Published:Updated:

விவசாயத்தை அழித்து விமான நிலையமா? கொந்தளிக்கும் விவசாயிகள்!

விமான நிலையம் அமையவுள்ள பகுதி
பிரீமியம் ஸ்டோரி
விமான நிலையம் அமையவுள்ள பகுதி

பிரச்னை

விவசாயத்தை அழித்து விமான நிலையமா? கொந்தளிக்கும் விவசாயிகள்!

பிரச்னை

Published:Updated:
விமான நிலையம் அமையவுள்ள பகுதி
பிரீமியம் ஸ்டோரி
விமான நிலையம் அமையவுள்ள பகுதி

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 12 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 4,751 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்துடன் சென்னைக்கு அருகே 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

20,000 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள இத்திட்டம், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான படிகட்டு எனவும் மைல் கல் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். ‘‘பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசின் வசம் 4,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்றதும் இன்னும் 1,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தப்படும். இத்திட்டத்தினால் தமிழ்நாட்டில் தொழில்புரட்சி ஏற்படும்’’ எனத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

விமான நிலையம் அமையவுள்ள பகுதி
விமான நிலையம் அமையவுள்ள பகுதி

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தையும் புறக்கணித்துள்ளனர்.

விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், அக்கமாபுரம், தண்டலம், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் பயணப்பட்டோம். மாடுகட்டி ஏர் மூலம் நிலத்தில் உழுது கொண்டிருந்த விவசாயிகள் மிகுந்த கொந்தளிப்போடு, ``படிக்காத எங்களுக்குப் பயிர்தொழில்தான் காலங்காலமா சோறு போட்டுக்கிட்டு இருக்கு. இந்த மண்ணை நம்பி, விவசாயம் செஞ்சி கௌரவமா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இந்தப் பகுதிகள்ல ஏகப்பட்ட ஏரி, குளம், கிணறுனு தண்ணிக்கும் பஞ்சமில்ல. வளமான மண்ணு. செழிப்பா விவசாயம் நடந்துகிட்டு இருக்கு. இதை அழிச்சிட்டு விமான நிலையம் கொண்டு வரப்போறோம்னு சொல்றது முட்டாள்தனமா இருக்கு. இப்படி ஒரு பாதகத்தைச் செய்யத் தமிழக அரசாங்கத்துக்கு எப்படி எண்ணம் வந்துச்சோ’’ என ஆதங்கப்படுகிறார்கள்.

ஊரக வேலைவாய்ப்பு ஆட்கள்
ஊரக வேலைவாய்ப்பு ஆட்கள்

இப்பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி வசந்தி, ``பாசனத்துக்கும் எங்களோட தாகத்தைத் தீர்த்துக்கவும் எங்க நிலத்துலயே இளநீ மாதிரி, இனிப்பா சுத்தமான தண்ணி கிடைக்குது. எங்க குழந்தைங்களும் இங்கயிருக்குற பள்ளிக்கூடத்துல படிக்குறாங்க. பல தலைமுறையா இங்கதான் நாங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். நாங்க எதுக்கு எங்க கிராமத்தை விட்டுப் போகணும். ஏர்போர்ட் வேணும்னு நாங்க கேட்டோமா?” என ஆவேசப்பட்டார்.

நாகப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளரான கஜேந்திரி. ``32 வருஷமா ஓலைக்குடிசையில வாழ்ந்தேன், கடன்வாங்கி இப்பதான் ஒரு வீட்டை கட்டினேன். இப்போ வீட்டை இடிச்சி எங்கள காலிபண்ண சொல்லிட்டா நாங்க எங்கபோவோம்” எனக் கண்ணீர் வடிக்கிறார். “எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் எங்கள் மண்ணை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டோம்!” என்கிறார்கள்.

நெல் மூட்டைகள்
நெல் மூட்டைகள்

ஏகனாபுரத்தைச் சேர்ந்த இந்திரா என்ற பெண், ``எங்க பஞ்சாயத்துல மட்டும் 3,000 குடும்பங்கள் இருக்கு. கொரோனாவை சமாளிச்சி இப்பதான் படிபடியா மீண்டு வந்துக்கிட்டு இருக்கோம். அரசாங்கம் இப்பதான் எங்க ஊர்ல நிறைய பேருக்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுத்துருக்கு. இப்ப அவங்களே அதை இடிக்கப்போறதா சொல்றது எந்த விதத்துல நியாயம்” எனக் குமுறுகிறார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

இப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள ஶ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகையிடம் பேசியபோது ``தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய பன்னாட்டு விமான நிலையம் இங்கு அமையவுள்ளது. இதை வரவேற்கிறேன். அதேசமயம், பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் மக்களின் குடியிருப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி வருகிறேன். விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தவிர்க்கமுடியாதது என்பதால், அந்த நிலங்களுக்கு மூன்று மடங்கு இழப்பீட்டுத்தொகை தர அரசு முன்வந்திருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.