Published:Updated:

48 ரகங்கள்... 1,000 மரங்கள்!அசத்தும் அடர்வனம்!

அடர்வனத்தில் தீபா
பிரீமியம் ஸ்டோரி
அடர்வனத்தில் தீபா

சுற்றுச்சூழல்

48 ரகங்கள்... 1,000 மரங்கள்!அசத்தும் அடர்வனம்!

சுற்றுச்சூழல்

Published:Updated:
அடர்வனத்தில் தீபா
பிரீமியம் ஸ்டோரி
அடர்வனத்தில் தீபா

சென்னை என்றாலே கொளுத்தும் வெயிலும் புகை சூழ்ந்த காற்றும் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. இதைச் சமாளித்து ஓரளவுக்கு இதமாக வைத்திருப்பவை மாநகருக்குள் இருக்கும் மரங்கள்தான். சென்னையில் தற்போது இருக்கும் மரங்கள் மட்டும் போதுமா என்று கேட்டால் நிச்சயம் போதாது. அதற்குச் சென்னையை இன்னும் பசுமையாக்க வேண்டும். அந்த முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் ஊரடங்குக் காலத்தில் பள்ளிக்குள்ளே ஓர் அடர்வனத்தை உருவாக்கி அசத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியை தீபா. பள்ளி மாணவர்களைப் பயன்படுத்திச் சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் மரங்களை வளர்த்து ஒரு முன்மாதிரி பெண்ணாக வலம் வருகிறார். ஒரு மாலை வேளையில் பறவைகள் சத்தம் இதமாகக் கேட்டுக்கொண்டிருந்த அடர்வனத்துக்குள் ஆசிரியை தீபாவுடன் காலாற நடந்தபடி பேசினோம்.

அடர்வனத்தில் தீபா
அடர்வனத்தில் தீபா

ஊர்கூடி இழுத்த தேர்

‘‘ஊரடங்குக் காலத்துல வீட்டுல இருந்த செடிகளுக்குத் தண்ணி ஊத்துறப்போ, தெருவுல வாடின மாதிரி இருந்த செடி களுக்கும் மரங்களுக்கும் தண்ணி ஊத்தினேன். இந்த நல்ல பணியில என்னோட கணவர் மோகனும் இணைஞ்சுகிட்டாரு. இதைப் பார்த்துக்கிட்டிருந்த அக்கம்பக்கத்தினரும் எங்ககூட இணைஞ்சாங்க. அப்படியே எங்களோட ஊரடங்கு நாள்களும் நகர, புதுப் புதுச் செடிகளையும் மரக்கன்றுகளையும் நடத் தொடங்கினோம். இப்படிச் செடி நடுறவங்கள்லாம் சேர்ந்து ஒரு குழுவானோம். வாட்ஸ்அப் குழுவுல இன்னைக்கு இந்த ஏரியா... நாளைக்கு அந்த ஏரியான்னு முடிவு பண்ணி மரக்கன்றுகள நடுறது, மரங்களுக்குத் தண்ணி ஊத்துறதுனு ஆனந்தமா பண்ண ஆரம்பிச்சோம்.

அந்தச் சமயத்துலதான் குழுவுல ஒருத்தர், ‘நாம ஏன் அடர்வனம் உருவாக்கக் கூடாது?’ன்னு கேட்டார். ‘அதை நம்ம பள்ளியிலேயே பண்ணலாமே’ன்னு குழுவுல இருந்த முகப்பேர் கிழக்கு அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் ஒப்புதல் கொடுக்க, அப்படி ஆரம்பமானதுதான் அடர்வனப் பயணம்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்


பழைய செடிகளுக்கும் பாதுகாப்பு

எங்களோட நோக்கம் புதுசா கன்று வெச்சு வளர்க்கிறது மட்டுமல்ல. இருக்குற செடி களைக் காய்ஞ்சு போயிடாம பாதுகாக்கத்தான் களத்திலேயே இறங்கினோம். மரக்கன்றை நட்டோம் கடமை முடிஞ்சுடுச்சுனு இல்லாம 1,000 நாள்கள் நம்ம கண்காணிப்புல வெச்சு பார்த்துக்கிட்டா கன்றுகள் வளர்ந்து பெரிய மரங்களாகிடும். வளர்ந்த மரங்களுக்குப் பெரிய அளவுல பாதுகாப்பும் தேவைப்படுறது இல்ல.

நட்ட மரக்கன்றுகளை 1,000 நாள்கள் பராமரிச்சு முடியும்போது புதிதாக மரக் கன்றுகளை நட்டு அதைப் பராமரிக்க நாள்கள ஒதுக்குவோம். இப்படி ஊரடங்கு காலத்துல நாங்க ஆரம்பிச்ச பழக்கம், எங்க வாழ்க்கையோட அங்கமாகவே மாறும்னு நினைக்கவே இல்ல. பெரியவங்க துணை இருந்தாலும்கூட முழுக்க முழுக்க மாணவர்களும் பொறுப்போடவும் ஜாலியாவும் பண்ணினாங்க.

மாணவர்கள் பங்கேற்பு
மாணவர்கள் பங்கேற்பு


பூவரசு, புங்கன், நாவல், புன்னை, வேம்பு, வாகை, நெல்லி, புளியமரம், நாட்டு மூங்கில், மருதாணி, மலைவேம்புனு 48 வகையான மரவகைகள்ல 1,000 மரக்கன்றுகளை 2020, டிசம்பர் மாசத்துல நட்டோம். இந்த அடர்வனம் அமைஞ்சிருக்கிற இடம் 5,000 சதுரஅடி. அடர்வனம் அமைக்குறதுல எங்களுக்கு முன்னனுபவம் இல்லாததால அடர்வனம் தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு முழுசா இறங்கினோம். இதுல பாரம்பர்ய மரக்கன்றுகளா பார்த்துப் பார்த்து நட்டு வச்சோம்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்


ஆர்வமாகக் கலந்துகொண்ட மாணவர்கள்

1,000 மரக்கன்றுகளையும் ஏற்கெனவே இருந்த மரம், செடிகளோடு கலந்து கலந்து வெச்சோம். எதற்கடுத்து எது வைக்கிறோம்னு குழப்பம் வராம இருக்க, பக்காவா வரைபடம் வரைஞ்சு, அதன்படி மரக்கன்றுகள நட்டு வெச்சோம். அடர்வனம் அமைஞ்சிருக்கிற பள்ளியோட மாணவர்கள் மட்டு மல்லாமல் பிற பள்ளி மாணவர்களையும் இந்தப் பணிகள்ல அதிகம் பயன்படுத்திக் கிட்டோம்.

பறவைகளின் சங்கீதம்

இந்த அடர்வனத்தை இயற்கையான காடு போலவே உருவாக்கியிருக்கிறோம். இந்த மரக்கன்றுகள் எல்லாம் மரமாகி காடு போலவே மாறினதால, நிறைய பறவைகள் இங்க வந்து தங்க ஆரம்பிச்சது. கிளி, கருங்குயில், காகம், புறா, ஆந்தை, சிட்டுக்குருவி போன்ற பறவைகளும் வௌவால், முயல், அணில் போன்ற விலங்குகளும் இங்கே அதிகமா இருக்கு. சாயங்காலங்கள்ல இங்கிருக்கும் பறவைகள் எழுப்பும் சத்தத்தைக் கேட்கவே இதமா இருக்கு. நாங்க உருவாக்குன அடர்வனத்தைப் பார்க்க பல பேர் வர்றாங்க. யாருக்கேனும் அடர்வனம் அமைக்க வழிகாட்டுதல் தேவைப்பட்டா, இலவசமாவே வழிகாட்டத் தயாரா இருக்கோம்’’ என்றவர் நிறைவாக,

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்


‘‘சென்னையைச் செழிப்பா மாற்ற எங்களால முடிஞ்ச விஷயத்தைச் செஞ்சிருக்கோம். சமீபத்துல இந்த அடர் வனத்தைப் பார்வையிட்டாரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அதோடு காயத்ரி சாரிட்ட பிள் டிரஸ்ட், சபரி கிரீன் பவுண்டேஷன், எக்ஸ்னோரா போன்ற அமைப்புகள் எங்களுக்கு நிறைய உதவி பண்ணினாங்க” என்றார்.

ஆசிரியை தீபாவிடம் விடைபெற்று வீடு திரும்பிய பின்னும் அடர்வனத்தில் இருந்த பறவைகளின் சத்தம், கீதமாக மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.தொடர்புக்கு, தீபா,

செல்போன்: 98415 44488