Published:Updated:

விவசாயத்துக்கு ஆப்பு வைக்கும் தென்னைநார் தொழிற்சாலைகள்..!

தென்னைநார் கழிவு சேமிப்புக் கிடங்கு
பிரீமியம் ஸ்டோரி
News
தென்னைநார் கழிவு சேமிப்புக் கிடங்கு ( விகடன் )

பிரச்னை

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, கள்ளிப்பட்டி பகுதிகளில் சுமார் 2,000 தென்னை நார் தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. ‘பொள்ளாச்சி இன்னொரு திருப்பூராக மாறிவிடக் கூடாது’ எனத் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

நிலத்தடி நீர் கெட்டுப்போச்சு

இது தொடர்பாகப் பேசிய தென்னை நார் தொழிற்சாலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காகப் போராடி வரும் குமார்ராஜ், “காயர்பித்தை (தென்னை நார் கழிவு உரம்) விவசாய நிலத்தில அப்படியே கொட்டி, காய வெச்சு, வருஷத்துக்கு மூணு தடவை அதைக் கழுவி விடுவாங்க. அந்தத் கழிவு தண்ணி, அங்கங்க தேங்கி நின்னு நிலத்துக்குள்ள போயிடுது. அதனால, நிலத்தடி நீர் கெட்டுப்போச்சு. தண்ணியில ‘டி.டி.எஸ்’ அளவு 10,000 வரைக்கும் போயிடுச்சு. ‘இந்தத் தண்ணி கால்நடை களுக்கோ, விவசாயத்துக்கோ உகந்தது இல்லை’னு பல ஆய்வு முடிவுகள் சொல்லுது.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்துல தொழிற்சாலைகள், நிலத்தடி நீரை எடுக்கத் தடை இருக்கு. தடையை மீறி, சட்டவிரோதமா குழாய் அமைச்சு தண்ணியை எடுக்குறாங்க. பொள்ளாச்சி பகுதியில மட்டும் சுமார் 25,000 ஏக்கர் நிலத்தில, காயர் பித்தைக் கொட்டி வச்சிருக்காங்க. தொழிற்சாலை ஒருபக்கம் இருக்கும். அங்கங்க கிடைக்குற நிலத்தில, ‘காயர்பித்’தை அப்படியே கொட்டிடுறாங்க.

விவசாய நிலங்களில் தென்னைநார் கழிவு
விவசாய நிலங்களில் தென்னைநார் கழிவு

அதை அப்பப்ப கழுவி, வெயில்ல காய வைப்பாங்க. அப்ப அதுல இருக்கத் தூசி, துகள் பக்கத்துல இருக்க வீடு, கிணறு, பி.ஏ.பி கால்வாய்ல விழும். சில நேரங்கள்ல உணவு பொருள்கள்லயும் விழுறதால, நிம்மதியா சாப்பிடக்கூட முடியாது. அதன் தொடர்ச்சியா அடிக்கடி சளிபிடிக்குறது, மூச்சுத்திணறல் மாதிரியான பிரச்னை வருது” என்றார்.

வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறம்

“தென்னை நார் தொழிற்சாலைகள் பிரச்னை தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப் பட்டது. அதன் விளைவாக, தென்னை நார் தொழிற்சாலையை வெள்ளை நிறப்பிரிவில் இருந்து, ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியுள்ளது பசுமை தீர்ப்பாயம். ‘காயர்பித்’தை சிமென்ட் தரையில்தான் கொட்ட வேண்டும். அருகிலேயே ஒரு தண்ணீர்த்தொட்டி வைத்து, அதைத்தான் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய தண்ணீரைத்தான், சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்” என்கிறது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள். ஆனால், அவற்றைப் பெரும்பாலான தொழிற்சாலைகள் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் வேதனை.

தென்னைநார் கழிவு சேமிப்புக் கிடங்கு
தென்னைநார் கழிவு சேமிப்புக் கிடங்கு

இயற்கை முறையில் தென்னை விவசாயம் செய்து வரும் சுமதி, “தேங்காய் மட்டையிலிருந்து 30 சதவிகித நார் எடுப்பாங்க. மீதமுள்ள 60 சதவிகித துகளைத்தான், ‘காயர்பித்’னு சொல்றாங்க. அதை நல்லா கழுவி, கட்டியாக்கி ஏற்றுமதி செய்றாங்க. அதைக் கழுவ அதிகமான தண்ணி தேவை. ‘காயர்பித்’ 8 மடங்கு அதிகமா தண்ணியை உறிஞ்சு வெச்சுக்கும். ஒரு கிலோ ‘பித்’ல 30 லிட்டர் தண்ணி இருக்கும். விவசாயத்துக்குப் பயன்படுத்துற தண்ணிதான் இதுக்கும் போகுது. இது சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து. இந்தியாவுல இருக்கிற தென்னை நார் தொழிற்சாலைகள்ல 50 சதவிகித தொழிற் சாலைகள் பொள்ளாச்சியிலதான் இருக்கு. இந்தத் தொழிலை செய்யவே வேண்டாம்னு சொல்லல. விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாம, விதிகளைப் பின்பற்றித் தொழில் செய்யுங்கனுதான் சொல்றோம்” என்றார்.

தண்டபாணி, சுமதி, குமார்ராஜ், பரமசிவம்
தண்டபாணி, சுமதி, குமார்ராஜ், பரமசிவம்

திருடப்படும் பாசன நீர்

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம், திருமூர்த்தி நீர்த்தேக்கம் திட்டக்குழு தலைவரான ‘மெடிக்கல்’ பரமசிவம், “பரம்பிக்குளம் பிரதான கால்வாய், திருமூர்த்தி அணையிலிருந்து வெள்ளகோவில்வரைக்கும் போகுது. இந்தக் கால்வாயில ரெண்டு கரைகள்லயும் கொஞ்சம் நிலத்தை விலைக்கு வாங்கி, கிணறு வெட்டி, குழாய் அமைச்சு தண்ணியைத் திருட்டுத்தனமா தொழிற் சாலைக்கு எடுத்துகிட்டுப் போறாங்க. இதனால கடைமடை வரைக்கும் தண்ணி போறதில்ல. மொத்தம் போகுற 1,000 கன அடி தண்ணியில கிட்டத்தட்ட 200 கனஅடி தண்ணீரை அவர்கள் எடுத்துடுறாங்க. அந்த 200 கனஅடி தண்ணி மூலமா பாசனம் பெறும் 20,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுது” என்றார்.

அரசு விசாரணை கமிஷன் அமைக்கணும்

தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வரும் தண்டபாணி, “நான் கடந்த 5 வருஷமா தென்னை நார் தொழிற்சாலை நடத்திகிட்டு வர்றேன். இந்தத் தொழிலை நம்பி பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் ஒன்றரை லட்சம் பேர் இருக்காங்க. துகள்கள் காத்துல பறந்து மாசு ஏற்படுத்துறதாச் சொல்றாங்க. துகள்கள் பறக்குறதை ஏத்துக்கிறோம். இனிமே, துகள்கள் வெளிய போகாம தொழிற்சாலையைச் சுற்றியும் தடுப்பு அமைச்சுட்டு வர்றோம். நான் எந்த ரசாயனத்தையும் கலக்கிறதில்ல. எல்லாத் தொழிலிலும் நன்மை, தீமை இருக்கத்தான் செய்யும். எங்கள் வாதத்தைக் கேட்காம, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆரஞ்சு நிற பிரிவுக்கு மாத்தி உத்தரவைப் போட்டுருக்கு. அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைச்சு, ஆய்வு பண்ணி, இதைத் தெளிவுப்படுத்தணும். எங்க தொழிலுக்கு மூலப்பொருளான தேங்காய் மட்டையை விவசாயிள்தான் கொடுக்குறாங்க. இந்தத் தொழில்மூலம் ஒரு மட்டை 3 ரூபாய்க்கு விற்குது. இந்தப் பிரச்னையால மட்டை எடுக்குறதை நிறுத்திட்டோம். அதனால பாதிக்கப்படுறது விவசாயிகள்தான்” என்றார்.

கேரளாவில் தடை விதிக்கப்பட்ட தொழில்

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமாறன், “நீர், காற்று மாசுவைப் பொறுத்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பெண் வழங்கும். அதனடிப்படையில் தான் இந்தத் தொழிற்சாலைகள் நிறங்களுக்குக் கீழ் வரையறுக்கப்படும். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாயத் தீர்ப்பின்படி, இதன் நிறம் ஆரஞ்சு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் இது சிவப்பு நிறப்பிரிவில் உள்ளது. கேரளாவைப் போலவே, தற்போது தமிழகத் துக்கும் பல விதிமுறைகள் விதித்துள்ளனர். விதிமுறைகளைப் பின்பற்றாத ஒரு சில நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது” என்றார்.

தென்னைநார் கழிவுகளால் நீர்நிலை பாதிப்பு
தென்னைநார் கழிவுகளால் நீர்நிலை பாதிப்பு


பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

இந்தப் பிரச்னை யைத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். “சுற்றுச்சூழலை மாசு படாமல், நீர் ஆதாரத்தைக் காப்பதற்காகத்தான், வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியிருக்கிறோம். இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. எந்த ஒரு தொழிலையும் முடக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்காது. அதேநேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விதிமுறைகள் விதிக்கப்படும். இது ஒரு நீண்ட காலச் செயல்முறை. கடந்த ஆட்சியில் இதைக் கண்டு கொள்ளவில்லை. படிப்படியாகச் சுற்றுச்சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஏ.பி போன்ற நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் எடுப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.

சண்முக சுந்தரம், மெய்யநாதன்
சண்முக சுந்தரம், மெய்யநாதன்

விவசாயத்துக்குத்தான் முன்னுரிமை

இதுகுறித்துப் பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப் பினரான சண்முக சுந்தரத்திடம் (தி.மு.க) பேசினோம். “இரண்டு தரப்பு கோரிக்கை களையும் கேட்டுள்ளோம். தென்னை நார் தொழிற் சாலைகளுக்குச் சில விதிகள் கொடுக்கப்படும்.

எனக்குத் தெரிந்தவரை, ஆரஞ்சு நிலைப்பாட்டிலிருந்து மாற்றுவதற்கான வாய்ப்புக் குறைவு. விவசாயத்துக்குதான் முன்னுரிமை வழங்க வேண்டும். இதுதான் என் கருத்து. பொள்ளாச்சியை, திருப்பூராக மாற்ற நான் எப்போதும் ஆதரவளிக்க மாட்டேன்” என்றார்.