Published:Updated:

தேங்காய் விலை... விவசாயிகளின் ஆதங்கமும் தீர்வும்..!

விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போராட்டம்

பிரச்னை

தேங்காய் விலை... விவசாயிகளின் ஆதங்கமும் தீர்வும்..!

பிரச்னை

Published:Updated:
விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போராட்டம்

தமிழ்நாட்டில் தேங்காய் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது தென்னை விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு விவசாயி களுக்கு வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் விலையாக, ஒரு தேங்காய்க்கு 15 - 20 ரூபாய் கிடைத்த நிலையில், படிப்படியாக விலை குறைந்து, கடந்த சில மாதங்களாக ஒரு தேங்காய்க்கு 6 - 8 ரூபாய்தான் விலை கிடைக்கிறது. கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு 105 ரூபாய் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்திருந்தும்கூட வெளிச்சந்தையில் 85 ரூபாய்க்குதான் விலை போகிறது. இதனால் விரக்தியடைந்த தென்னை விவசாயிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக் கணக்கான தேங்காய்களைச் சாலையில் உடைத்துப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படும் பகுதி களான கோவை மாவட்டம் பொள்ளாச்சி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இது குறித்து நம்மிடம் மிகுந்த வேதனை யோடு பேசிய தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டுப் பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயி ரவிச்சந்திரன், ‘‘நான் பத்து ஏக்கர்ல தென்னை சாகுபடி செஞ்சு கிட்டு இருக்கேன். கடந்த வருஷம் ஒரு தேங்காய்க்கு 15 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 20 ரூபாய் வரை விலை கிடைச்சது. ஆனா, இப்ப ஒரு காய்க்கு 8 ரூபாய்தான் விலை கிடைக்குது. இது எப்படிக் கட்டுப்படியாகும். ஒரு ஏக்கர் தென்னையில இருந்து வருஷத்துக்கு ஏறக்குறைய 7,000 காய்கள் கிடைக்கும். ஒரு காய் 8 ரூபாய்க்கு விலை போச்சுனா. 56,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். காய்கள் பறிக்குறதுக்கான கூலி, காய்களைப் பொறுக்கி ஒண்ணு சேர்க்குறதுக்கான கூலி 14,000 ரூபாய் போயிடும். உரம், தண்ணி பாய்ச்சுறது, பூச்சி, நோய் கட்டுப்பாடுகள்னு பராமரிப்புக்கு 30,000 ரூபாய் செலவாயிடும். மொத்தம் 44,000 ரூபாய் செலவு போக, ஒரு வருஷத்துக்கு ஏக்கருக்கு 12,000 ரூபாய்தான் லாபம் கிடைக்கும். இதுல எங்களோட உடல் உழைப்பை கணக்குப் பண்ணினா, எதுவுமே மிஞ்சாது’’ எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயி வீரசேனன், ‘‘கஜா புயல்ல, டெல்டா மாவட்டங்கள்ல லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ஞ்சிடுச்சு. அதனால தேங்காய் உற்பத்தி நிச்சயம் குறைஞ்சுதான் போயிருக்கும். அப்படி இருந்தும்கூட, விலை குறைஞ்சது அதிர்ச்சியா இருக்கு. ஆனா, அரசு அதிகாரிகள் விளைச்சல் அதிகரிச்சதுனாலதான் விலை குறைஞ்சிருக் குறதா சொல்றாங்க. அது உண்மையான காரணமா தெரியலை. வெளி மாநிலங்கள்ல இருந்து தமிழ்நாட்டுக்கு தேங்காய் வரத்து அதிகரிச்சதுனாலயும், வெளிநாடுகள்ல இருந்து பாமாயில் அதிகமா இறக்குமதி செய்றதுனாலயும்தான், தமிழ்நாட்டுல இந்த அளவுக்குத் தேங்காய் விலை குறைஞ்சிருக்கு.

தமிழக அரசோட வேளாண் விற்பனை பிரிவு, மத்திய அரசுக்காக இங்க கொப்பரை கொள்முதல் செஞ்சுகிட்டு இருக்கு. இது மூலமா விவசாயிங்க கூடுதல் லாபம் பார்க் கலாம்னு அரசாங்கம் சொல்லுது. ஆனா, நடைமுறையில இது சாத்தியமே இல்லை. தேங்காய்களை உடைச்சு, வெயில்ல காய வச்சு கொப்பரையா மாத்துறதுக்கு நிறைய வேலையாள்கள் தேவைப்படுவாங்க. அதுக்குக் கடுமையான தட்டுப்பாடு. இந்த வேலைகளுக்கு இப்பெல்லாம் ஆள்களே கிடைக்குறதில்லை. அப்படியே கிடைச்சாலும் கூலி கொடுத்து கட்டுப்படியாகாது. தேங்காயை வெயில்ல காய வைக்க டெல்டா மாவட்டங்கள்ல போதுமான களங்கள் கிடையாது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

சீதோஷ்ண நிலையும் ஒத்து வரமாட்டேங்குது. இதனாலதான் கொப்பரை உற்பத்தி செய்றதையே நான் நிறுத்தினேன். தமிழ் நாட்டுல பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி மாதிரியான ஒரு சில பகுதிகள்ல கொப்பரை கொள்முதல் நிலையங்கள் செயல்படுது. திருவையாறில் ஒரு விவசாயி தன்னோட தேங்காய்களைக் கொப்பரையா மாத்தி பட்டுக்கோட்டைக்குக் கொண்டு வரணும்னா, போக்குவரத்துக்கு நிறைய செலவாகும். கொப்பரை கொள்முதலுக்கு அரசு விதிச்சிருக்குற கட்டுப்பாடுகளும் விவசாயி களுக்கு உகந்ததாக இல்லை. இதனால விவசாயிகள் கொப்பரையை வெளிச் சந்தையில குறைவான விலைக்கு விக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுறாங்க. தமிழ்நாட்டுல பெரும்பாலான பகுதிகள்ல இதே நிலைதான்.

இதனாலதான் சொல்றோம்... கொப்பரை உற்பத்தி எல்லா விவசாயிகளுக்கும் சாத்தியம் இல்லை”என்று தெரிவித்தவர், இப்பிரச்னைக்குத் தீர்வு காண சில யோசனைகளையும் முன் வைத்தார்.

‘‘வெளிநாடுகளிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்றதை தவிர்க்கணும். அதுக்குப் பதிலா, தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகப்படுத்தணும். தமிழ்நாட்டுல மாசத்துக்கு 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் விநியோகம் செய்யப்படுது. இதுக்கு மாற்றா, தேங்காய் எண்ணெய் கொடுக்கணும். கேராளவுல சமையலுக்கு முழுக்க முழுக்கத் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துறாங்க. அதனால அவங்களோட உடல் ஆரோக்கியத்துக்கு எந்தக் குறையும் வந்துடல. சொல்லப்போனா, பாமாயிலை விடத் தேங்காய் எண்ணெய்தான் உடம்புக்கு ரொம்ப நல்லது.

சத்துணவு திட்டம், அரசு மருத்துவமனைகள், கல்லூரி விடுதிகள்ல சமைக்கப்படுற உணவுல பாமாயிலுக்குப் பதிலா தேங்காய் எண்ணெய் பயன்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கணும். விவசாயிகள் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யத் தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்தணும்.

வீரசேனன், ரவிச்சந்திரன், நடராஜன்
வீரசேனன், ரவிச்சந்திரன், நடராஜன்

தென்னையில இருந்து நீரா இறக்க தமிழக அரசு அனுமதி கொடுக்கணும். தென்னையில இருந்து 46 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்ய முடியும். இதுக்கான வசதிகளையும் விற்பனை வாய்ப்பு களையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக் கணும். இதையெல்லாம் செஞ்சாதான், தென்னை விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும்’’ எனத் தெரிவித்தார்.

தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது!

தேங்காய் விலை குறித்து, தமிழக வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை இயக்குநர் நடராஜனிடம் பேசியபோது, ‘‘இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்ததால்தான் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலை மிக விரைவில் சரியாகிவிடும். தென்னை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேங்காய்களைக் கொப்பரையாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் விலை கிடைக்கும். தமிழக வேளாண் வணிகம் விற்பனை துறை, கடந்த ஆறு மாதங்களில் 10,190 டன் கொப்பரை கொள்முதல் செய்துள்ளது. தென்னை விவசாயிகளைத் தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது. எப்போதும் துணை நிற்கும்’’ எனத் தெரிவித்தார்.