நாட்டு நடப்பு
Published:Updated:

செங்குத்து தோட்டம், ஹைட்ரோபோனிக்ஸ்... தோட்டம் அமைக்க ரூ.15,000 மானியம்!

மேடையில் பேச்சாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மேடையில் பேச்சாளர்கள்

சென்னை மாடித்தோட்ட கருத்தரங்கில் குவிந்த மக்கள்

கொரோனா ஊரடங்கின்போது எல்லோரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது பலருக்கும் ஆறுதலாக இருந்தது தோட்ட வேலைகள்தான். அதுவும் நகரப் பகுதியில் இருப்பவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக இருந்தவை மாடித்தோட்டங்கள். பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு சத்தான காய்கறிகள், நஞ்சில்லாத காய்கறிகள் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு வடிகாலாக மாடித்தோட்டமும் வீட்டுத்தோட்டமும் இருந்து வருகிறது. இந்தத் தோட்டம் அமைப்பது குறித்து பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை, டி.ஜி.வைணவக் கல்லூரி தாவரவியல் துறை, பசுமை விகடன் இணைந்து இந்தக் கருத்தரங்கை 16.10.22 அன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி வைணவக் கல்லூரியில் நடத்தின. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் குவிந்த மக்கள்
கருத்தரங்கில் குவிந்த மக்கள்

நிகழ்ச்சியில் டி.ஜி.வைணவக் கல்லூரியின் தாவரவியல் துறை தலைவர் முனைவர் ரா.முரளிதரன் பேசியபோது, “மாணவர்களுக்குத் தாவரங்களைப் பற்றிப் பாடமாகச் சொல்லிக் கொடுப்பதைவிட அவர்களைத் தாவரங்கள் சார்ந்த பணியில் ஈடுபடுத்தும்போது அதைச் சர்ந்த அறிவு அதிமாகிறது. எங்கள் கல்லூரி வளாகத்தில் பழப்பயிர்கள், மலர்கள், மரங்கள் அடங்கிய தோட்டத்தைத் தாவரவியல் மாணவர்கள்தான் பராமரித்து வருகிறார்கள். கல்லூரி வளாகத்தில் மரங்களையும் வளர்த்து வருகிறார்கள். அதற்குப் பெயர் சூட்டுவது, அதன் வளரியல்பு உள்ளிட்ட விஷயங்களையும் கற்று வருகிறார்கள். மாணவர்களுக்கு மண்புழு உரம் தயாரிக்கக் கற்றுக் கொடுக்கிறோம். அதன் முத்தாய்ப்பாகவே இந்த நிகழ்ச்சி” என்றார்.

மேடையில் பேச்சாளர்கள்
மேடையில் பேச்சாளர்கள்

கல்லூரியின் முதல்வர் முனைவர் சே.சந்தோஷ்பாபு பேசியபோது, ``மாடித்தோட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருகிறது. இது நகரங்களில் உள்ள வெப்பத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும். இந்தக் கல்லூரி வளாகத்தையே மரங்கள் அடர்ந்த பசுமை சோலையாக மாற்றி யிருக்கிறோம். தாவரங்கள் உள்ள பசுமைக் கண்ணாடி பாட்டில்களைக் கிஃப்ட்டாகக் கொடுக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே பெருகி வருகிறது. இந்த நகரங்களைப் பசுமையாக்க மாடித்தோட்டமும் பங்களிக்கிறது. எனவே, மாடித்தோட்டம் அனைவரும் அமைக்க முன் வர வேண்டும்” என்றார்.

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை இயக்குநர் பிருந்தாதேவி ஐ.ஏ.எஸ் பேசும்போது, ``நகரங்களில் நஞ்சில்லாத காய்கறிகள் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பாக மாடித்தோட்டம் அமைக்க ரூ.900 மதிப்புள்ள பைகள், விதைகள், உயிர் உரங்கள், தேங்காய்நார் கட்டிகள் ஆகியவை 50 சத விகித மானியத்தில் ரூ.450-க்கு வழங்கி வருகிறோம். இந்த மாடித்தோட்ட தொகுப்பு தேவைப்படுவோர் https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு பெற்றுக்கொள்ளலாம். முதலமைச்சரின் ஊட்டச்சத்துத் திட்டத்தில் செங்குத்துத் தோட்டம் மற்றும் ஹைட்ரோ போனிக்ஸ் முறையில் விவசாயம் செய்ப வருக்குப் பின்னேற்பு தொகையாக ரூ.15,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இன்றைய தலைமுறை யினர் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், செடி வைத்து பாதுகாப்பவர்களுக்குதான் உழைப்பின் அருமை தெரியும். அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் நகர்ப்புற காய்கறி உற்பத்தித் திட்டம் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் காணொளி
அமைச்சர் மா.சுப்பிரமணியனின் காணொளி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் மாடித்தோட்ட விவசாயியுமான மா.சுப்பிரமணியன் நிகழ்வில் கலந்துகொள்ள இருந்தார். தவிர்க்க முடியாத சூழ்நிலை யில் அவரால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. நிகழ்வில் பேச வேண்டியதை காணொளியாக அனுப்பி யிருந்தார். அதைக் கூட்டத்தில் ஒளிபரப்பினோம்.

அதில், “பசுமை விகடன் நடத்தும் எல்லா நிகழ்வுகளைவும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். என்னுடைய மாடித்தோட்டம் குறித்த செய்தியை உலகுக்கு அறிமுகப் படுத்தியது பசுமை விகடன்தான். அது எங்கு கொண்டுபோய் விட்டது என்றால், ஆசிய அளவில் விருது பெறும் வரை. என்னுடைய வீட்டின் மாடியில் 8 வரைந்து தினமும் அதில் நடைப்பயிற்சி செய்வேன். இதோடு கத்திரி, வெண்டைக்காய் தோட்டமும் சுற்றியும் இருக்கும். தோட்டத்தைப் பார்த்துக் கொண்டே நடைப்பயிற்சி செய்வது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இந்த எட்டில் தொடர்ந்து 4 மணி நேரம் நடைப்பயிற்சி செய்து ஆசியா அளவில் சாதனை புரிந்தேன். இப்போது தங்கி இருக்கும் அரசு பங்களாவில் வாழை, நெல்லி, பப்பாளி வளர்த்து பராமரித்து வருகிறோம். பசுமையான தோட்டம் மகிழ்ச்சி கொடுக்கும் ஒரு விஷயம். வெளியூர், பயணம் என எங்கே சென்றாலும் அதோடு உறவாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்” என்று சுப்பிரமணியன் குறிப்பிட்டிருந்த விஷயங்கள், கூட்டத்தினரை உற்சாகப்படுத்தியது.

மாடித்தோட்ட அரங்குகளில் குவிந்த மக்கள்
மாடித்தோட்ட அரங்குகளில் குவிந்த மக்கள்

மண்புழு விஞ்ஞானியும் மாநில திட்டக்குழு உறுப்பினருமான முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் பேசும்போது, “வீட்டுத் தோட்டத்தை ‘கிச்சன் கார்டன்’ என்று சொல்கிறார்கள். அது மக்களிடத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. வீட்டுத்தோட்டத்தை ‘நியூட்ரிஷினல் கார்டன்’ என்றழைப்பதுதான் சரியாக இருக்கும். ஒரு மரமானது ஆண்டுக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜனை நமக்குக் கொடுக்கிறது. எனவே, வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால் அதைக் காப்பாற்றி வையுங்கள்.

நடமாடிக் கொண்டே பேசிய சுல்தான் இஸ்மாயில்
நடமாடிக் கொண்டே பேசிய சுல்தான் இஸ்மாயில்

புதிதாக விவசாயம் செய்ய ஆரம்பிப்பவர்கள் மண்ணைக் கையில் எடுத்து கயிறு போல திரிக்க வேண்டும். திரி செய்ய முடியாமல் உலர்ந்தால் அது மணல். திரி செய்யும்போது நீளமாக வந்தால் அது களிப்பு மண். விவசாயம் செய்ய இயலாது. திரி செய்யும்போது துண்டு துண்டாக வந்தால் அதுவே விவசாயம் செய்வதற்கு ஏற்ற மண். அந்த மண் சத்தானது என்பதை அறிந்துகொள்ளலாம். பூச்சிக்கொல்லி களைத் தெளித்து உணவை விஷமாக்கிக் கொண்டிருக் கிறோம். அதற்குப் பதிலாக வீட்டிலேயே இயற்கை உரங்களைத் தயாரித்து, செடிகளை வளர்க்கலாம். இதற்குப் பொறுமைதான் தேவைப்படுகிறது” என்றார்.

மாடித்தோட்ட அரங்குகளில் குவிந்த மக்கள்
மாடித்தோட்ட அரங்குகளில் குவிந்த மக்கள்

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மாடித்தோட்ட விவசாயி மைத்ரேயன், “மாடித்தோட்டம் ஆரம்பகட்டத்தில் சவாலாக இருந்தது. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தபின் எல்லாமே எளிமையாகி விட்டது. இப்போது மாடித்தோட்டம் செழிப்புடன் இருக்கிறது. ஒரு செடி நன்றாக வளர தொட்டி, விதைகள், மண், தண்ணீர் ஆகியவை இருக்க வேண்டும். இந்த நான்கும் சரியாக அமைந்துவிட்டால் செடிகள் நன்றாக வளரும். வீட்டை விட்டு வெளியில் போய்விட்டால் செடிகளுக்கு யார் தண்ணீர் ஊற்றுவார்கள் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துவிட்டால் ஆட்டோமேட்டிக்காக நீங்கள் எங்கிருந்தாலும் செடிகளுக்குத் தண்ணீர் போய்விடும். அந்தளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஆர்வமே அடிப்படைத் தேவை” என்றார்.

பிருந்தாதேவி, சந்தோஷ்பாபு, முரளிதரன், பிரியா ராஜ்நாராயணன், மைத்ரேயன்
பிருந்தாதேவி, சந்தோஷ்பாபு, முரளிதரன், பிரியா ராஜ்நாராயணன், மைத்ரேயன்

மாடித்தோட்ட பயிற்றுநர் பிரியா ராஜ்நாராயணன் பேசும்போது, “மாடித்தோட்டத்துக்கு அதிகம் செலவு செய்யாதீர்கள். பழைய தண்ணீர் கேன்கள், பிளாஸ்டிக் பக்கெட்கள் உள்ளிட்ட நம்மைச் சுற்றி இருக்கும் பொருள்களைக் கொண்டே தோட்டம் போட்டுவிடலாம். நம்முடைய அஞ்சறைப் பெட்டியிலிருந்தே இடுபொருள்களைத் தயாரித்துக் கொள்ள லாம். நான் எதையுமே கற்றுக்கொண்டு தோட்டம் போடவில்லை. தோட்டம் போட்ட பிறகுதான் எல்லாமே கற்றுக்கொண் டேன். சில விவசாயிகள் மரபு ரக விதைகளில் விளைச்சல் இல்லை என்று கூறுகிறார்கள். மரபு ரக விதைகளைக் கொண்டு விவசாயம் செய்தால் நல்ல விளைச்சல் எடுக்க முடியும் என்பதற்கு நானே உதாரணம்.

கருத்தரங்கில் குவிந்த மக்கள்
கருத்தரங்கில் குவிந்த மக்கள்

அரிசி, பருப்பு கழுவும் தண்ணீரை 10 லிட்டர் எடுத்துக்கொண்டு அதில் 100 கிராம் தூளாக்கப்பட்ட கடலைப் பிண்ணாக்கு, 2 டீஸ்பூன் (25 கிராம்) நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். இதை இரண்டு நாள்கள் நிழலான இடத்தில் வைத்தால் கரைசல் தயார். இதிலிருந்து 1 லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு செடிக்கு 1 லிட்டர் என்ற அளவில் ஊற்றினால் செடிகள் நன்கு வளரும். காய்களும் நன்கு காய்க்கும். இதுவொரு சிறந்த வளர்ச்சியூக்கி” என்றார்.

மாடித்தோட்ட தொகுப்பு
மாடித்தோட்ட தொகுப்பு

நிகழ்வின் சிறப்பம்சமாகத் தோட்டக் கலைத்துறை சார்பில் 700-க்கும் மேற்பட்ட மாடித்தோட்ட உபகரணங்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டன. தோட்டக் கலைத்துறையின் அரங்குகளில் குறைந்த விலையில் தொட்டி யுடன்கூடிய அழகு செடிகள், அழகு மலர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதோடு பணிபுரியும் இடங்களில் கண்ணாடிக் குடுவையில் செடிகளுடன்கூடிய தொட்டி பார்வையாளர்களைக் கவர்ந்தன. இதைப் பரிசாக வழங்க பலரும் வாங்கிச் சென்றனர்.

மாடித்தோட்ட தொகுப்பு
மாடித்தோட்ட தொகுப்பு
மாடித்தோட்ட அரங்குகளில் குவிந்த மக்கள்
மாடித்தோட்ட அரங்குகளில் குவிந்த மக்கள்

பீ மார்க்கெட், இந்திரா கார்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் அரங்குகளும் நிகழ்வில் இடம் பெற்றிருந்தன. டி.ஜி.வைணவக் கல்லூரியின் தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் ராஜராஜன், ஏழுமலை, வசந்த், அனந்த பத்மநாபன், மாணவ ஒருங்கிணைப்பாளர் மேதினி உள்ளிட்டோர் மாணவர்களை ஒருங்கிணைத்து நிகழ்வை சிறப்புடன் நடத்தி முடிக்க உதவினர். பிரியா ராஜ்நாராயணன் வந்திருந்தவர்களுக்கு இலவசமாகப் பாரம்பர்ய விதைகளை வழங்கினார். அனைவரும் தங்களுடைய மாடித் தோட்டத்துக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு, ‘‘அடுத்த நிகழ்ச்சி எப்போது?’’ என கேட்ட வண்ணம் மகிழ்ச்சியாகக் கலைந்து சென்றனர்.

மாடித்தோட்ட அரங்குகளில் குவிந்த மக்கள்
மாடித்தோட்ட அரங்குகளில் குவிந்த மக்கள்

குடும்ப விழாவாக மாற்றிவிட்டீர்கள்!

நிகழ்வில் கலந்துகொண்ட பெரம்பூரைச் சேர்ந்த கலாவதி, ``நான் நர்ஸிங் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் தோட்டம் வைத்து வளர்த்து வருகிறேன். செடிகள், விதைகள் வாங்கலாம் என்றுதான் இந்நிகழ்வில் கலந்துகொண்டேன். ஆனால், நிகழ்ச்சியில் பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொண்டேன். கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது’’ என்றார்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த குமார், “இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்குப் பசுமை விகடனுக்கு இங்கு வந்திருப்பவர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இங்கே தனிநபர்கள் அதிகம் வரவில்லை. குடும்பமாகத்தான் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். அதனால் இந்த நிகழ்வை குடும்ப விழாவாக மாற்றிய பெருமை, நிகழ்வை முன்னெடுத்த பசுமை விகடன், வைணவா கல்லூரி, தோட்டக் கலைத்துறையையே சாரும்” என்றார்.

அரங்குகளில் குவிந்த மக்கள்
அரங்குகளில் குவிந்த மக்கள்

மாடித்தோட்டம் வைட்டமின் டி-யைக் கொடுக்கிறது!

கருத்தரங்கில் பார்வையாளராக வந்து மேடையேறிய திரைப்பட நடிகர் படவா கோபி, “செடி வளர்ப்பது எனக்குப் பொழுதுபோக்குதான். சின்ன வயதில் இருந்தே வீட்டில் செடிகள் வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். எங்கள் வீட்டில் வெயில் காலத்தில் நிறைய கீரைகளைப் பயிரிடுவோம். அடுத்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் காய்கறிகளைப் பயிரிடுவோம். இந்த முறை எங்கள் வீட்டில் நெல்லிக்காயும் மாம்பழமும் நிறைய காய்த்திருந்தது. ஏரியாவுக்கே எங்கள் வீட்டில் இருந்துதான் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் சப்ளை ஆனது. வீட்டில் தோட்டம் அமைத்து அதில் வேலை செய்யும்போது, வெயிலில் இருந்து இலவசமாக வைட்டமின் டி கிடைக்கிறது. மேலும் மண்ணில் கை வைத்து வேலை செய்வதால், உடம்புக்கு எதிர்ப்புசக்தியும் கிடைக்கிறது. இதனால்தான் கொரோனா காலத்தில், வெயிலிலும் மணலிலும் வேலை செய்பவர்களுக்கு நோய்த்தொற்று அதிகம் ஏற்படவில்லை. நானும் இங்கே தமிழக அரசு தரும் மாடித்தோட்ட கிட் வாங்கதான் வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உள்ளது” என்றார்.

படவா கோபி, கலாவதி, குமார், காதல் கண்ணன்
படவா கோபி, கலாவதி, குமார், காதல் கண்ணன்

குடும்பத்தோடு கலந்துகொண்ட திரைப்பட நடிகர் காதல் கண்ணன் பேசியபோது, “நான் சமீபத்தில் சென்னையில் வீடு கட்டினேன். என் வீட்டிலிருந்த தென்னை மரத்தை வெட்டாமலேயே வீடு கட்டியுள்ளேன். நான் இப்படி வீடு கட்டும்போது பலர் வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால், இப்போது நான் என்னுடைய வீட்டில் இயற்கையோடு இணைந்து வாழ்வதுபோல இருக்கிறது. இப்போது வீட்டுத்தோட்டம் போட்டிருக்கிறேன். அதில் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன்” என்று ஆர்வமுடன் பேசினார்.