Published:Updated:

அடையாள அட்டை முதல் இன்ஷூரன்ஸ் வரை... கால்நடைகளுக்கான திட்டங்கள்!

கடந்த ஐந்தாண்டுகளில் கால்நடைப் பராமரிப்புகளுக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்வடிவத்தை நோக்கி நகர்ந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரதமர் மோடிக்கு உத்தரப்பிரதேசம் கொஞ்சம் உகந்த மாநிலம். கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தையும்கூட உத்தரப்பிரதேசத்திலிருந்துதான் தொடங்கினார் மோடி. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி மதுராவில் நடந்து முடிந்த நிகழ்ச்சியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தேசிய கால்நடை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் மோடி.

கால்நடைகளுக்கு அதிகம் ஏற்படக்கூடிய நோய்களான கால்பாதங்கள், வாய்களில் ஏற்படும் கோமாரி நோய் மற்றும் அதிகரித்து வரும் கருச்சிதைவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது இத்திட்டம். இதன் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதுமுள்ள 50 கோடி கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்கள் 2025-க்குள் கட்டுப்படுத்தப்படும் என்றும் 2030-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசு 12,652 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. கால்நடைகளின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட நிதிதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதேபோல் கடந்த ஐந்தாண்டுகளில் கால்நடைப் பராமரிப்புகளுக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்வடிவத்தை நோக்கி நகர்ந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

Cattle
Cattle

ராஷ்ட்ரிய கோகுல் திட்டம்

மோடி ‘1.0’ ஆட்சிக்காலத்தில், அரியணை ஏறிய ஆறு மாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் ‘ராஷ்ட்ரிய கோகுல்’ திட்டம். அறிவியல் பூர்வமான முறையில் உள்நாட்டுக் கால்நடை இனங்களைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அறிவித்தது மத்திய அரசு. இந்தியாவின் பால் உற்பத்தி அதிகரித்தல் மற்றும் இயற்கை சேவைகளுக்காக உயர் மரபியற்பண்புடைய கால்நடைகளை உருவாக்குதல் போன்றவை இந்தத் திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள்கள் என அறிவிக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே திட்டத்தின் மூலம், சிறந்த உழவர்களுக்கு ‘கோபால் ரத்னா’ விருது, கால்நடை பாதுகாப்பில் ஈடுபடும் சங்கங்களுக்கு ‘காமதேனு’ விருது ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்து வருகின்றனர். ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்திற்காகக் கடந்த 2014-2015 நிதியாண்டிலிருந்து 2018-2019 நிதியாண்டு வரை 1,286.17 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்டதைவிட அதிகமாக 1,297.61 கோடி ரூபாய் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என்று கால்நடைப் பராமரிப்புத் துறையின் ஆண்டறிக்கை அறிவிக்கிறது.

Modi
Modi

பசு சஞ்சீவனி

இந்தியா முழுவதும் 95 மில்லியன் பசுக்கள் முறையாகக் கவனிக்கப்படவில்லை. கால்நடைகள் குறித்த முறையான தகவல்கள் இல்லை என்பதே இதற்கு காரணமாகப் பார்க்கப்பட்டது. தகவல்கள் முறையாக இருக்கும் பட்சத்தில், நோயால் பாதிக்கப்பட்ட பசுக்களை நல்ல உடல் நலத்துடன் இருக்கும் கால்நடைகளிடமிருந்து பிரித்து வைத்தால் நோய்கள் பரவுதை கட்டுப்படுத்த முடிவும் என்பதற்காகப் பசு சஞ்சீவனி என்ற திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு.

இந்தப் பசு சஞ்சீவனி திட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டு செயல்கள் கவனம் ஈர்த்தன. 1) கால்நடைகளுக்கான அடையாள அட்டை 2) கால் நடைகளுக்கான ஹெல்த் கார்டு.

அடையாள அட்டை

கால்நடைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் முறைமை என்பது கிட்டத்தட்ட ஆதார் கார்டு போன்றதொரு முறைதான். ஒவ்வொரு கால்நடைகளுக்கும் 12 இலக்க பிரத்யேக அடையாள எண்களானது (Animal Unique Identification Number (AUID) ) வழங்கப்படும். இந்த அடையாள எண்ணைப் பயன்படுத்தி கால்நடைகளின் உடல்நலன் குறித்த தகவல்கள் அனைத்தும் இணையத்தின் உதவியுடன் Information Network for Animal Productivity and Health (INAPH) எனும் தளத்தில் பதிவு செய்யப்படும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்துவிட முடியும் என்கிறது அரசு. இந்தத் திட்டத்திற்காக இதுவரை 148 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுவரை 20 மில்லியன் மாடுகளுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்கப்பட்டு அந்தக் கால்நடைகள் குறித்தான தகவல்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் கால்நடைகளை பரிசோதனை செய்து அந்தக் கால்நடைகளுக்கு எடுக்கப்பட்ட மருத்துவ நடவடிக்கைகள் குறித்தான தகவல்கள் அடங்கிய ஹெல்த் கார்டுகளையும் வழங்கி வருகிறது. இதுவரை 80 மில்லியன் கால்நடைகளுக்கான ஹெல்த் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

Modi
Modi

பசு பீம யோஜன திட்டம்

அடையாள அட்டை, ஹெல்த் கார்டு இவை ஒருபுறம் இருக்க, கால்நடைகளுக்கு இன்ஷூரன்ஸ் வழங்கும் திட்டமான பசு பீம யோஜனா திட்டத்தை 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது பி.ஜே.பி அரசு.

இந்தத் திட்டத்தின் மூலம், கால்நடைகளின் உரிமையாளர்களிடமிருந்து பசு மாடுகளுக்கான பிரீமியம் தொகை 100 ரூபாயும், ஆடு மற்றும் பன்றி போன்ற உயிரினங்களுக்கான பிரீமியம் தொகை 25 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன. இயற்கை சீற்றம், தீவிரவாதத் தாக்குதல் (முக்கியமாக, காஷ்மீர் போன்ற பகுதிவாழ் மக்களுக்காக) போன்றவற்றால் இறக்கும் கால்நடைகளுக்கான நஷ்ட ஈடு கிடைக்கும் என்பது இத்திட்டத்தின் பயன்.

ராஷ்ட்ரிய காமதேனு அயோக்

ராஷ்ட்ரிய காமதேனு அயோக் என்பது பசுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்ட ஆணையமாகும். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற 2019-2020-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது மத்திய அரசு. இதன் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் வல்லபபாய் காத்ரியா செயலாற்றி வருகிறார்.

Cows
Cows

கடந்த 9-ம் தேதி அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய காமதேனு அயோக்-கின் தலைவர் வல்லபபாய் காத்ரியா, “இந்திய இளைஞர்கள் பலரும் கால்நடை சார்ந்த தொழிலுக்குள் வரவேண்டும். அதேவேளையில் பால் பொருள் சார்ந்த தொழில்களில் மட்டுமல்லாமல், மருத்துவம் மற்றும் விவசாயத்துக்குப் பயன்படக்கூடிய பொருள்களான மாட்டின் கோமியம் சார்ந்த தொழில்களிலும் ஆர்வம் காட்ட வேண்டும். இதில் ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு, தொழில் தொடங்க தேவைப்படும் நிதியில் 60 சதவிகிதத்தை அரசு ஏற்கும்” என்றார்.

இவை போக சில லட்சங்களில் தொடங்கி பல நூறுகோடிகளில் செயல்வடிவம் பெறும் பல திட்டங்களை கால்நடைத் துறை கைவசம் வைத்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு