Published:Updated:

`அது மத்திய அரசின் திட்டம்; மாநில அரசு உதவுகிறது’ - 8 வழிச்சாலை குறித்து முதல்வர் பழனிசாமி

மலர் தூவி திறப்பு
மலர் தூவி திறப்பு ( எம். விஜயகுமார் )

``சென்னையைப் பொறுத்தவரை 87 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். குறுகலான தெருக்கள் உள்ளதால் கொரோனா பரவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுவருகிறோம்” -முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மேட்டூர் அணையிலிருந்து மலர் தூவி டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்துவிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சரோஜா, தங்கமணி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் செம்மலை, வெங்கடாசலம், மனோன்மணி, சித்ரா, சக்திவேல் எனப் பலரும் கலந்துகொண்டார்கள். தண்ணீர் திறந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

தண்ணீர்
தண்ணீர்

``மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். இதற்கு 125 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. 100 டி.எம்.சி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்தும் மீதமுள்ள 25 டி.எம்.சி தண்ணீர் மழை நீர் மற்றும் நிலத்தடி நீர் மூலம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் 5.22 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதில், 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது.

மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 100 ஏக்கரை நிரப்பும் திட்டம் 565 கோடி மதிப்பில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஜனவரி மாத இறுதிக்குள் உபரி நீர் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும். தமிழக அரசைப் பொறுத்தவரை விவசாயிகளுக்குத் தேவையான நீரை வழங்குவதை முதன்மையான பணியாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. நீர் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.

முதல்வர்
முதல்வர்

எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் 796 கி. மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டன. அதற்கு, பல்வேறு இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது இருந்ததை விட, 250 சதவிகிதம் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சாலைத் திட்டங்கள் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது.

எட்டு வழிச் சாலை திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை. மத்திய அரசுக்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற உதவி செய்கிறோம். சென்னையில் இருந்து கொச்சி வரை இந்த சாலை செல்ல உள்ளது. சேலத்திற்கு மட்டுமான திட்டம் இது இல்லை. எதிர்காலத்தில் தொழில் வளம் பெருக, வேலை வாய்ப்பை அதிகரிக்க உள்கட்டமைப்பு முக்கியம்.

மேட்டூர்  அணை
மேட்டூர் அணை

ஊரடங்கு பற்றி தவறான தகவல்கள் பரப்புவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை 87 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். குறுகலான தெருக்கள் உள்ளதால் கொரோனா பரவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டுடன் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தேவை இன்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தனியார் பள்ளிகள் கட்டாயமாகக் கட்டண வசூல் நடப்பது குறித்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பிறகே பள்ளிகள் திறக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு