Published:Updated:

தரவுகள்

ஆசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர்

தலையங்கம்

தரவுகள்

தலையங்கம்

Published:Updated:
ஆசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘வெளிநாடுகளில் இந்திய அரிசி மற்றும் கோதுமைக்கான தேவை அதிகமிருப்பதால், அவற்றுக்கான சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்துங்கள்’’ என்று மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார் மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘‘நெல், கோதுமை உற்பத்தி அதிகமாக இருக்கிறது. அதனால், எண்ணெய்வித்து மற்றும் பருப்பு வகைகளை அதிகமாகப் பயிரிடுவதற்கு ஊக்குவியுங்கள்’’ என்று இதே மத்திய அரசுதான் பரிந்துரை வழங்கியது. இதனால், நெல் உற்பத்தி அளவானது, தேசிய அளவில் சுமார் 15 சதவிகித அளவுக்குக் குறைந்துபோனது. சரி, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு உற்பத்தி அதிகரித்ததா என்றால், அதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இன்றைய தேதி வரையில் இவையிரண்டுக்கும் வெளிநாடுகளிடம்தான் கையேந்தி நிற்கிறோம். இவற்றின் உற்பத்திக்காக இந்திய விவசாயிகளை ஊக்குவிக்கும் உருப்படியான திட்டங்களை முன்னெடுத்திருந்தால், இறக்குமதிக்கான தேவை குறைந்திருப்பதோடு, அந்நிய செலாவணியும் கட்டுக்குள் இருந்திருக்கும்.

திட்டங்கள் தீட்டுவதற்கு இங்கே பஞ்சமே இல்லை. ஆனால், அவையெல்லாம் உருப்படியான திட்டங்களாக இருப்பதில்லை. அத்துடன் உண்மையான தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையாகவும் அவை இருப்பதில்லை. ஆம், இன்றளவிலும்கூட இந்திய அளவில் சரிவர தரவுகள் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஏதாவது ஓர் ஊரில் அமர்ந்துகொண்டு, ‘‘ஐந்நூறு கொடு, ஆயிரம் கொடு’’ என்று கட்டாயமாக வாங்கிக்கொண்டு, ‘‘ஆண்டிபட்டியில் குங்குமப்பூ விளைகிறது’’ என்று பழுப்புநிறத் தாளில் அடங்கல் சான்றிதழ் கொடுக்கும் அதிகாரிகள்தான் பெரும்பாலும் பணியிலிருக்கிறார்கள். இவர்கள் தரும் தரவுகளை வைத்துக்கொண்டுதான், 75 ஆண்டுக்காலமாக இங்கே கணக்கெடுப்பு நடக்கிறது.

எத்தனை ஏக்கரில், என்னென்ன பயிர்கள், உணவுத் தேவை எவ்வளவு... இப்படி எதற்கும் உருப்படியான தரவுகள் இல்லை. ஆனால், ‘டிஜிட்டல் இந்தியா’ கொடி மட்டும் உயர உயர பறந்துகொண்டே இருக்கிறது!

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்