Published:Updated:

90% மானியம், கடன் கிடைக்கும்... சுயதொழில் வாய்ப்பு தரும் கயிறு வாரியம்!

அதிக ரசாயன உரங்களைப் போட்டு நமது நிலத்தை மலடாக்கி வைத்திருக்கிறோம். அதைக் குறைத்து நீரை சேமித்து வைக்கும் பணிகளில் இந்த தேங்காய் நார்கள் பயன்பட்டு வருகின்றன.

இந்தியத் தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் அளவிலான நார்க்கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் டன் நார்க்கழிவுகள் கிடைக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருள்களால், இது விவசாயத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தென்னை நார்களைப் பயன்படுத்தி கயிறு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், கிராமப்புறப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்துக்கு அடுத்தபடியாகத் தமிழகம் உள்ளது. ஆனாலும், பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) தென்னை நார் (கயிறு) தொழிலின் மேம்பாட்டுக்கு, பல்வேறு மானியங்களையும் பல பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தென்னை நாரிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க வழிகாட்டுவதோடு, பயிற்சி பெற்றவர்களுக்குத் தொழில் தொடங்க மானியமும் பெற்றுத் தருகிறது.

விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து தரும் நோக்கில் 1952-ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது கயிறு வாரியம்.

கயிறு வாரியம்
கயிறு வாரியம்
vikatan

கடந்த ஜூன் 11-ம் தேதி 'கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் இணையதள நேரலைப் பயிற்சியை நடத்தியது பசுமை விகடன். இப்பயிற்சியில் கயிறு வாரியம் வழங்கும் மானியங்கள், திட்டங்கள், கயிறு வாரியத்தின் செயல்பாடுகள், தென்னை நார் கழிவுகளைப் பயன்படுத்தும் யுக்திகள் ஆகியவை இடம்பெற்றன. இப்பயிற்சியில் கயிறு வாரியத்தின் செயலாளர் எம்.குமாரராஜா மற்றும் அதன் உறுப்பினர் எஸ்.கே.கௌதம் மற்றும் ஏசியன் ஆர்கானிக்ஸ் மேலாண்மை இயக்குநர் சித்ரா துரைராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

கயிறு வாரிய செயலாளர் குமாரராஜா பேசும்போது, "கயிறு வாரியம் என்று சொல்லும்போது தென்னை வாரியமும் இருக்கிறது என்று அர்த்தப்படுகிறது. இதில் எங்களின் பணி, தேங்காய் மட்டையை மட்டும் வைத்துத் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிப் பசுமையைக் காப்பதுதான். வாரியம் மூலம் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. 20,000 தொழிற்சாலைகளுக்கு மேல் இருக்கின்றன. வருடத்துக்கு ரூபாய் 10,000 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் ஏற்றுமதி மட்டும் 2,000 கோடிக்கும் மேல் நடைபெறுகிறது. வீணாகத் தூக்கி எறியும் தேங்காய் மட்டையிலிருந்து இவ்வளவு பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பெரும்பாலானோர்க்குத் தெரிவதில்லை. எங்களின் தயாரிப்புகள் எப்போதுமே தண்ணீரை மிச்சப்படுத்தி, மரங்களையும் மண்ணையும் பாதுகாக்கும். இந்தியாவில் கயிறு வாரியத்தின் மண்டல அலுவலகங்கள் மொத்தம் 42 இருக்கின்றன. அதில் ஒன்று தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் இருக்கிறது. மதுரையிலும் சென்னையிலும் விற்பனையகங்கள் இருக்கின்றன. தஞ்சாவூரில் மிகப்பெரிய பயிற்சி மையம் உள்ளது.

Pasumai Vikatan Webinar
Pasumai Vikatan Webinar
vikatan webinar
காங்கிரஸைக் குற்றம்சாட்டிய மோடியின் ஆட்சி... உணவுப்பொருள் வீணாவதில் மாறாத காட்சி!

தேங்காய் நார் உற்பத்தியில் உலகளவில் முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான். தமிழ்நாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம். உதவத் தயாராகவே இருக்கிறோம். நீங்கள் ஒரு குழுவாகச் சேர்ந்தும் இந்தத் தேங்காய் நார் தொழிலை ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பிக்கும்போது 90 சதவிகிதம் வரை மானியமோ, வங்கிக் கடனோ வாங்கிக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம். உதாரணமாக, 500 பேர் சேர்ந்து 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க வேண்டுமெனில் 10 சதவிகித பணம் மட்டுமே நீங்கள் வைத்திருந்தால் போதும், மீத பணம் எங்கள் சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். எங்களின் சார்பில் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதை எங்கள் இணையதளத்தில் காணலாம். தேங்காய் நார்களைப் பயன்படுத்தி தோட்டக்கலை, வீட்டு உபயோகப் பொருள்கள் என 32 பயன்பாடுகளுக்கான பொருள்களைத் தயாரித்து வருகின்றனர்" என்றவர், வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உறுப்பினர் எஸ்.கே.கெளதம் பேசும்போது, "தேங்காய் நார் பொருள்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததில் ஊடகத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கடந்த 5 வருடத்தில் தேங்காய் நார்களைப் பற்றிப் பசுமை விகடனில் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள். அதனால் தேங்காய் நார் பயன்பாடு அதிகமாயிருக்கிறது. தேங்காய் நார், ஒரு பழுப்பு நிற தங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயத்துக்கு 80 சதவிகிதமும் மனிதர்களுக்கு உபயோகப்படும் பொருளாக 20 சதவிகிதமும் தேங்காய் நார் பயன்பட்டு வருகிறது. அதிக ரசாயன உரங்களைப் போட்டு நமது நிலத்தை மலடாக்கி வைத்திருக்கிறோம். அதைக் குறைத்து நீரைச் சேமித்து வைக்கும் பணிகளில் இந்தத் தேங்காய் நார்கள் பயன்பட்டு வருகின்றன. தேங்காய் நார்கள் தொழில் செய்ய நினைப்பவர்கள், கயிறு வாரியத்தில் பயிற்சி எடுங்கள். தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் ஏற்றுமதி பற்றியும் அங்கு தெரிந்துகொள்ளலாம். செடிகளுக்குத் தண்ணீரைச் சேமிக்க, மண்ணில் சத்துகளை நிலை நிறுத்த, இயற்கையைச் சீராக்க தேங்காய் நார் இன்று அவசியமாகிறது. உலக மொத்த தேங்காய் நார் உற்பத்தியில் 60 சதவிகிதம் இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. உலக சந்தையில் தேவை அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. உற்பத்திதான் குறைவாக இருக்கிறது. மாடித்தோட்டத்திலும் தேங்காய் நார்களின் பங்கு இன்று அதிகம்" என்றார்.

Coir Pith
Coir Pith
Coir Board

இறுதியாகப் பேசிய ஏசியன் ஆர்கானிக்ஸ் மேலாண்மை இயக்குநர் சித்ரா துரைராஜ், "தேங்காய் நார் இன்று மாடித்தோட்டங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் காய்கறிகள் பெரும்பாலும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவே இருக்கிறது. இவை எங்கு விளைந்தது, என்ன உரங்கள் போடப்பட்டன உள்ளிட்ட எந்த விபரங்களும் தெரியாது. அதனால், உடல் உபாதைகள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உண்டு. அதற்கு ஒரே தீர்வு வீட்டுக்கு ஒரு காய்கறித் தோட்டம் அமைப்பதே. மாடித்தோட்டத்தில் தேங்காய் நார்கள் மண்ணின் தேவையைக் குறைத்து தளம் அதிக பாரமாவதைத் தடுக்கிறது. தண்ணீரை அதிகமாக உறிஞ்சிக்கொண்டு சேமித்து வைத்துப் பயன்படுத்துவதால் தண்ணீர் தேவை குறைகிறது. இதுபோக வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்களிலும் தேங்காய் நார் பொருள்களின் தேவை அதிகமாகியிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட தொழில் வாய்ப்புகளும் அதிகம். நானும் கயிறு வாரியத்தில் பயிற்சி எடுத்துத் தேங்காய் நார் உற்பத்தி தொழிலைச் செய்து வருகிறேன். அதிகமான அளவில் மாடித்தோட்டம் அமைப்பதற்காகத் தேங்காய் நார்களை விற்பனை செய்து வருகிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு