Published:Updated:

விண்ணை முட்டும் ரசாயன உரங்கள்... சத்தான உரங்களை நீங்களே தயாரிக்க, முத்தான யோசனைகள்!

ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரங்கள்

மாற்று வழி: செலவோ குறைவு... மகசூலோ அதிகம்!

விண்ணை முட்டும் ரசாயன உரங்கள்... சத்தான உரங்களை நீங்களே தயாரிக்க, முத்தான யோசனைகள்!

மாற்று வழி: செலவோ குறைவு... மகசூலோ அதிகம்!

Published:Updated:
ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரங்கள்

சாயன உரங்களின் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு 50-60 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை டி.ஏ.பி 1,700 ரூபாயாக உயர்ந்துள்ளது. 975 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் உரம் தற்போது 1,350 ரூபாயாக உயர்ந்துள்ளது. வரலாறு காணாத விலை உயர்வு இது. இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற செயல் எனவும் மத்திய அரசு, பெரு நிறுவனங்களுக்குத் துணை போவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

‘விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாக்கப்படும்’ என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2016-ம் ஆண்டுச் சூளுரைத்தார். ஆனால் அதற்கு நேர் எதிராக, விவசாய விளைபொருள்களின் உற்பத்திச் செலவை இரட்டிப்பாக்கும் விதமாக, ரசாயன உரங்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் உதடுகள், விவசாயிகளுக்காகப் பேசினாலும் அவரது உள்ளம் என்னவோ பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 2021-22-ம் ஆண்டுக்கான உர மானியமாக 60,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இது பெருநிறுவனங்களுக்குத்தான் பயன் அளிக்கும். இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை உர மானியம் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த பிறகு, எதற்காக இந்த விலை உயர்வு.

அறுவடை இயந்திரம், உழவு இயந்திரம் உள்ளிட்டவைகளுக்கான வாடகை கடந்த சில ஆண்டுகளாகப் பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. விவசாயக் கூலித் தொழிலாளர் களுக்கான ஊதியமும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் விளைபொருள்களுக்கு, அதற்கு ஏற்ற வகையில் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதில்லை. விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த நிலையில் ரசாயன உரங்களின் விலையும் உயர்ந்து கொண்டேபோனால், விவசாயிகளால் எப்படிச் சமாளிக்க முடியும். இதற்கு என்னதான் தீர்வு? மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் என இனிமேலும் நம்பிக்கொண்டிருந்தால் அது மூடநம்பிக்கையாகத்தான் இருக்கும். இனிவரும் காலங்களிலும் ரசாயன உரங்களின் விலை மேலும் உயர்ந்துகொண்டேதான் இருக்கும். விவசாயிகள் இதை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருந்தால், உழைப்புக் கேற்ற லாபம் பார்க்க முடியாது. மாற்று வழிகளைக் கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம்.

தேனாம்படுகை பாஸ்கரன்
தேனாம்படுகை பாஸ்கரன்

தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகையைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாஸ்கரனிடம் இதுகுறித்துப் பேசியபோது, ‘‘நம் முன்னோர்கள் ரசாயன உரங்களைப் பத்தி கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. ஆனாலும், வெற்றிகரமாக மகசூல் எடுத்தாங்க. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருள்களைத் தான் உரமாகப் பயன்படுத்தினாங்க. அதுல இருந்தே பயிருக்குத் தேவையான எல்லாவிதமான சத்துக்களும் கிடைச்சிடும். அடியுரமாக டி.ஏ.பி-தான் போடணும்னு அவசியமில்லை. பல தானிய விதைப்பு செஞ்சாலே மண்ணுக்குத் தேவையான அனைத்துவிதமான சத்துகளும் கிடைச்சிடும். சிறுதானிய வகையைச் சேர்ந்த கம்பு, கேழ்வரகு, சோளம், எண்ணெய் வித்துப் பயிர்களான எள்ளு, கடலை, சூரியகாந்தி, நறுமணப் பயிர்களான கடுகு, சீரகம், சோம்பு, பயறு வகையைச் சேர்ந்த உளுந்து, நரிப்பயறு, கொள்ளு, காராமணி, பசுந்தாள் உரப்பயிர்களான கொழிஞ்சி, தக்கைப்பூண்டு, சணப்பு... இது எல்லாத்தையும் சம அளவு கலந்து ஏக்கருக்கு 6 கிலோ வீதம் தூவிவிட்டு, பூ பூக்கும் தருணத்துல மடக்கி உழுதால், கந்தகச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்புச்சத்து, தழைச்சத்து உட்பட மண்ணுக்கு தேவையான எல்லாவிதமான சத்துக்களுமே கிடைச்சிடும்.

விவசாயி
விவசாயி

ஒருவேளை பலதானிய விதைப்பு செஞ்சி மடக்கி உழவு ஓட்ட, போதிய கால அவகாசம் இல்லைனா, உடனடியாகப் பலன் கொடுக்கக்கூடிய கடலைப்புண்ணாக்கையும் வேப்பம்புண்ணாக்கையும் அடியுரமாகப் பயன்படுத்தலாம். உழவுக்கு முன்னாடி ஏக்கருக்கு தலா 10 கிலோ வீதம் கடலைப்புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு போட்டு, அதுக்குப் பிறகு உழவு ஓட்டி, சாகுபடியைத் தொடங்கலாம். அடியுரத்துக்கு இன்னொரு எளிமையான வழியும் இருக்கு. மாட்டு எருவை மர நிழலில் போட்டு, 15 நாள்கள் வரைக்கும் தண்ணீர் தெளிச்சிக்கிட்டே இருந்தால், நுண்ணூயிரிகள் பெருக்கம் அடையும். இதை அடியுரமாக ஏக்கருக்கு 3 டன் போடலாம். எருவில் உள்ள நுண்ணுயிரிகள் மேலும் பெருக்கமடைந்து, மண்ணில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களைச் சிதைத்து, பயிர்களின் வேர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலையில் கொடுக்கும். சாகுபடியைத் தொடங்குவதற்குப் போதிய கால அவகாசம் இருந்தால், மாட்டு எருவை மர நிழலில் போட்டு 40 நாள்கள் வரை தண்ணீர் தெளித்தால் நுண்ணுயிரிகள் பெருக்கமடைவதோடு, நிறைய மண் புழுக்களும் உருவாகும். இதை அடியுரமாக ஏக்கருக்கு 3 டன் பயன்படுத்தினால், போரான், ஜிங்க், கந்தகம், சல்ஃபர், கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட பேரூட்டச் சத்துகள் பயிர்களுக்கு விரைவாகக் கிடைக்கும்.

இயற்கை இடுபொருள்கள்
இயற்கை இடுபொருள்கள்

டி.ஏ.பி-க்கு மாற்றாக, இத்தகைய மேம்படுத்தப்பட்ட எருவை பயன்படுத்தக்கூடிய விவசாயிகளுக்கு முதல் வருஷம்தான் ஏக்கருக்கு 3 டன் தேவைப்படும். இரண்டாம் வருஷம் இதில் பாதியளவே போதுமானது. அடுத்தடுத்த வருடங்களில் இதன் அளவை மேலும் குறைத்துக் கொள்ளலாம். மிக விரைவாகப் பலன் கொடுக்க வேண்டுமென்றால், 3 டன் எருவுடன் தலா ஒரு லிட்டர் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா திரவம் கலந்து மேம்படுத்தலாம். மேலுரமாக, நடவிலிருந்து 15-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்கலாம். 30 மற்றும் 45-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் தலா 2 லிட்டர் மீன் அமிலம், தேமோர் கரைசல் கலந்து தெளிக்கலாம். பயிரின் செழிப்பு, காய்ப்பு தன்மைக்கு ஏற்ப, தேவைப்பட்டால் மீண்டும் கொடுக்கலாம். இவை இலைவழி ஊட்டமாகப் பயன் அளிக்கும். பஞ்சகவ்யா, மீன் அமிலம், தோமோர் கரைசல் கொடுக்க வாய்ப்பில்லாத விவசாயிகள், வாய்மடையில் ஒரு குழி தோண்டி 5 நாள்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 6 கிலோ மாட்டுச் சாணம், 2 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரைக்கிலோ வெல்லம் கலந்து வைக்கலாம். தண்ணீர் பாய்ச்சும் போது இவை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து நிலம் முழுக்கப் பரவி வினைப்புரியும். இதன் மூலமாகவும் நிலத்தில் நூண்ணுயிரிகள் பெருகி, பயிர்களின் வளர்ச்சிக்குத் துணைப் புரியும்’’ என்றார்.


தொடர்புக்கு,

தேனாம்படுகை பாஸ்கரன்,

செல்போன்: 94428 71049.

பாஸ்போ பாக்டீரியாவின் பயன்பாடு!

பல்வேறு நாடுகளில் உள்ள ரசாயன உரங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் நீண்டகாலம் பணியாற்றியவரும், வேலூர் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் ஆலோசகருமான கே.துரைராஜ் “இந்தியாவில் டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் தயாரிப்பில் 19 நிறுவனங்களும், யூரியா தயாரிப்பில் 32 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. ஆனால், இவற்றிற்குத் தேவையான மூலப்பொருள்கள் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. கொரோனா காரணமாக, மூலப்பொருள் பற்றாக்குறை நிலவியது. இதனால் டி.ஏ.பி உள்ளிட்ட உரங்களுக்கான மூலப்பொருள்களின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் தற்போது இந்தியாவில் டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் விலை உயர்த்தப்படுகிறது. விவசாயிகள் என்னதான் போராடினாலும், இந்த விலையேற்றத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது.

கே.துரைராஜ்
கே.துரைராஜ்

விவசாயிகள் இனியும் ரசாயன உரங்களை நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. நம் முன்னோர்கள் போல், தற்போதைய விவசாயிகளும் குப்பை எரு, இலைத்தழைகளை உரமாகப் பயன்படுத்த வேண்டும். வேளாண்மைத்துறையால் மிக குறைந்த விலைக்கு விற்கப்படும் உயிர் உரங்களையும் பயன்படுத்தலாம். குறிப்பாக, பாஸ்போ பாக்டீரியா மண்ணில் உள்ள அங்ககப் பொருள்களை சாப்பிட்டு, கோடிக்கணக்கில் பெருக்கமடைந்து, நிலத்தில் ஏற்கெனவே உள்ள பாஸ்பேட்டை கரைத்து பயிர்களுக்குக் கொடுக்கும். நம் விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்தியதால், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. ஒரு ஏக்கருக்கு 30 கிலோ பசுந்தாள் உரப் பயிர்களை விதைப்பு செஞ்சி, 40 நாளில் மடக்கி உழவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 3 டன் எருவில் 1 கிலோ பாஸ்போ பாக்டீரியாவைக் கலந்து தண்ணீர் தெளித்து வைத்திருந்து, மறுநாள் அடியுரமாக நிலத்தில் போட்டு உழவு ஓட்டினால் மண் வளமாகும். பயிர்களுக்குத் தேவையான சத்துகள் எளிதாக கிடைக்கும்’’ என்றார்.

தொடர்புக்கு, கே.துரைராஜ், செல்போன்: 98860 19021.

எரு
எரு

50 சதவிகிதச் செலவு மிச்சம்!

“டி.ஏ.பி, யூரியா, பொட்டாஷ் எல்லாம் சேர்த்தால் ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் செலவாகும். இதே புண்ணாக்கு, எரு, உயிர் உரங்கள், மீன் அமினோ அமிலம்... என்று இயற்கை உரங்களைக் கணக்கிட்டால் அதிகபட்சம் ஏக்கருக்கு 2,500 ரூபாய் வரைதான் செலவாகும். ஆக, ரசாயன விவசாயத்தை விட 50 சதவிகிதம் செலவும் மிச்சம். நிலமும் வளமாகும். இந்தச் செலவு வருஷத்துக்கு வருஷம் குறையும். காரணம், நிலம் வளமாகும்போது, உரத்தேவையும் குறையும். ஆனா, ரசாயன விவசாயத்தில உரத்தேவை கூடும்’’ என்கிறார் பாஸ்கரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism