Published:Updated:

`மருத்துவ குணம்; தெய்வீக அலங்காரத்தில் முதலிடம். ஆனால்!’ -ஊரடங்கால் கலங்கும் வெட்டிவேர் விவசாயிகள்

செடி வெட்டிவேர்
செடி வெட்டிவேர்

50 சென்ட் நிலத்தில் இதைச் சாகுபடி செய்ய ரூ 25,000 செலவாகும். அதே அளவு லாபமும் கிடைக்கும். அழிந்துவரும் இந்த விவசாயத்தை நாங்கள் மட்டுமே செய்துவருகிறோம். இதைக் காப்பாற்ற, அரசு தரப்பில் எவ்வித உதவியும் செய்வதில்லை.

திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம் என முக்கிய திருத்தலங்களில் உள்ள தெய்வீக திருமேனிகளை அலங்கரிப்பதில் முதலிடம் வகிப்பது வெட்டிவேராகும். கொரோனா ஊரடங்கால் திருக்கோயில்கள் அடைத்துக்கிடப்பதும், போக்குவரத்து முடங்கியிருப்பதும், மிகவும் அரிதான வெட்டிவேர் விவசாயிகளைப் பாதிக்கவைத்திருக்கிறது.

செடி வெட்டிவேர்
செடி வெட்டிவேர்

மற்ற விவசாயங்கள் போல வெட்டிவேர் விவசாயம் இல்லை. விதைகள், காய்கள், பூக்கள் எதுவும் கிடையாது. வெட்டி எடுக்கப்படும் வெட்டிவேர் தழைகளைக்கொண்டு, பதியம் போட்டு மீண்டும் சாகுபடி செய்ய வேண்டும். இது ஒரு பரம்பரைத் தொழிலாகும். நல்ல மண் வளமும் நீர் வளமும் இருந்தால் மட்டுமே இதனைச் சாகுபடி செய்ய இயலும். அந்த வகையில் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே, தில்லை மங்கலத்தில் பரம்பரை பரம்பரையாக விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் விவசாயிகள் சிலர் வெட்டிவேர் சாகுபடி செய்துவருகிறார்கள்.

இதுபற்றி தில்லைமங்கலத்தைச் சேர்ந்த வெட்டிவேர் விவசாயி பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "பல தலைமுறைகளாக வெட்டிவேர் சாகுபடி செய்துவருகிறோம். வெட்டிவேர் தழையைப் பதியம் போட்டு, நடவுசெய்த 90 நாள்களில் அறுவடை செய்யலாம். நடவுசெய்த நாள் முதல் தினமும் தண்ணீர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நடவுசெய்த 20 - ம் நாளில், கடலைப் புண்ணாக்கை தூளாக்கி உரமாக வைப்போம். மீண்டும் அதுபோல் 40 - ம் நாளில் உரமிடுவோம்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

தழைகளில் பூச்சி தென்பட்டால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவோம். பெரும்பாலும் தேவைப்படாது. இத்தொழிலை அறிந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும். பெரும்பாலும் குனிந்தபடியே வேலை செய்யவேண்டி இருப்பதால், இடுப்பு வலி தொந்தரவுகள் அதிகமாக ஏற்படும். தாத்தா, அப்பா இவர்களுக்குப் பிறகு இன்று நான் இத்தொழிலில் இருக்கிறேன். ஆனால், நாளை என் மகன்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை.

வெட்டிவேர் சாகுபடி செய்யும் இடம் கோயில் போன்றதாகும். மது, மாது, சாவு தீட்டு போன்றவைகளுடன் வருபவர்கள் ஒரு செடியைத் தொட்டாலும் பட்டுப்போய்விடும். கோயிலுக்குச் செல்வதைப் போலவே வெட்டிவேர் சாகுபடி செய்யும் கொல்லைக்கும் செல்ல வேண்டும்.

செடி வெட்டிவேர்
செடி வெட்டிவேர்

வெட்டிவேரை வாங்கி, பல இடங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஒருவர் மட்டும் ஏஜென்ட் போல இருக்கிறார். நாங்களெல்லாம் நேரடியாகவே சென்னை, கேரளா, முக்கியமாக சிதம்பரம் கோயில்களுக்கு விற்பனை செய்திடுவோம். ஹேர்பல் பொருள்கள், ஊதுபத்தி , சில நாட்டு மருந்துகள் செய்வதற்காகவும் வெட்டிவேரை தேடிவந்து வாங்கிச் செல்கிறார்கள்.

50 சென்ட் நிலத்தில் இதனைச் சாகுபடி செய்ய, ரூ 25,000 செலவாகும். அதே அளவு லாபமும் கிடைக்கும். அழிந்துவரும் இந்த விவசாயத்தை நாங்கள் மட்டுமே செய்துவருகிறோம். இதனைக் காப்பாற்ற அரசு தரப்பில் எவ்வித உதவியும் செய்வதில்லை. குறிப்பாக, எங்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது எங்களுக்கு வருத்தமே. இப்போது அறுவடை காலம். கொரோனா ஊரடங்கால் அறுவடை செய்த வெட்டிவேரை விற்பனை செய்ய முடியாமல் நாங்களும் முடங்கி இருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு