Published:Updated:

இயற்கைக்கு வேட்டு வைக்கும் வெளிவட்டச்சாலை திட்டம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

இயற்கைக்கு வேட்டு வைக்கும் வெளிவட்டச்சாலை திட்டம்!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

முயல் பராமரிப்புப் பணிகளில் இருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அப்போது அங்கு வந்து சேர்ந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. ‘‘விவசாயத்தோட ஆடு, மாடு, கோழி எல்லாம் வளர்க்குற... அது வேலையோட வேலையாப் போயிடும். ஆனா, முயல் வளர்க்குறது சிரமமா இல்லையா?’’ என்றார் வாத்தியார்.

‘‘வாத்தியாரே... எந்த வேலையையும் விரும்பிச் செஞ்சா சிரமம் இருக்காதுன்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. நான் விரும்பிச் செய்றேன். அதனால சிரமம் எதுவும் இல்ல’’ என்ற ஏரோட்டி, முயல்களை எடுத்து வெளியே விட்டு, கூண்டைச் சுத்தப்படுத்த தொடங்கினார்.

அங்கிருந்த புல்தரையில் ஓடியாடிக்கொண்டிருந்த முயல்களை ரசித்துக்கொண்டிருந்தார் வாத்தியார். அப்போது சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. ‘‘என்ன வாத்தியாரே முயல் மேய்ச்சிட்டு இருக்கீங்களா?’’ என்றார் நக்கலாக.

பேச்சு சத்தம் கேட்டுத் திரும்பிய ஏகாம்பரம், ‘‘இந்தா புள்ள... உனக்கு நக்கலா இருக்கா... அது வாத்தியாரோட முயல் இல்ல... என்னோடது. அது இருக்கட்டும். இதென்ன புதுசா சைக்கிள்ல யாவாரம் பார்க்கக் கிளம்பிட்ட. நான்கூட, முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து காப்பியடிச்சிட்டியோனு நினைச்சேன்’’ என்றார் அதே நக்கல் தொனியில்.

‘‘ம்... அதெல்லாம் பொழுதுபோக்கு. எனக்குப் பொழப்பு’’ என்று சீறிய காய்கறி, ‘‘ஒரு வாரமா கால்வலி. ரொம்பத் தூரம் நடக்க முடியல. அதான் இப்ப ரெண்டு மூணு நாளா சைக்கிள்ல வியாபாரத்துக்குப் போறேன்’’ என்ற காய்கறி, ‘‘எனக்கும் ரெண்டு முயல் கொடுக்குறது. நானும் காய்கறிக் கழிவுகளைப் போட்டு வளர்த்துப் பார்க்குறேனே...’’ என முயலுக்கு அடிபோட்டார்.

‘‘உனக்கு இல்லாததா... இந்தா... இந்த முயலை வெச்சுக்கோ’’ என்று அங்கு மேய்ந்துகொண்டிருந்த முயலைக் கையில் பிடித்துக் கண்ணம்மாவிடம் கொடுத்தார் ஏரோட்டி.

‘‘இங்க என்னய்யா நடக்குது... நான் ஒரு மனுஷன் இங்க இருக்குறதையே மறந்துட்டு நீங்களா பேசிட்டு இருக்கீங்க’’ அதுவரை அங்கு நடப்பவற்றை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த வாத்தியார் மௌனம் கலைந்து பேசினார்.

‘‘கோவிச்சுக்காதீங்க வாத்தியாரே... உங்ககிட்ட பேசும்போதுதான் நாலு விஷயம் தெரிஞ்சுக்க முடியுது. இன்னிக்கு என்ன தகவல் வெச்சிருக்கீங்க’’ என்றார் காய்கறி.

‘‘வளர்ச்சி திட்டம்ங்கிற பேர்ல போன அ.தி.மு.க ஆட்சியில ஆரம்பிச்ச சென்னை வெளிவட்ட சாலைகள் திட்டம் நாலு மாவட்ட விவசாயிகள் வயித்துல புளியை கரைச்சுட்டு இருக்குது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தா விளைநிலங்கள், பல்லாயிரக்கணக்கான மரங்கள், குளம், குட்டைகள், வீடுகள், ஏரிகள் அழிஞ்சுப்போகுமாம். தி.மு.க ஆட்சிக்கு வந்தா இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்னு எதிர்பார்ப்புல இருந்தாங்க விவசாயிகள். ஆனா, தி.மு.கவும் அந்தத் திட்டத்தைக் கையிலெடுக்க ஆரம்பிச்சிடுச்சாம்’’ இறுக்கமான குரலில் சொன்னார் வாத்தியார்.

‘‘சென்னை வெளிவட்ட சாலைகள் திட்டம் பற்றி விளக்கமா சொல்லுங்க வாத்தியாரே’’ என்றார் ஏரோட்டி.

‘‘தலையைச் சுத்தி மூக்கை தொடுறதுன்னு கேள்விபட்டிருப்பீங்களே… அதுதான் இந்தத் திட்டம். மாமல்லபுரத்திலிருந்து அதானி காட்டுப்பள்ளி துறைமுகம், எண்ணூர் துறைமுகங்களை இணைக்குறது இந்தத் திட்டம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுனு நாலு மாவட்டங்களைத் தொட்டு 132 கிலோமீட்டர் சுற்றி வளைச்சு 63 கி.மீ. தூரத்துல இருக்க இந்த ரெண்டு இடங்களையும் இணைக்கப் போறாங்களாம். இதனால வாழ்வாதாரம் போயிடும்னு கதறும் விவசாயிகள், பொதுமக்களோட குரலை அதிகாரவர்க்கம் கண்டுக்கல. சேலம் 8 வழிச்சாலையை விடப் பெரிய பட்ஜெட்டாம். 12,000 கோடி. இதுக்கு ஜப்பான் ஜைக்கா நிறுவனமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கடன் கொடுக்குறாங்களாம். இம்புட்டு செலவுல எதுக்கு இந்தத் திட்டம்னு கேட்டா, தென் மாவட்டங்கள்ல இருந்து வர்ற கன்டெய்னர்கள் எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகத்துக்குத் தடையில்லாமப் போகத்தான் இந்தத் திட்டம்னு அ.தி.மு.க அரசு சொல்லுச்சு. ஆனால், ஏற்கெனவே இருக்கிற மீஞ்சூர்-வண்டலூரை இணைக்குற வெளிவட்ட சாலையை மாமல்லபுரம், காட்டுப்பள்ளி துறைமுகத்தோட இணைச்சாலே போதுமாம். புதுசா போடப்போற இந்த வெளிவட்ட சாலைக்கும், ஏற்கெனவே இருக்கும் வெளிவட்ட சாலைக்கும் இடையே 5 கிலோ மீட்டர்தான் தூரமாம். இப்படிப் பக்கத்து பக்கத்துல ரெண்டு சுற்றுச்சாலைகளை ஏன் அமைக்கணும். இயற்கை வளங்களை அழிக்கணும்னு கேக்குறாங்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்’’ நீண்ட விளக்கம் கொடுத்து முடித்தார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு


‘‘வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் வரும் எவ்விதமான திட்டங்களுக்கும் தி.மு.க அரசு ஒப்புதல் தராது என்று சொல்லிக்கொண்டிருக்கிறாரு முதலமைச்சர். அப்ப இது என்ன? ஒண்ணுமே புரியலையே?’’ கவலையோடு சொன்னார் காய்கறி.

‘‘விவரம் தெரியாம இருக்கியே... அரசியல்ல அதெல்லாம் சகஜம். திட்டத்தோட மதிப்பு 12,000 கோடியாம். அது எத்தனை பேர் கண்ணை உறுத்துதோ... அவங்களுக்கு ஏரி, குளம், விளைநிலங்கள் பத்தியெல்லாம் கவலையில்ல. காந்தி நோட்டுதான் முக்கியம்’’ ஆத்திரமாகச் சொன்னார் ஏரோட்டி.

“12 ஆயிரம் கோடியோ... 12 லட்சம் கோடியோ... என்னத்தையோ தின்னுத் தொலைக்கட்டும். ஆனா, இந்த பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கிட்டே போறதால... நம் விவசாயிங்க பாடும் திண்டாட்டமா இருக்கு. விளைபொருளோட விலையிலதான் கை வைக்கிறாங்க வியாபரிங்க. நாங்க ஆட்சிக்கு வந்தா விலைக் குறைப்போம்னு சொன்ன தி.மு.க, இப்ப கண்டுக்காமலே இருக்குதே!’’ என்று வெதும்பினார் காய்கறி.

“அதான் கூட்டணிக் கட்சிகளை வெச்சி மோடி அரசுக்கு எதிரா போராட்டத்தை நடத்திக்கிட்டு இருக்காங்களே... அதுபோதாதா. நீயெல்லாம் பொழப்பத்து போய் கண்டதையும் நம்பிக்கிட்டிருக்கிறதாலதான் தலையில மொளகா அரைச்சிக்கிட்டே இருக்காங்க இந்த அரசியல்வியாதிங்க. மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் வாங்குற வரியாலதான் பெட்ரோல் விலை இப்படி எகிறிக்கிடக்குது. தேர்தலப்ப சொன்னதுபோல தி.மு.க அரசாங்கம் வரியைக் குறைச்சாலே, ஓரளவுக்கு விலை குறைஞ்சிடப்போவுது. இதுக்கு பிறகு மத்திய அரசுதான் குறைக்கணும்னு சொல்லிட்டா... மக்களுக்கு உண்மை தெரிஞ்சிடப்போகுது. அதைச் செய்யாம, சைக்கிளை ஓட்டி கிச்சுக்கிச்சு மூட்டிக்கிட்டிருக்கிறாரு நம்ம முதலமைச்சரு. என்னத்த சொல்ல?’’ என்றார் வாத்தியார்.

‘‘ம்... அவரு சைக்கிளு ஓட்டினா அது மாஸு. நாம ஓட்டினா லூஸு’’ என்று காய்கறி சொல்ல,

“பலே... பலே... நீ கூட டி.வி ரியாலிட்டி ஷோவுல போய் பேசலாம் போலயே...’’ என்று கலகலப்பூட்டிய ஏரோட்டி, முயல் பராமரிப்புப் பணிகளில் கவனத்தைத் திருப்ப,

“சரிய்யா... நீ வேலையைப் பாரு. நாங்க கிளம்புறோம்’’ என்றபடியே வாத்தியார் கிளம்ப, சைக்கிளை உருட்டிக்கொண்டே பின்தொடர்ந்தார் காய்கறி.

முடிவுக்கு வந்தது மாநாடு.

முயல்களைப் போன்றே இருக்கும் கினியா பிக்!

கடந்த இதழில் (10.7.21) ‘மொட்டை மாடியில் முயல் வளர்ப்பு’ என்ற கட்டுரை இடம் பெற்றிருந்தது. அதில் முயல்குட்டி போன்ற தோற்றத்திலிருந்த கினியா பிக் (Guinea Pig) என்ற விலங்கின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதற்கு முயல்கள் என்று தவறுதலாக கேப்ஷன் இடம் பெற்றிருந்தது. அவை முயல் அல்ல: கினியா பிக். இதைப் பற்றி பேசிய பண்ணையாளர் ஜான்சன் செல்வம், “கினியா பிக்கை முயல்களோடு சேர்த்து வளர்ப்பது வழக்கம். காரணம், முயலுக்கு கொடுக்கும் தீவனத்தையே இதற்கும் கொடுத்து வளர்க்கலாம். மனிதர்களோடு நன்றாக பழகும் தன்மை கொண்டது. வெளிநாட்டைச் சேர்ந்த இந்த விலங்கை ஆராய்ச்சிக்காக நிறைய பேர் வாங்குகிறார்கள். இதற்காகவே இதை முயல்களோடு சேர்த்து வளர்த்து வருகிறேன்” என்கிறார்.

கினியா பிக்
கினியா பிக்
DIXITH


சென்னை, வேப்பேரி கால்நடை மருத்தவக் கல்லூரி உதவிப் பேராசிரியை முனைவர் ஜலந்தாவிடம் பேசினோம். “இது எலி வகையை சேர்ந்ததல்ல. இதை ஒரு விலங்கு என்றே அடையாளப்படுத்தி வருகிறார்கள். காரணம் எலிக்கென்று சொல்லப்படும் உடல் அமைப்புகள் இந்த விலங்கில் இல்லை. குறிப்பாக எலிக்கு வால் இருக்கும். இதில் வால் இருக்காது. இது ஆராய்ச்சிக்காகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. டி.பி, கேன்சர், அலர்ஜி வகையான மருந்துகளை மனிதர்களுக்கு கொடுப்பதற்கு முன்பு கினியா பிக்கில் செலுத்திதான் பரிசோதிக்கப்படுகிறது. பிறகே பயன்பாட்டுக்கு வருகிறது. இதை வளர்ப்பதற்கென்றே சில விதிமுறைகள் உள்ளன. எங்கள் பல்கலைக்கழகத்திலும் இதை வளர்த்து வருகிறோம். லேசான முயல் சாயலில் உள்ள இதை, தற்போது செல்லப் பிராணிகளாகவும் நிறைய பேர் வளர்த்து வருகிறார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism