அண்மையில் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 (Dhara Mustard Hybrid - DMH-11) என்ற கடுகு பயிரை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், இது சம்பந்தமான வழக்கு கடந்த நவம்பர் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘மறு உத்தரவு வரும் வரை, மரபணு மாற்றப்பட்ட கடுகை எவ்வித விதைப்பும் செய்யக் கூடாது. அடுத்த விசாரணை நவம்பர் 10-ம் தேதி நடைபெறும்’ என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரிடுவதற்கான களப் பரிசோதனைக்கு சில ஆண்டுகளுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது சூழலியல் மற்றும் விவசாய செயற்பாட்டாளர்கள் மத்தியில் இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மரபணு மாற்றுக் கடுகு பயிரிட்டால் உயிர்ச்சூழல் பாதிக்கப்படும் எனவும், இதை உணவுப் பொருளாகப் பயன்படுத்தினால் மக்களின் உடல்நலனில் பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரித்து வருகிறார்கள்.

கடுகு
கடுகு
மாதிரி படம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மண்புழு விஞ்ஞானியும் மாநிலத் திட்டக்குழு உறுப்பினருமான முனைவர் சுல்தான் இஸ்மாயில், ‘‘கடுகு மட்டுமல்ல... மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்த ஒரு பயிரையுமே இங்கு அனுமதிக்கக் கூடாது. இதனால் பல விதங்களிலும் உயிர்ச்சூழலுக்கு ஆபத்துகள் நேரும். மரபணு மாற்று விதை வேறு; வீரிய ஒட்டு ரக (High Breed) விதை வேறு என்கிற வித்தியாசத்தை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வீரிய ஒட்டு ரகம் என்பது ஒரே தாவர இனத்தின் வேறு வகையோடு மகரந்தச் சேர்க்கை புரிவதன் மூலம் உருவாக்கப்படுவது. மரபணு என்பது அப்படியல்ல. தொடர்பில் லாத வேறொரு தாவரம் அல்லது உயிரியை உட்செலுத்தி மரபணு தொழில்நுட்பத்தின் மூலம் புதிய வகையை உருவாக்குவதாகும்.

மண்ணிலிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் கடுகு

நம் நாட்டில் 50 - 60 சதவிகித தேன் உற்பத்தி கடுகுப் பூக்கள் வழியே நிகழ்கிறது. ஆப்பிள் மரங்களுக்குக் கீழ் கடுகு வளர்த்தால் தேனீக்களின் வருகையால் ஆப்பிள் விளைச் சல் அதிகரிக்கும் என்று ஜெயாதாக்கரே என்கிற மாணவி கண்டறிந்தார். ஆனால், இந்தக் கடுகு பயிரிடப்பட்டால், இயல்பான சூழல் கெட்டுப்போகும். களைகள் அதிகமாக வளரும். அதைக் கட்டுப்படுத்த, அதிக நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லியை பயன்படுத்த வேண்டிய நெருக்கடியான சூழலுக்கு நம் விவசாயிகள் தள்ளப்படு வார்கள். சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும்” எனத் தீர்க்கமாகத் தெரிவித்தார்.

சுல்தான் இஸ்மாயில், அறச்சலூர் செல்வம்
சுல்தான் இஸ்மாயில், அறச்சலூர் செல்வம்

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் ரா.செல்வம், “ஐ.நா சபையால் வகுக்கப் பட்டுள்ள விதிமுறைகளின் படி... இயற்கையாக உருவான எவற்றுக்கும் தனியார் நிறுவனங்கள் காப்புரிமை பெற முடியாது. அந்தந்த நாட்டின் அரசுகளே அதன் பாதுகாவலர்கள் என்று கூறுகிறது. விதைகள் வியாபாரமாக மாறிய சூழலில் தனியார் நிறுவனங்களால் விதைகளைச் சொந்தம் கொண்டாட முடிய வில்லை. வீரிய ரக விதைகள் அறிமுகப் படுத்தப்பட்ட பிறகும் அங்கும் நிறைய போட்டியாளர்கள் வருகிறார்கள். இந்தச் சூழலில்தான் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலம் மரபணு மாற்றம் என்ற பெயரில் புதிதாக விதைகளை உருவாக்கினால் அதற்கெனத் தனியே காப்புரிமை பெற முடியும் எனப் பெரு நிறுவனங்கள் நினைக் கின்றன. அதன் விளைவாக உருவாக்கப்படு வதுதான் மரபணு மாற்று விதைகள். பூச்சி, நோய்த்தாக்குதல்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் குறுக்கு வழிகளில் பயன்படுத்திக்கொண்டு, மரபணு மாற்று விதைகளுக்கான சந்தையை உருவாக்க முயற்சிகள் செய்கிறார்கள்.

அமெரிக்காவில் பருத்திச் செடிகளில் காய்ப்புழு மிகப்பெரும் பிரச்னையாக இருந்தது. அந்தச் சூழலில்தான் பி.டி பருத்தி விதைகளை உருவாக்கி இது காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் என்று கூறி அனுமதி கேட்டது, மான்சான்டோ நிறுவனம். அப்போதே அமெரிக்க அறிவியலாளர்கள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் எதிர்மறையான விளைவு களையே சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை செய்தார்கள். களப் பரிசோதனைக்கே அனுமதி வழங்கப்படாத நிலையில்தான் மன்சான்டோ நிறுவனத்தின் துணைத் தலைவர், அமெரிக்க வேளாண்துறையில் தலைமைப் பொறுப்பில் அமர்கிறார். அவரே தனது நிறுவனத்தின் மரபணு மாற்றுப் பருத்தி விதைகளைப் பயிரிட அனுமதி அளிக்கிறார். இப்படித்தான் பி.டிபருத்தி விதைகள் பரவின.

கடுகு
கடுகு
மாதிரி படம்

இந்தியாவில் உள்ள நவபாரத் நிறுவனம் மூலம் இங்கு பி.டி (மரபணு மாற்று) பருத்தி விதைகள் உள்ளே புகுந்தன. மத்திய அரசின் அனுமதி பெறாமலே விளைவிக்கப்பட்டது. இங்கு கடும் எதிர்ப்புகள் நிலவிய போதிலும்கூட, இந்தியாவில் பி.டி பருத்தி அனுமதிக்கப்பட்டது. பருத்தியைத் தொடர்ந்து பி.டி கத்திரிக்காய் விதைகளைக் கொண்டு வந்தனர். இந்தியாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் பி.டி.கத்திரிக்காய்க்கு அனுமதி கோரப்பட்டது.

ஆனால், அப்போது மத்திய வேளாண்துறை அமைச்சராகப் பதவி வகித்த ஜெயராம் ரமேஷ் பி.டி கத்திரியை அனுமதிக்க மறுப்பு தெரிவித்தார். ‘இது குறித்து முழுமையான ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்படவில்லை. போதுமான ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று நிரூபிக்கிற வரையில் இதை அனுமதிக்க முடியாது’ எனத் தெரிவித்தார். அதன் பிறகு, பி.டி கத்திரிக்காயைக் கொண்டு வர அமெரிக்காவில் செய்த ஆய்வுகளைக் காட்டினார்கள். இதற்கென என்னென்ன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றொரு பட்டியல் இருக்கிறது. ஆனால், பி.டி விதை உற்பத்தியில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள், எந்தெந்த ஆய்வுகள் தங்களுக்குச் சாதகமாக இருக்கிறதோ அதை மட்டும் மேற்கொண்டு அம்முடிவுகளைக் காட்டுகிறார்கள். அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் மரபணு மாற்று விதை உருவாக்கத்தில் இருப்பவர்களே அதற்கு அனுமதி அளிக்கும் கமிட்டியிலும் அங்கம் வகிக்கிறார்கள். இந்தச் சார்பு நிலை மூலம் எளிதாக அதற்கு அனுமதி கிடைத்துவிடுகிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்திரிக்காய் விதைகள், பூச்சியை விரட்டும் தன்மை கொண்டது என்றார்கள். ஆனால், அது உண்மையில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. மரபணு மாற்றுக் கடுகு 30 சதவிகிதம் வரையிலும் விளைச்சலைக் கூட்டும் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், இதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இதை அனுமதிப்பது என்பது, விதை நிறுவனங்கள் கோடி கோடியாக லாபம் சம்பாதிக்க வேண்டுமானால் கை கொடுக்கும். இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் விளையாது. மரபணு விதை களால் உயிர்ச்சூழல் கடுமையாகப் பாதிக்கப் படும் என்பதால்தான் போராடி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும்!

வணிக ரீதியான மரபணு மாற்று கடுகை களப்பரிசோதனைக்கு அனுமதியளித்ததற்கு எதிராக நாடு முழுவதும் சூழல் ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள், பாதுகாப்பான உணவுக்காக போராடுபவர்கள் என பலரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கான போராட்டம் கடந்த நவம்பர் 5-ம் தேதி சென்னை, பெசன்ட் நகரில் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகம் செய்தால், நம்முடைய மரபு விதைகள் காணாமல் போய்விடும். மரபணு விதைகளால் மகசூல் அதிகரிக்காது. இதனால் விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெருநிறுவனங்களுக்குத்தான் லாபம் கிடைக்கும். எனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தமிழக அரசு அனுமதிக்க கூடாது” என்றார்.

வெற்றிமாறன், அனந்து மற்றும் பார்த்தசாரதி
வெற்றிமாறன், அனந்து மற்றும் பார்த்தசாரதி

பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து மற்றும் பார்த்தசாரதி பேசியபோது, “சில ஆண்டுகளுக்கு முன் பேயர் என்ற நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட கடுகை அறிமுகப்படுத்த இருந்தது. மரபணு மாற்றப்பட்ட கடுகின் விளைச்சல் எவ்வளவு, இவ்வகை கடுகுகள் மூலம் குறுக்கு மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு மற்ற கடுகுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா, மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு உயிரியல் பாதுகாப்பு (Bio Safety) உள்ளதா, இதைச் சாப்பிடுபவர்களுக்கு உடல் நலம் பாதிக்குமா? என்று பல கேள்விகளை ஒன்றிய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு எழுப்பியது. இந்த கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காதாதால் அப்போது அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் அதே மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு களப்பரிசோதனைக்கு அனுமதியளித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மரபணு கடுகுக்கு தடை விதிக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர்.