Published:Updated:

”இனி ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான்!” - அரசு இன்று சொல்வதை அன்றே சொன்னது பசுமை விகடன்

பசுமை விகடன் டீம்

கோயம்புத்தூரில் 2007-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற பசுமை விகடனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில், கலந்துகொண்டு சிறப்புரையாற்ற முதல் முறையாக தமிழக மண்ணில் சுபாஷ் பாலேக்கர் அடியெடுத்து வைத்தார்.

ஜீரோ பட்ஜெட்
ஜீரோ பட்ஜெட்

ஜூலை 5-ம் தேதி, 2019 - 20-ம் ஆண்டுக்கான நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். தேர்தலில் வென்ற பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் இது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் “பிற தொழிலாளர்களைப் போலவே விவசாயிகளுக்கும் தொழில் மற்றும் வாழ்க்கையை நடத்துவது எளிமையாக இருக்க வேண்டும். இதற்காக ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற முறையைப் பின்பற்ற ஊக்குவிக்க இருக்கிறோம். ஜீரோ பட்ஜெட் விவசாயம் மூலம் அடிப்படை விஷயங்களுக்குத் திரும்பப் போகிறோம். இது புதிய விஷயம் அல்ல. நாம் இந்த முறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சில மாநிலங்களில் இம்முறை முன்னரே பின்பற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள விவசாயிகள் இதற்கான பயற்சிக்குத் தயாராக இருக்கிறார்கள். இதுபோன்ற முயற்சிகள் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த உதவும்" என்றார்

பட்ஜெட்
பட்ஜெட்

அது என்ன ஜீரோ பட்ஜெட்!

"விவசாயத்திற்கு இடுபொருளின் விலை (உரங்கள், பூச்சி கொல்லிகள்) ஏறிக்கொண்டே போகிறது. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி வெளியிலிருந்து எந்த இடுபொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு நாட்டுப் பசுவை வைத்து கொண்டு முப்பது ஏக்கர் விவசாயம் செய்ய முடியும், எந்த விதமான இடுபொருளும் வாங்காமல். கோமூத்திரம், சாணி, போன்றவையே போதும்" இதுதான் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் அடிப்படை.

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் பரவிய வரலாறு!

‘ரசாயன உரங்கள் வேண்டாம்… பூச்சிக்கொல்லிகள் வேண்டாம்… நுண்ணுயிர் உரங்கள் வேண்டாம்… பண்ணைக்குள்ளிருக்கும் பொருள்களும் கழிவுகளுமே போதும். மண்ணை வளமாக்கி நல்ல மகசூல் எடுக்க முடியும்’ என்ற எளிய சித்தாந்தம், தமிழக விவசாயத்தில் மாபெரும் வேளாண் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம், உரக்கடைகளில் கொண்டுபோய்ப் படியளந்துகொண்டிருந்த தமிழக விவசாயிகளுக்கு, ‘உங்கள் மாடே ஓர் உரத் தொழிற்சாலைதான்’ என்ற குரல் ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டுப் பசு மாட்டின் சாணத்தையும் சிறுநீரையும் மட்டுமே பயன்படுத்தியதில் பயிர்களின் பல்வேறு சிக்கல்கள் தீர்ந்துபோனபோது ஆனந்தத்தின் உச்சிக்கே போனார்கள் விவசாயிகள். அதுவரை விவசாயிகளுக்குப் பெரும் சுமையாக இருந்த முட்டுவளிச் செலவு என்ற சாகுபடிச் செலவை உடைத்தெறிந்தது புதிய சித்தாந்தம். ஆம், இத்தனை அற்புதங்களையும் நிகழ்த்திய அந்தச் சிந்தாந்தம்தான், ‘பைசா செலவில்லாத சாகுபடி’ என்றழைக்கப்படும் ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம்.

மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த ‘வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் கண்டறிந்ததுதான் ஜீரோ பட்ஜெட் சாகுபடி முறை. அடிப்படையில் வேளாண் பட்டதாரியான சுபாஷ் பாலேக்கர், தனது சித்தாந்தத்தை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பரப்பிக்கொண்டிருந்தார். ‘சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் முறையைப் பயன்படுத்திவரும் கர்நாடக விவசாயிகள் வறண்ட நிலங்களை வளமாக்கி வருகிறார்கள், குறைவான நீரைப் பயன்படுத்தி நெல் விளைவிக்கிறார்கள்’ என்ற செய்தியைச் சொன்ன எழுத்தாளர் தூரன் நம்பி, ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவை கர்நாடகாவுக்கு வந்து பார்வையிட அழைப்புவிடுத்தார்.

2006-ம் ஆண்டு பாலேக்கரின் சித்தாந்தங்களை அறிந்து வர விகடன் குழுமத்தின் அப்போதைய தலைமைப் பொறுப்பாசிரியரும், தற்போது பசுமை விகடன் ஆசிரியருமான ச.அறிவழகன் மற்றும் புகைப்படக்காரர் பொன்.காசிராஜன் ஆகியோர் புறப்பட்டனர். கர்நாடக மாநிலம், மைசூருக்கு அருகில் உள்ள சுத்தூர் மடத்தில், சுபாஷ் பாலேக்கர் நடத்திய ஜீரோ பட்ஜெட் பயிற்சி பற்றியும் சுபாஷ் பாலேக்கர் குறித்தும் ‘பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி!’ என்ற தலைப்பில் 1.11.2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் விரிவான கட்டுரை இடம்பெற்றது. இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, ஏராளமான வாசகர்கள் விகடன் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பி குவித்தனர். பசுமை விகடன் இதழ் தொடங்குவதற்கான முன்னோட்டத்தின் முதல் விதையாக இந்தக் கட்டுரை அமைந்தது.

ஜீரோ பட்ஜெட்
ஜீரோ பட்ஜெட்

பசுமை விகடன் மூலம் பரவிய ஜீரோ பட்ஜெட்!

கோயம்புத்தூரில் 2007-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற பசுமை விகடனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில், கலந்துகொண்டு சிறப்புரையாற்ற முதல் முறையாக சுபாஷ் பாலேக்கர் தமிழக மண்ணில் அடியெடுத்து வைத்தார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘ஆனந்த விகடன் குழும’த்தின் நிர்வாக இயக்குநர், ‘இந்தச் சித்தாந்தம் தமிழக விவசாயிகளுக்குப் பயன்பட வேண்டும். இதன் மூலமாக, தமிழக விவசாயத்தில் மாபெரும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உடனடியாக இதை விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, ‘அதிசய சாகுபடி’ என்ற பெயரில், தூரன் நம்பி எழுதிய ஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றிய கட்டுரைகள் பசுமை விகடனில் வெளியாயின. குறைவான நீரில் நெல் சாகுபடி செய்யும் பண்ணூர் கிருஷ்ணப்பா, வறண்ட பகுதியிலும் பப்பாளி சாகுபடியில் அசத்தும் குல்பெர்கா கங்காதர், திராட்சை விவசாயி கும்பார், மலைப்பயிர் சாகுபடியில் வெளுத்து வாங்கும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தி என ஒவ்வொரு இதழிலும் அனுபவ விவசாயிகளின் வெற்றிக்கதைகள் அரங்கேற்றப்பட்டன.

ஜீரோ பட்ஜெட்
ஜீரோ பட்ஜெட்

அதைத் தொடர்ந்து, தமிழக விவசாயிகளிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘‘தமிழ்நாட்டில் ஜீரோபட்ஜெட் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும்…’’ என்று வாசகர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சுபாஷ் பாலேக்கரின் முதல் பயிற்சி வகுப்பு திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொள்ள விவசாயிகள் காட்டிய ஆர்வம் மற்றும் பயிற்சியின்போது விவசாயிகள் கவனித்துக் குறிப்பெடுத்துக்கொண்ட விதம் ஆகியவையே ‘இனி, ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயத்தைப் புரட்டிப்போடும்’ என்பதைத் தெளிவுபடுத்தின.

90 நாள்களில் நிகழ்ந்த மாற்றம்!

திண்டுக்கல் பயிற்சி வகுப்புக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பல விவசாயிகள், ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். முதல் பயிற்சி முடிந்த மூன்றே மாதத்தில், ஈரோட்டில் 2007-ம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நான்கு நாள்களுக்கு அடுத்த பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தது பசுமை விகடன். இந்த முறை சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்டனர். முதல் பயிற்சிக்கும் இரண்டாவது பயிற்சிக்குமான 90 நாள்கள் இடைவெளியில் ஜீரோ பட்ஜெட் முறையைக் கடைப்பிடித்த விவசாயிகள் பலர், தங்கள் பயிர்களில் நிறைய மாற்றங்களைக் கண்டு, ஆச்சர்யப்பட்டுப்போயிருந்தனர். திண்டிவனம் அருகேயுள்ள தொழுப்பேடு கிராமத்தைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் உள்ளிட்ட பலர் ஈரோடு கூட்டத்தில் பாலேக்கரிடம் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஜீரோ பட்ஜெட் பயிற்சி
ஜீரோ பட்ஜெட் பயிற்சி

இந்த இரண்டு பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு, தமிழகத்தில் அதிவேகமாகப் பரவத் தொடங்கியது, ஜீரோ பட்ஜெட். தமிழக விவசாய வரலாற்றை ஜீரோ பட்ஜெட்டுக்கு முன், ஜீரோ பட்ஜெட்டுக்குப் பின் எனக் குறிப்பிடும் அளவுக்குப் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறின. நாட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதுவரை இடுபொருள்களுக்காகச் செலவழித்த பெரும் தொகை மிச்சமானது. ஜீவாமிர்தம் கொடுக்கப்பட்ட பயிர்களின் வளர்ச்சியும் காய்கள், பழங்களின் சுவை மற்றும் பளபளப்பும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் சுபாஷ் பாலேக்கரை அழைத்து வந்து, தமிழகத்தில் ஜீரோபட்ஜெட் பயிற்சியை நடத்தின. கடந்த முறை தமிழகத்துக்கு வந்த 'ஜீரோ பட்ஜெட் வித்தகர்' சுபாஷ் பாலேக்கரை அவரைப் பேட்டி கண்டு வெளியிட்டிருக்கிறது பசுமை விகடன்.

ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம் தமிழகத்தில் அறிமுகமான இந்தப் பன்னிரெண்டு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கின்றன. ஆரம்பக்கட்டத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயத் தோட்டங்களைப் பார்க்க கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், பல மாநில விவசாயிகள் பார்வையிட்டு வியக்கும் அளவுக்கு மிகச்சிறந்த ஜீரோ பட்ஜெட் மாதிரிப் பண்ணைகள் தமிழகத்தில் உருவாகி வருகின்றன.

இத்தனை மாற்றத்துக்கும் காரணமான ஜீரோ பட்ஜெட் என்ற விதையை, அன்றே தமிழகத்தில் விதைத்ததை நினைத்துப் பெருமைகொள்கிறது பசுமை விகடன்.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தைப் பட்டிதொட்டியெல்லாம் பரப்பி வந்த ‘இயற்கை வேளாண்’ விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இயற்கை விவசாயக் கனவு வேகமாக நிறைவேற, ஜீரோபட்ஜெட் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பமும் அழுத்தமாக கைக்கொடுத்தது என்றால் அது மிகையல்ல. ஜீரோபட்ஜெட்டின் ஜீவாமிர்தம் இன்றைக்கு விவசாயிகளின் துயர் துடைக்கும் ‘பாற்கடல் அமுத’மாக இருக்கிறது. இப்போது அந்த முறையைத்தான் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இத்தனை மாற்றத்துக்கும் காரணமான ஜீரோ பட்ஜெட் என்ற விதையை அன்றே தமிழகத்தில் விதைத்ததை நினைத்துப் பெருமைகொள்கிறது பசுமை விகடன்.

பசுமை விகடன் விதைத்த விதை இன்று விருட்சமாகி நிற்கிறது.